புதன், 9 ஜூலை, 2014

கிற்ரார் பாடகன்

-தமயந்தி- (1994 ஜனவரி) 



அவனுக்குச் சொந்தமானதெல்லாம் கம்பிகள் தொய்ந்து போன ஒரு பழைய கிற்ரார், மரக்குவளை ஒன்று, அவனது உடலோடு உரசிக் கொண்டிருக்கும் மரக்கட்டைத் துண்டுகளைப் பொத்தானாய்ப் பொருத்திக் கொண்ட மண்ணிற ஒட்டுக்கள் போட்ட இத்துப் போன நீளக் குளிருடை, அதே வயதை ஒத்த ராணுவக் காற்சட்டை, மழை, வெயில், பனியின் தாக்குதல்களிலிருந்து அவனது தலையை விறைத்த வீரனைப் போல் எப்போதும் பாதுகாத்துக் கொண்டு அவனது தலை மேல் குந்தியிருக்கும் வெள்ளைக் கரடியின் தோலினாலான தொப்பி.

நகரத்தின் தோளிலிருந்து பிரியும் குறும்பாதை புனித யோவான் சாலையைச் சென்றடையும். யோவான் சாலையின் தொப்பிளிலிருந்து தொழிலாளர் தெரு பிரிகிறது. தொழிலாளர் தெருவின் தொடக்கத்தில் இருந்து அதன் இரு கரைகளையும் நிறைத்து நெருசலாய் அடுக்கப்பட்ட தொழிற்சாலைகள். தொழிலாளர் தெருவின் நெஞ்சுக்கு
அண்மையில் 'பேத்தர்' இரும்பு ஆலை. அந்த இரும்பு ஆலையின் பிடரியிற் தொடங்கி முதுகு வழியாக குதிக்கால் வரைசென்று, தொழிலாளர் குடியிருப்புக்குள் மெலிந்து செல்லும் சிறு தெரு ''கருங்கற் தெரு'' அந்தக் கருங்கற் தெருவின் முகத்தினருகே முதிர்ந்த சிவப்பு அப்பிள் மரம்.
அவன்  பாடுகிறான், தொய்ந்து போன கிற்ரார் கம்பிகளை அவனது விரல்கள் வருடும் போது தொய்வேதுமற்ற இனிமையான இசை விதைக்கப் படுகிறது. இசையின் இடையிடையே அவன் பாடுவான் சில வரிகளை. தான் நினைப்பவை எல்லாவற்றையும் ஏதோவோர் இராகமமைத்துப் பாடுவான்.

''நேசமுள்ளோரே வாருங்கள்
இந்த வீதிகள் நம் முன்னோர்கள்
நமக்காய் விரித்தவை.
சேர்ந்து நடப்போம் வாருங்கள்'' 


அவன் மீட்டும் இசையும் அவனது பாடலும் அந்தத் தெருவின் இடுக்குகளெல்லாம் நிரவிக் கிடந்தன.

''இந்த மரம் நமது மரம்,
பசித்திருப்போரே வாருங்கள்,
பழங்களைச் சமமாய்ப் புசிப்போம்'' 


முதிர்ந்த அந்த அப்பிள் மரத்தின் இலைகள், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், பக்கவேர், ஆணிவேர் யாவற்றிலும் படிந்து கிடந்தது அவனது பாடல்.

இந்த ஆலை மதில்களில் நான் நுகர்கிறேன்
என் தந்தையின், தாயின் சுற்றத்தின்,
உறவுகளின் வியர்வையின் வாசத்தை
உழைப்பின் உறுதியை. 


அந்த தெருவின் ஆலைச் சுவர்களெல்லாம் அவனது பாடலை ரசித்த படி எழுந்து நின்றன.
                                                        

''நண்பனே! நண்பனே!!
உன் தசையை நீயேன் புண்ணெனச் செய்கிறய்?
உன் குருதியை வநீயேன் விரயமாய் சிந்துகிறாய்?
யந்திரங்கள் புத்தியற்றவை.
அதனால் தான் அது உயிர்களின் பெறுமதியை
அறிய மறுக்கிறது. நான் போரைப் பற்றிப் பாடுகிறேன்'' 


அவனது பாடல் உயரத்திற் பறந்து முகில்களை உருட்டி விளையாடின. அவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். சிரிப்பின்றி அவனைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் புன்னகைதான். பாடும் போதும், ரொட்டித்துண்டுகளைக் கடிக்கும் போதும், தனது மரக்குவளையில் அந்தத் தெருவாசிகள் யாராவது கொடுத்த தேநீரைப் பருகும்போதும்.... சிரித்தான். சிரித்துக் கொண்டே காணப்பட்டான் கணமெலாம். பூமியின் நெஞ்சை மிதித்து ஊர்ந்து செல்லும் எல்லா மனிதர்களும் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு கவலையையேனும் சுமக்க முடியாமற் சுமந்த படி நடக்கையில் இவனால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்தபடி இருக்க எப்படி முடிகிறது? அந்த தெருவாசிகளின் முடிவுப் பிரகாரம் அவனொரு பைத்தியக்காரக் கிழவன். ஆசைகள் மேல் ஆசைகளை அடுக்காய் அடுக்கி சுமக்க முடியாமல் வீங்கி முட்டித் திரியும் மனிதர்களுள் ஒருவன் மகிழ்ச்சியாக, எப்பொழுதும் சிரித்தபடி, பாராபட்சமற்று எல்லா மனிதர்களுக்கும் மரியாதை தெருவிக்கும் ஒரு மனித நேயமுள்ளவனாகக் காணப்பட்டால் அவன் பைத்தியம். அப்படியானால் இப்போது இந்த பூமிக்குத் தேவை நிறையவே பைத்தியங்களல்லவா?

எனக்கொரு அப்பு இருந்தார். அப்புவின் தோற்றமும் காக்கி அரைக்காற்சட்டை, கோட்டுமாய்த்தான் எப்போதும் காணப்படுவார். அறுபத்தெட்டாம் ஆண்டு கொழும்பு கப்பற் துறைமுகத்தில் பணி செய்துவந்த ''புக்கிங்க் கிளார்க்'' வேலையை விட்டு விட்டு ஓடி வந்தார். எப்போதும் பெருமையடிப்பார் தன் உத்தியோகம் பற்றி. வெள்ளைக் காரனின் கப்பல் நங்கூரம் கடலடியில் பாறையில் சிக்குப் பட்டதால் வெள்ளையன் செய்வதறியாது தவித்த போது, துணிந்து தானே கடலில் பாய்ந்து நங்கூரத்தைப் பாறையில் இருந்து
மீட்டதாகவும், திகைப்படைந்த வெள்ளையன் தன்னைக் கட்டியணைத்து ஆனந்தக் கூத்தாடினானென்றும், விலையுயர்ந்த சீமைச்சாராயமும் பணமும் தந்தபோது சாரயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பணத்தை வாங்க மறுத்தததாகவும்..... இப்படி நிறையத் தனது சாகசங்களையும், சாதனைகளையும் எனக்கு வெட்டியடிப்பார்.

''எல்லாம் புழுகடா மகனே'' என்று ஆச்சி எனக்கு மெதுவாகச் சொல்வாள். ''உந்தப் போக்கத்தவள் நான் சொல்றதில எதைத்தான் நம்பினவள்? நான் பொய்யெண்டால் நீயே பார்...'' என்று தனது பரம்பரை முதிசமான கொப்பர்ப் பெட்டியிலிருந்து ஒரு பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்றை எடுத்துக் காண்பிப்பார். அந்தப் படத்தில் அப்பு ஒரு வெள்ளையனுடன் கை கோர்த்தபடி கம்பீரமாய் நிற்பார்.

அப்புவும் பாடுவார், ''சற்குணபோதன் சரணமிதே......, மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் என்ன மா முனிவரே அறியேன். யாருமறியாமல் மறைவாய்...''

அப்பு தியாகராஜபாகவதரின் ரசிகனாய் இருந்திருக்க வேண்டும். அப்பு பாடுவதெல்லாம் பகாவதரின் பாடல்கள்தான். குடிக்காமல் பாட மாட்டார். அவர் பாடுவதென்றால் குடிக்க வேண்டும். இரண்டு போத்தல் கள்ளுத்தான் குடிப்பார். கள்ளுக் கொட்டிலுக்குப் போக மாட்டார். ஆச்சி அல்லது நான் சவேரிமுத்துக் கிழவனின் கொட்டிலில் வாங்கி வர வேண்டும். கள்ளுக் குடிப்பதென்றல் சும்மா ஆகாது. நண்டுச் சம்பல் வேண்டும். கடற்கரைக்குத் தானே சென்று சினை நண்டுகளாய் வாங்கி வருவார். துவரஞ் சுள்ளிகளை வீட்டுக்குக் கோடிப்புறத்தில் அடுக்கி நண்டுகளைச்சுடுவார். நண்டுச்சதையை ஆய்ந்தெடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு வெங்காயம், பிஞ்சுமிளகாயுடன் உப்பு, தேசிக்காய் ஆகியவற்றைக் கலந்து குழைத்து ஒரு அருமையான சம்பல் செய்வார். கள்ளும் நண்டுச் சம்பலும் வயிற்றுக்குள் சமா வைக்கத் தொடங்கியதும் பூமியில் மானிட ஜென்மம்மடைந்ததைப் பற்றி முதலில் தொடங்குவார்.

எப்போதும் அப்பு விறாந்தையில் சாக்குக் கட்டிலில்தான் படுப்பார். பக்கத்தில் சிரட்டையில் அரைவாசி மண்ணிட்டு வைக்க வேண்டும் அவர் துப்புவதற்கு. ''தன்ர எச்சிலத் தானே விழுங்கத் தெரியாத புறப்பு'' என்று ஆச்சி அடிக்கடி நச்சரிப்பார். வாழ் நாளெல்லாம் ஆச்சியைக் கஷ்ரப்படுத்திய அந்த நண்டுச் சம்பல் பாடகனும் போய்ச் சேர்ந்தான் ஒரு நாள். காலம் முழுக்கப் புறுபுறுத்தபடி சேவைகள் செய்த ஆச்சி கணவன் கண்களை மூடியபோதுதான் தன் உள்ளத்துள் அடங்கிக் கிடந்த நேசங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதாள். அப்புவின் பாடல்களை அப்போது என்னால் ரசிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவற்றை இப்போது நினைத்து ரசிக்க முடிகிறது. இந்த கிற்ரார் கிழவனின் பாடல்காளை நான் தினமும் ரசிக்கிறேன் இப்போது. பல சமயங்களில் எனை மறந்தும் ரசித்திருக்கிறேன். .
                

கருங்கற் தெருவை அண்மித்த ஒரு குறும் சந்திற் தான் எனது குடியிருப்பு. எனது எல்லாமுமான ஒரு சிறிய நிலவறை. அதிகாலையில் நான் வேலைக்குச் செல்லும் போதும் மாலையில் வேலை முடித்து அறை திரும்பும் போதும் அவனது பாடலை நுகரத் தவறுவதில்லை. என்னைக் கண்டதும் தனது பாடலை நிறுத்தி வணக்கம் சொல்வான். பதிலுக்கு நானும் சொல்வேன் . மீண்டும் பாடத் தொடங்குவான். சில வேளைகளில் நான் தாமதமாக வேலைக்குப் போகும் போது ''இரவு தூங்கத் தாமதமா நண்பா?'' என்று கேட்பான். பதில் கூறிவிட்டு நடப்பேன். மேலதிக வேலை சில செய்து விட்டு  அறை திரும்பும் சமயம் ''குறைந்த கூலியில் உன்னை உறிஞ்சி விட்டார்கள் போலும்... களைத்திருக்கிறாய் சென்று ஓய்வெடு நண்பா'' மிக கரிசனையோடு செல்வான்.

நத்தார் தினத்துக்கு இரு தினங்களுக்கு முன் அவனைக் கடந்து செல்லும் போது தன்னருகில் வரும்படி அழைத்தான். சென்றேன் .
''நத்தார் தினத்தைக் கொண்டாட நீ வேறு எங்காவது செல்கிறயா நண்பா?'' கேட்டான்.
''இல்லை எனது அறையில் தான்'' சொன்னேன்.
''தனியாகவா?'' மீண்டும் அவனது வினா.
.''ஆமாம்.''  பதில் சொன்னேன். 
'எனது விண்ணப்பமொன்று உன்னிடம்....'' சிரித்தபடியே தயங்கினான்.
''சொல்'' என்றேன். 
''இந்த நத்தார் நான் உன்னோடு கொண்டாட விருப்பமாய் இருக்கிறேன். உனது அறையில். உனக்கு சம்மதமா?.'' புருவங்களை உயர்த்தி, புன்னகைத்தபடியே கேட்டான்.
''சம்மதம் நண்பா, சந்தோசமாக கொண்டாடுவோம், நீ என்னோடு கொண்டாடப் பிரியமாயிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' எனது விருப்பையும் தெருவித்துக் கொண்டேன் அவனிடம். ஏதோவொரு ராகத்தை உச்சஸ்தாயியில் இழுத்தபடி தன் விரல்களைக் கிற்ரார் நரம்புகளில் மேய விட்டான். அவன் வாசிக்கும் இராகம் என்னவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவன் தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தப் பிரசவிக்கும் ஓர் ஆனந்தமான இராகம் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

மார்கழி-24 மாலை.
பூமியை இருள் தின்ன முயற்சித்துக் கொண்டிருந்தது. ''இருட்டிற்குப் பலி கொடேன்'' என சங்கற்பம் பூண்டது போல் பூமியிற் பரந்து கிடந்த பனிப் போர்வை சிறிதளவு நிலா வெளிச்சத்தை மிகைப்படுத்திக் கொண்டிருந்தது.

எனது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. கிற்ராருடன் நின்றான் கிழவன். வரவேற்றேன் உள்ளே. புன்னகையுடன் நத்தார் வாழ்த்தைத் தெருவித்தபடி உள்ளே வந்தான். ''நண்பனே இவனால் முடிந்தது இதுதான். இதனை ஏற்றுக் கொள்வாயா?'' பொட்டலமொன்றை நீட்டினான். பெற்றுப் பிரித்தேன். அப்பிள் பழங்களும் ஒரு ஓவியமும் இருந்தது. நன்றியைத் தெருவித்தேன் அவனுக்கு. ஓவியத்தில் ஒரு தெருப்பாடகனும், வழிப்போக்கனொருவனும். வழிப்போக்கன் தெருப் பாடகன் இசையில் மயங்கி நிற்பது போல் ஓவியம் சித்திரிக்கப்பட்டிருந்தது. உயரத்தில் நீல வானின் வெண் முகிற் திரளை நீவியபடி பறவைக் கூட்டம் சிறகுகளை விரித்துக் காட்சி தந்தது.

''நீ வரைந்தாயா?'' கேட்டேனவனை.
''ஆமாம் அழகாயிருக்கிறதா?'' சிரித்தபடியே கேட்டானென்னை.
''மிக அழகாயிருக்கிறது. நீ ஓவியமும் வரைவாயா?'' எனது கேள்வி அவனைச்  சேரமுன்னம்.....
''ஏதாவது கிறுக்குவேன். அதனை ஓவியமென நீ ஏற்றுக் கொண்டால் மிகவும் மகிழ்வேன். நான் நினைத்ததை வரைய முனைந்தேன். ஆனால் நினைத்தது முழுவதுமாய் வரவில்லை. இந்த ஓவியத்தை நீ விளங்கிக் கொண்டால் அது எனது கிறுக்கலின் வெற்றி. விளங்கிக் கொள்ளவில்லையெனில்.... வருந்துகிறேன் நண்பா'' அவன் கருதுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''உனது இசையை நான் சுவைத்துக் கொண்டு நிற்கிறேன்......'' நான் கூறி முடிப்பதற்குள் தனது கரங்களிரண்டையும் மேலே உயர்த்தி உரத்த சத்தமாய் ஆனந்த கூச்சலிட்டான். ''நண்பா! மிகவும் நன்றி உனக்கு. மிக்க சந்தோசம் எனக்கு. ஆமாம். நான் மனித நேயத்தைப் பற்றி எனக்குத் தெரிந்தபடி பாடுகிறேன். நீ அதனை விருப்போடு நுகர்கிறாய். நமக்குள் நட்பு வலுவடைகிறது. அந்த நட்பின் உன்னதங்கள் தடைகள் போல் திரண்டு வரும் முகிற்திரளை சிறகுகளால் உடைத்தெறிந்தபடி உயரத்தில் பறவைக் கூட்டமாய்ப் பறக்கிறது . அவை சுதந்திரமான பறவைகள். ஆமாம் நண்பனே. நமது நட்பின் உன்னதங்கள் சுதந்திரமானவை'' அவனது முகத்தில் ஆனந்தம் அதீதமாய்ப் பரவியிருந்தது.

நான் எனது தேசத்தை விட்டுத் தப்பியோடி வருவதற்கு முன் அலைந்து திரிந்து எடுத்த புகைப்படங்களில் சில என்னோடு அகதியாக இங்கு வந்தன. அவற்றிலொன்றை நத்தார் பரிசாக அவனுக்குக் கொடுத்தேன். அவனது ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அவனது விழிகள் கசிந்தன. என்னை இறுக்கத் தழுவிக் கன்னங்களிரண்டிலும் முத்தமிட்டுத் தனது சினேகத்தைத் தெருவித்தான். நான் கொடுத்த புகைப்படத்தை நீண்ட நேரமாக வைத்து ரசித்தான். ''அற்புதம்'' என்றான் பல தடவைகள். குருநகர்த் துறைமுகத்தில் நின்று மேற்குப் பக்கமாய் எடுத்த படமது. பொழுது மறைந்த சற்று நேரம். இயற்கை ஓவியம் வரைந்தது போல் சிவப்பு மஞ்சளுடன் பல வர்ணங்கள் கலந்த மேற்கு வானம். அந்த வானத்தின் கீழ் அமைதியாகக் கிடக்கும் கடற்பரப்பில் சிறு தோணியொன்றை மரக்கோலால் ஊன்றிச் செல்கிறார்கள் இரண்டு சாயங்கால வீச்சுத்தொழில் மீனவர்கள். பல நாட்களில் நங்கூரம் தூக்கப்படாத யந்திரப் படகுகள் துறைமுகங்களைத் தாண்டிக் கிடக்கின்றன ஏதோவோர் அமைதியைக் காத்தபடி. அமைதியைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல் தூரத்தில் மங்கலாய் ஒரு பறவை. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் யாழ்ப்பாணத்தோடு தீவுப்பகுதியை இணைக்கும் பண்ணை வீதி. வானத்தின் வண்ணங்களையும், பறவையையும், மீனவர் படகுகளையும், களங்கண்டி வலைகளையும், பண்ணை வீதியையும் தானுமொரு பிரதியெடுத்து இரண்டு காட்சிகளய்க் காட்டுகிறது கடல் நீர். ஒரே படத்தை இரு பிரதிகளெடுத்து மேலும் கீழும் ஒட்டியது போல் தன்னகத்தே பிம்பம் விழுத்திக் கிடக்கிறது கடல்.

''நண்பா! இத்தனை எழில் நிறைந்த தேசமா உனது தேசம்? வருந்துகிறேன் நான். உனது இழப்பு ஈடு செய்ய முடியாது. நீ மீளவும் பெற வேண்டும் இழந்தவை அனைத்தையும். அதனை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உனது தேசம் மீண்டுமுனக்குக் கிடைக்குமென்று நான் பூரணமாய் நம்புகிறேன். தளராதே. நம்பிக்கையோடிரு.'' நம்பிக்கையூட்டும் தோரணையில் அவன் எனக்குச்சொன்னான்.

என்னால் எடுக்கப் பட்ட ஏனைய புகைப்படங்களையும் அவனுக்குக் காண்பித்தேன். ஒவ்வொன்றையும் அணுவணுவாய் அனுபவித்து ரசித்தான். சில படுகொலைப் படங்களை அவன் பார்க்க நேர்ந்த போது அவனது விழிகள் சிவந்தன. கோபத்தால் முகம் இறுக்கமானது. இப்போதுதான் நான் அவனைஸ் சிரிப்பின்றிப் பார்க்கிறேன்.

''இது கொடுமை கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமை புரிந்தோரை மன்னிக்க முடியாது. இதனைச் செய்தோர் மனித விரோதிகள்.'' எனக் கோபாவேசமாகக் கத்தினான். அவனது கிற்ரார் அழுதது. கோபித்தது எனக்குத் தெரிய முதற் தடவையாக. புகைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்து முடிந்ததும்  ''நண்பா! உனது புகைப்படங்கள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய படங்கள் அதிகமாய் இயற்கையை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. ஏன் மனிதர்களின் அவலங்களை, உழைப்பை, இன்பதுன்பங்களை உன்னால் பதிவு செய்ய முடியாமற் போனது. மனிதர்கள் மீது உனக்கு அப்படி என்னதான் கோபம்? உனது நிழற் படக் கண்ணை மனிதர்கள் பக்கமும் திருப்பு. என்றான். அந்த இரவு நத்தார் தினத்தை நானும் அவனுமாய் எனது அறையில் கொண்டாடினோம். நிறைய விடயங்களைப் பற்றிப் பேசினோம். அவனைப் பற்றி நிறையவே நான் அந்த நத்தார் இரவில் தெரிந்து கொண்டேன். என்னோடு நத்தாரிரவைக் களித்ததில் அவனுக்கு பன் மடங்கு மகிழ்ச்சி. புதுவருடத்தைக் களிக்க தான் பிறந்த ஊரான பர்கன் என்ற பகுதிக்குப் பயணிக்கவிருப்பதாகத் தெருவித்து விட்டு என்னிடம் இருந்து விடை பெற்றான். அவன் செல்லும் போது மறு தினம் காலையாயிருந்தது. அவன் என்னோடு கழித்தது சுமார் பன்னிரண்டுமணி நேரங்களாகும்.

சுமார் ஒரு வார காலமாய் நானவனைக் காணவில்லை. அவன் பர்கன் நகரத்திற்குப் போய் விட்டான். மீண்டுமவனனைப் புதுவருஷம் முடிந்த மூன்றாம் நாளில் கண்டேன். வழமை போல் அவன் அந்த அப்பிள் மரத்தடியில் பாடிக்கொண்டு நின்றான். என்னைக் கண்டதும் ''நீ குன்ஷாமணி'' என்றான். அவன் கூறியதை நான் புரிந்து கொள்ளப் பல வினாடிகளெடுத்தது. தான் பிரயாணிக்கள் படகில் பர்கன் சென்ற போது ஒரு இலங்கைத் தமிழ் நண்பனும் பயணம் வந்ததாகவும், அக்கரை சேரும்வரை அவன் தன்னோடு நட்போடு பழகியதாகவும், பல தமிழ் வார்த்தைகள் தனக்குச் சொல்லித் தந்ததாகவும், அவற்றில் சிலதுதான் தனக்கும் பாடமாயுள்ளதாகவும் கிழவன் சொன்னான்.

''நீ குன்ஷாமணி'' என்றான் மீண்டும் சிரித்தபடி.
''நீ சொல்வதன் அர்த்தம் தெய்யுமா உனக்கு?'' கேட்டேனவனை.
''ஆமாம் தெரியும். நீ நீடூழி வாழ்க! என்பதுதானே இதன் அர்த்தம். அந்த நண்பன் நல்லவன். விபரமாய் சொல்லித்தந்தான்'' அவனது அதே கலப்படமற்ற சிரிப்போடு சொன்னான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்க வைத்தேன். அவன் மீண்டும் சிரித்தான். ''ஏன் சிரிக்கிறாய்? அந்த நண்பன் மீது உனக்கு கோபம் ஏற்படவில்லையா? கேட்டேன் நான். ''இல்லை நண்பா சந்தோஷப் படுகிறேன். பயணக் களைப்புத் தெருயாமல் அந்த நண்பனுக்கு நனொரு இலவசப் பொழுது போக்குச்சாதனமாகப் பயன்பட்டிருக்கிறேன். அந்த வகையிலாவது நான் பயன் பட்டேனென்பது என்னைப் பைத்தியம் என்று சொல்லும் நபர்களுக்கு ஒரு சாட்டையடியாய் இருக்கட்டும்'' மிகவும் சாதாரணமாகஸ் சொன்னான் அவன். வேறென்னென்ன வார்த்தைகளைக் கற்றுத் தந்தான் அந்தத் தமிழன் என்பதைக் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களைச் சொன்னேன் அவனிடம். அனைத்தும் கேவலமான கெட்ட வார்த்தைகள். வாழ்த்துக்கள், வணக்கங்கள் என்று கிழவனுக்கு இவற்றை அந்த புண்ணியவான் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அவன் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைக் கிழவனுக்கு விளங்க வைக்க மிகவும் கூச்சமாயிருந்தது. இந்த கெட்ட வார்த்தைகளைக் கிழவனுக்கு சொல்லிக் கொடுத்ததில் அந்த முகம் தெரியா மனிதன் என்ன சுகத்தை அடைந்திருக்க முடியுமென என்னை நானே கேட்டுக் கொண்டதில் எந்த விடையும் கிடைக்கவில்லை. இப்போதேல்லாம் நான் கிட்டார் கிழவனைக் கடந்து செல்லும் போதும், அவன் வணக்கம் சொல்லும் போதும் எனக்குள் ஒரு வித உறுத்தல் நெரிப்பதுண்டு. அம்மணப் பதங்களைஸ் சொல்லிக் கொடுத்த ஒரு நண்பனின் பெயரால் நான் கூனிக்குறுக நேர்ந்து விட்டதே என்பதை எண்ணும் போது மிகவும் சங்கடமாகி விடும்.

''இன்பம் சுவைக்க பட்சமுடைய நண்பர்காள்!
நீங்கள் இன்பம் சுகிக்க நான் பயன்படுவேனாகில்
என்னைப் பாவியுங்கள்.
ஆனால் மனித நாகரீகம் சாகும்படியல்ல......'' 

கிற்ரார்பாடகன் ஒரு புதிய பாடலைப் பாடுகிறான் அடிக்கடி. தூஷண வார்த்தைகள் சொல்லிக் கொடுத்த அந்த நண்பனின் பெயராலேயே கிழவன் இந்தப் பாடலைப் பாடுகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இன்று வெள்ளிக் கிழமை வாரத்தின் கடைசி நாள். இன்று முடிந்தால் இரு தினங்கள் ஓய்வு நாள். அந்த ஓய்வு நாட்களிரண்டிலும் கிற்ரார் கிழவனை எனது அறைக்கு அழைத்து நிறையப் பேச வேண்டுமென்று எண்ணிக் கொண்டு காலையில் வேலைக்குப் புறப்பட்டேன். அப்பிள் மரத்தடியில் வாகனங்களும், சன நடமாட்டமுமாயிருந்தது. என்ன நடந்து விட்டது கிழவனுக்கு என அறிய என்னைத் துரிதப் படுத்தினேன். உடலெல்லாம் நடுக்கமெடுத்தது என்னையறியாமல். அம்புலன்ஸ் வாகனமொன்றும், பொலிஸ் வாகனமொன்றும் அப்பிள் மரத்தடியில் நின்றிருந்ததை என்னால் துலங்கிக் கொள்ள முடிந்தது. மரத்தை அண்டி நடந்தேன்.......


''நோர்வே நோர்வேஜியர்களுக்கே!
கறுப்பர்களே வெளியேறுங்கள். எங்கள் தேசத்தை விட்டு''
கறுப்பு நரகங்களே!
எங்கள் தேசத்தை அசுத்தப் படுத்தாமல் வெளியே போங்கள்''
போன்ற வாசகங்கள் பேத்தர் இரும்பு ஆலையின் சுவரில் கறுப்பு மையால் எழுதப்பட்டு இருந்தது. அந்த வாசகங்களின் கீழே நாஸி சின்னமும் பொறிக்கப்பட்டு, புதிய நாஸிஸ்டுக்கள் என்றும் புத்தம் புதிதாய் எழுதப் பட்டிருந்தன. அங்கு நின்றிருந்த வாகனங்கள் அவசர அவசரமாய் சென்று மறைந்தன. எனது கிற்ரார் பாடகனும் அங்கில்லை. என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாய் என்னால் ஊகிக்க முடியாமல் இருந்தது. அமைதியாக வேலையில் ஈடுபட என்னால் முடியவில்லை. தலைவலி எனக் கூறிவிட்டு அறைக்குத் திரும்பி விட்டேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவேயில்லை. பேத்தர் இரும்பாலைச்சுவரின் வாசகங்களும், கிற்ரார் கிழவனும் எனது தூக்கத்தோடு சமர் புரிந்த வண்ணம்.

நகரத்தின் பிரதான வைத்தியசாலை. முகத்தில் சிறு சிறு ஒட்டுக்களும், வலது காலில் பெரிய கட்டுமாய் எனது கிற்ரார் பாடகன் கட்டிலில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் எழ முயற்சித்தான். அவனால் முடியவில்லை. ''வா நண்பா! வந்தென் அருகில் அமர்ந்து கொள்'' அவனது கலப்படமற்ற அதே புன்னகை. அவனது கட்டிலினருகிற் கிடந்த நாற்காலியில் சென்றமர்ந்து கொண்டேன். ''அவர்கள் உண்மையிலேயே பாவம், தாங்கள் செய்வதன் தார்ப்பரியம் புரியாமல் செய்து வருகிறார்கள். அவர்களின் தவறைப் புரிய வைக்க நான் அந்த இரவில் எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. மனித நேயத்தை மறந்து  நீங்கள் ஈடுபடும் காரியம் தவறானது சற்று சிந்தியுங்கள் என்றேன். அவர்கள் எதையும் தங்கள் செவியில் வாங்கவில்லை. தேசியத் துரோகி என என்னைக் கூறினார்கள். அடித்தார்கள். அப்படியிருந்தும் நான் சொல்ல வேண்டிய நியாயங்களை எடுத்துரைத்தேன். ஒரு நண்பன் தான் வைத்திருந்த இரும்புத்தடியால் எனது காலை உடைத்தான்'' வலியின் வேதனை அவனை இடை நிறுத்தச்செய்தது. தொடர்ந்தான். ''நீ எதற்கும் கவலைப் படதே. நான் விரைவில் குணமாகி விடுவேன். அந்த சுவரில் அவர்கள் எழுதியதை நானே வந்து அழித்து விடுகிறேன். அவர்கள் மீது வஞ்சம் வளர்க்காதே. அவர்களுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். தங்கள் தவறை விரைவாய் அவர்கள் உணர்வார்கள். நாஸிகளால் தங்கள் தந்தையர் தேசம் அனுபவித்த இன்னல்களை சிந்திக்க மறந்து விட்டார்கள். அவர்கள் அவற்றை உணரும் காலம் அண்மையில் என்பதை நான் அறிவேன். இந்த உலகம் அறியப் போகிறது''

நத்தார் பரிசாய் அவன் எனக்குத் தந்த ஓவியமும், அவனது எல்லாமுமான கிற்ராரும் இப்போது என்னிடம் எனது நிலவறையில். ''நான் குணமாகி வரும்வரை இதனைப் பாதுகாத்துத் தருவாயா நண்பா? என அவன் என்னிடம் அடைக்கலம் தந்த அவனது கிற்ராரின் கம்பிகளை நான் மெல்லத் தொட்டேன். பேச ஆரம்பித்தது. கிழவனின் கிற்ரார் இப்போது கிழவனைப் பற்றி என்னோடு நிறையவே பேசத் தொடங்கியது. எனது நிலவறையில் அந்தக் கிற்ராரின் பேச்சுக் குரல் நிறைந்து வியாபித்திருந்தது.

நன்றி> சுவடுகள் இல.64 (1995 பெப்ரவரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக