புதன், 9 ஜூலை, 2014

வேர் கொண்டெழும் பாறை

-தமயந்தி-  சிறுகதை (1994)

(நன்றி: தோற்றுத்தான் போவோமா)

 


பணிகளோ ஏராளம்
கணங்களோ
கைச் சிறங்கையளவு.

செலவு செய்யப்படாத
இளமையோடும் கனவுகளோடும்
இருளிடையே கரைந்துபோன
எனது
பல தோழர்களைப்போல
ஒரு நாள்
இருளின் வயிற்றினுள்
நானும் மறைந்து போவேன்.

அதற்கு முன்…?...!

சூரியனையும் காற்றையும்
முந்திக்கொண்டு
தரிக்காமல் ஓடவேண்டியிருக்கிறது.
ஓடுகிறேன். 




பாத்திரங்கள்:
ஒரு கிராமம்
ஒரு புனிதர்
ஒரு மனிதன்
ஒரு படைவீரன்
ஒரு தோணி
ஒரு அகதிமுகாம்
ஒரு சவப்பெட்டி
ஒரு பாறை
அவனவன் தன்தன் திராட்சைச் செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள். இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்."

கம்பளியாட்டின் தோலை இடைக் கச்சையாகவும், காட்டுமல்லிகைத் தடியை ஊன்று கோலாகவும், சடைத்த சடைமுடி தாடியையும் கொண்ட முதிர்ந்த அந்தப் புனிதர் பாறையில் ஏறி அமர்ந்து கொண்டார். அது கரிய பாறை. கடற்கரையோரத்தில் காலாகாலமாக அமர்ந்திருக்கும் பாறை. கரை வந்தேறும் அலைகள் ஓங்கி ஓங்கி உதைக்கும் போதெல்லாம், அந்த உதைப்புகள் அத்தனையையும் தாங்கி, தன்னையும் வலுப்படுத்திக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிற்கும் கரிய பாறை. ஆனால் மலையல்ல. புனிதரைவிடவும் வயதுகூடிய பாறை. ஆனால் புனிதரிடம் தெரியும் முதிர்ச்சியோ, தளர்ச்சியோ அந்தப் பாறையிடம் இல்லை.

'இந்த மலைப் பிரசங்கம்..., இந்த மலைப் பிரசங்கத்தினூடாக..., இந்த மலைப் பிரசங்கத்தை..., இந்த மலைப் பிரசங்கத்தில்..., இந்த மலைப் பிரசங்கத்தைப்போல்.... " அந்தக் கரையோரப் பாறையில் அமர்ந்தபடி, புனிதர் தனது பிரசங்கத்தின் இடையிடையில் இப்படிப் பதங்களைப் பாவிப்பதனூடாக நாம் ஒரு பொது முடிவுக்கு வரமுடியும்.
மலைப் பிரசங்கம்.இப்படித்தான் அந்தப் புனிதர் எண்ணிக்கொண்டார் தனக்குள்.

தான் மலையல்ல என்பது அந்தப் பாறைக்கு நன்கு தெரியும். தெரிந்திருந்தும் அந்தப் பாறை வாய்திறந்து உண்மையைச் சொல்லி புனிதரின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட விரும்பவில்லை.

'நான் மலையல்ல என்பதை சொல்லி புனிதரின் எண்ணம் தவறென நிரூபிப்பதால் யாருக்கு என்ன லாபம், யாருக்கு என்ன நட்டம்? ஒரு சாதாரண சிறிய பாறையான என்மீது அமர்ந்துகொண்டு, பெரிய மலைமீது தான் அமர்ந்து பிரசங்கிப்பதாய் எண்ணி புனிதர் தனக்குள் ஓர் அற்ப சுகத்தை அனுபவிக்கிறாரெனின், அதனை ஏன்தான் நான் கெடுத்துக் கொள்வான்? இதனால் எனக்கு என்ன லாபம்?, அல்லது சொல்லாமல் விடுவதனால் யாருக்கு என்ன இழப்பு?" பாறை மௌனமாய் இருந்தது.

'எதற்கும் உதவா இந்தச் சிறிய பாறை எனக்கு தற்காலிக இருப்பிடம் தருவதாலும், இதிலிருந்தபடியே எனது உவமைகள் பிரசங்கிக்கப் படுவதாலும் மலை என்ற அந்தஸ்தை அடைந்து பெருமை கொள்ளக் கடவதாக" புனிதர் தனக்குள் எண்ணிக்கொண்டார் இப்படி.

தொடர்ந்தார் புனிதர்...,
"ஆட்டு மந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள். மரணம் அவர்களை மேய்ந்துபோடும். செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டு கொள்வார்கள். அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்."

கூட்டத்தில் மெல்லியதாய் சலசலப்பு உண்டாகத் தொடங்கியது. கூட்டத்தின் நடுவில் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்திருந்த அந்த வயதான கிராமத்தின் காதினுள் புகுந்த புனிதரின் வார்த்தைகள் "சுள்"ளெனச் சுட்டது. அதன் முகம் கோபத்தால் சிவப்பேறியது. பின் முகம் சுருங்கி விழிகள் கலங்கியது. புலம்பியது. 'போனாரே போனாரே என் மக்கள் பரதேசம் போனவர் வருவாரோ இந்தப் போக்கத்த பூமியிலே..."
கிராமம் அழுதது. மூக்கைச் சீறி கரையோர ஊரிமணலில் துடைத்தது. கிராமத்தின் இந்த நிலையைக் கண்டும் காணாததுபோல் தலையைக் குனிந்தபடி இருந்தது சவப்பெட்டி.

நீண்டநாட்கள் நங்கூரம் தூக்கப்படாததால் பாசிப்படை படர்ந்துபோன கயிற்றில் தன் மூக்கை பிடிகொடுத்தபடி, அலவாக்கரையில் அசைந்துகொண்டு கிடந்த தோணி ஒரு தடவை தலையை ஆட்டியது.

"மவுனமாயிருக்கிறவர்களே! நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனு புத்திரரே! நியாயமாய்த் தீர்ப்புச் செய்வீர்களோ? மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள். பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள். துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள். தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழி தப்பிப் போகிறார்கள்"

பிரசங்கத்தை இடையில் நிறுத்திவிட்டு புனிதர் கடலை வெறித்துப் பார்த்தார். அலைகள் அமைதியாய் அசைந்தனவே தவிர எழவுமில்லை, விழவுமில்லை. அலையின் அசைவுகளிடையே தோணி நடந்து திரிந்தது. அதன் நடையின் எல்லை, தன்னைக் கைது செய்து வைத்திருக்கும் பாசிக் கயிற்றின் நீளமாய் மட்டுமேயிருந்தது.

"போனாரே போனாரே என் மக்கள் பரதேசம், போனவர் வருவாரோ இந்தப் போக்கத்த பூமியிலே" மீண்டும் கண்ணீர் சொரிய கிராமம் ஒப்பாரி வைத்தது. இப்பொழுதும் சவப்பெட்டி மௌனமாய் தலை குனிந்திருந்தது.

ஊரி மணலில் கால்களை நீட்டிப் போட்டபடி, தலைக்கு கையை முண்டு கொடுத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்த அகதிமுகாம் எழுந்து உட்கார்ந்தது. "எணை ஆச்சி, உனக்கென்னணை கேடு வந்ததிப்ப? ஏனணை சும்மா சும்மா ஒப்பாரி வெக்கிறாய்? நீ எல்லாத்தையும் கவுட்டுக் கொட்டிப்போட்டு, குண்டியில் மண்ணயுந் தட்டிப்போட்டுச் சுகமாச் சீவிக்கிறாய். நானெல்லோ கிடந்து ஈடழியிறன்." கிராமத்தை அதட்டியது அகதிமுகாம்.

"வாடா துரயே வா...! விண்ணாணஞ் சொல்ல ஒரு நாயுமில்ல எண்டிருந்தன், மண்ணாளும் மகராசா நீ வந்த தென்னப்பு? பிந்தோரு மசிரால போறன் பரதேசம்... வாடா துரயே வா" கிராமத்தின் கோபம் அகதி முகாமின் பக்கமாய்த் திரும்பியது.

அகதிமுகாம் மீண்டும் கையைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி ஊரி மணலில் ஒருக்களித்துப் படுத்தது. சவப்பெட்டி தனக்குள் ஒரு தடவை சிரித்துக் கொண்டது. கிராமம் ஒருதடவை திரும்பிப் பார்த்த பார்வையில் அது சிரிப்பை அடக்க முயற்சித்தது முடியவில்லை. சிரித்தது. தலையைக் குனிந்தபடியே சிரித்தது. கிராமத்துக்குக் கோபம் கோபமாய் வந்தது. "பட்டத்து மகராசி இடி விழுந்து படுத்தாலாம், பஞ்சத்து மன்னரெல்லாம் பல்லிழிச்சுப் பாப்பினமாம்..... இழிப்பென்ன வேண்டிக்கிடக்கு இழிப்பு? முன்னால ஆரும் கிழிஞ்சுபோயோ கிடக்கினம்? இழிக்கிறாராம் பேக்கிலவாண்டிப்பயல் இழிப்பு..." கிராமம் கொடுத்த கிழியலில் சவப்பெட்டியின் முகத்திலிருந்த சிரிப்பு மாயமாய் மறைந்தது. அதன் முகம் வெட்கத்தாலும், வேதனையாலும் இறுகிப்போயிருந்தது.

"இந்தக் கிராமத்துக்கு நானென்ன கேடு நினைத்தேன்? இதன் நிலை கண்டு துக்கித்துப் போயல்லவா இருக்கிறேன். இதன்மீது ஊரும் காற்று நாறிப்போகக் கூடாதென்றுதானே நான் எனக்குள் சுமக்கிறேன்..." தன்னுள் நினைந்து நினைந்து உருகியது சவப்பெட்டி.

"என் ஜனங்களே! என் உபதேசத்தைக் கேளுங்கள். என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்" புனிதர் மீண்டும் தன் பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.

எத்தனை நாட்கள் இப்படியே இருந்தோம் என்ற கணக்குத் தெரியாமலே பிரசங்கப் பாறையின் முன்னால் அமர்ந்திருந்த அந்த மனிதனுக்கு இப்போது பசியெடுக்கத் தொடங்கியது. சோர்வோடு கொட்டாவி விட்டான். பசிக் களை அவனது முகத்தை சுருங்க வைத்தது. வயிற்றைப் பிசைந்தெடுத்தது. அவன் சர்வாங்கமும் வலுவிழந்து, விழச் சித்தமாயிருந்தது.

"ஐயா! பசிக்கள உயிர் போகுதையா...." தழுதழுத்த குரலால் கெஞ்சினான். அவனது கெஞ்சுதலில் ஓர் எதிர்பார்ப்பு வெளிப்பட்டது. ஆமாம். அந்த ஐந்து அப்பமும், இரண்டு மீனும் பலவாகிப் பெருகிய அற்புதம் மீண்டும் நிகழாதா என்ற எதிர்பார்ப்பே அது.

"ஐயா....! பசிக்கள.... உயிர்.... போகுதையா..." அவன் சோர்ந்து ஊரிமணற் தரையில் சரியலானான். சரிந்தவன் முதுகில் துருத்தி நின்றது படைவீரனின் சுடுகுழலின் முனை. சரிந்துசென்ற மனிதன் தன்னை நிமிர்த்தி உட்கார வைத்தான் மிகுந்த பிரயத்தனங்கள் மத்தியில்.

"அவனவன் தன்தன் திராட்சைச் செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள். இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்" புனிதர் முன்பு சொன்னதையே மீண்டும் சொல்வதனூடாக பசித்த மனிதனின் பிரச்சனைக்கு தீர்வு சொல்வதாய் எண்ணிக் கொண்டார்.

"புண்ணாக்குச் சித்தனாம் உள்நாக்கு மருந்து சொல்லி, சூறெல்லாம் புண்ணாகிச் செத்தானாம் பரதேசி... ம்.... ஆரு செய்த மோசமையா ஆராரோ வந்தெனக்குப் பதஞ் சொல்லிப் போகினமே..." கிராமம் புலம்பியது.

மனிதன் பசிக்களையால் மீண்டும் நிலத்தில் சரிந்தான். படைவீரனின் சுடுகுழல் முனை மீண்டும் அவனின் முதுகை அழுத்தியது.

அகதிமுகாம் மெல்ல எழுந்து வந்து மனிதனின் பக்கத்தில் அமர்ந்து, அவனைத் தாங்கிப் பிடித்தது. தன்னிடமிருந்த காய்ந்துபோன பழைய ரொட்டித்துண்டு ஒன்றை எடுத்து அவனுக்குக் கொடுத்தது. நடுங்கும் கரத்தால் அதனை வாங்க எத்தனித்தான். படைவீரனின் முரட்டுக்கரம் மனிதனின் கன்னத்தில் ஆழப் பதிந்தது. அகதிமுகாமின் கையிலிருந்த ரொட்டித் துண்டைப் பறித்த படைவீரன், அதனை எட்டி உதைத்தான். ராணுவச் சப்பாத்துக்காலின் உதையைத் தாங்க முடியாத அகதிமுகாம் தூரத்தே போய் விழுந்தது. அதனிடமிருந்து பறித்தெடுத்த ரொட்டித் துண்டை தானே வாய்க்குள் போட்டு தின்று விழுங்கினான்.

காய்ந்த சருகுபோல் ஊரிமணற் தரையில் துவண்டு கிடந்தான் மனிதன். அவனது உடலில் சிறிதளவு உயிர் மட்டும் எஞ்சியிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாத தோணி இங்குமங்குமாய் தன்னை அசைத்தது. பாசி படர்ந்த கயிற்றை அறுத்தெறிய முனைந்தது. முடியவில்லை. இரண்டு தடவைகள் தலையைத் தூக்கிக் குத்தியது. சேற்றில் ஆழப் புதைந்த நங்கூரம் அசையவில்லை. முயற்சியைக் கைவிட்ட தோணி அடங்கிப்போனது.

பாறைமீது அமர்ந்திருந்த புனிதர் தன் தீர்க்கதரிசனங்கள் மூலமாய் இவையெல்லாம் நடந்தேற வேண்டியவை என முன்பே அறிந்தவர்போல் கடலையே வெறித்துப் பார்த்தபடி மௌனமாய் இருந்தார்.

அவர் அமர்ந்திருந்த பாறை இப்போது புதிதாய் ஒரு வேரை ஊரி மணலின் அடியில் பிரசவித்தது. பாறையின் மேல் அமர்ந்திருந்த புனிதர் இதனை அறியார். உண்மையிலும் உண்மையாகவே இதனை அறியவே மாட்டார். ஏனெனில் இவை தீர்க்க தரிசனங்களுக்கு அப்பாற் பட்டவையாகையால்.

சப்பாத்துக்காலின் உதையால் பட்ட வலியால் அகதிமுகாம் நிலத்தில் துடித்துக்கொண்டு கிடந்தது. அதனருகில் வந்த சவப்பெட்டி அதனைத் தாங்கி நிறுத்தியது. இரண்டும் ஒன்றுக்கொன்று பார்வைகளால் ஆதார ஒத்தடம் கொடுத்துக் கொண்டன.

"போனாரே போனாரே என் மக்கள் பரதேசம், போனவர் வருவாரோ இந்தப் போக்கத்த ப+மியிலே..." கிராமம் தனது வழமையான ஒப்பாரியைச் சொல்லிக் கலங்கியது.

"அவனுடைய வல்லமை பெருகும். ஆனாலும் அவனுடைய சுய பலத்தினால் அல்ல, அவன் அதிசயமான விதமாக அழிம்புண்டாக்கி, அனுகூலம் பெற்றுக் கிரியை செய்து, பலவான்களையும் பரிசுத்த சனங்களையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடி வரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமை கொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாய் இருக்கிறவர்களுக்கு விரோதமாய் எழும்புவான்"

கூறி முடித்த புனிதர் தனது நீண்ட தாடியைத் தடவியபடி, படைவீரனை ஒருகணம் பார்த்தார். பின்பு கடலைப் பார்த்தபடியிருந்தார்.

ரொட்டித்துண்டு வயிற்றில் விழுந்ததால் எழுந்த உசாரில் படைவீரன் கிராமத்தின் அருகில் வந்தான். கிராமம் தனது ஒப்பாரியை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிக் கலங்கியது. அது ஓயவில்லை. மூக்கைச் சீறி ஊரிமணற் தரையில் துடைத்தது. படைவீரனுக்கு ஆத்திரமாத்திரமாய் வந்தது. சுடுகுழலின் பிடியால் ஓங்கி அதன் வயிற்றில் இடித்தான். கிராமம் சரிந்து தரையில் விழுந்தது. விழுந்தும் அது தனது ஒப்பாரியை நிறுத்தவில்லை. மீண்டும் மீண்டும் அதன் வயிற்றிலும், தலையிலுமாக இடித்தான். அதன் உடலம் இரத்தக் கசிவு கண்டது. ஆனாலும் ஒப்பாரியிட்டது.

பாறையிலமர்ந்தபடி கடலைப் பார்த்துக்கொண்டிருந்த புனிதர் தொடர்ந்து...,
"நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரக் கடவது" என்றார்.

பலநாள் பட்டினியால் வாடி வதங்கிச் செத்துக்கொண்டிருந்த மனிதனின் பக்கம் சென்றான் படைவீரன். ஊரிமணற் தரையில் முகம் குப்புறக் கவிழ்ந்து கிடந்த பாதிஉயிர் மனிதனைத் தனது சப்பாத்துக்காலால் புரட்டி நிமிர்த்தினான்.

கிராமம் ஒப்பாரியை நிறுத்திவிட்டு, தலையை நிமிர்த்திப் பார்த்தது. தோணி தன்னை அங்குமிங்கும் அசைத்தது. அகதி முகாமும், சவப்பெட்டியும் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணி, ஒன்றையொன்று அச்சத்தோடு பார்த்துக் கொண்டன. பாறைமீதிருந்த புனிதர் பாறைபோல் அசையாதிருந்தார். ஆனால் பாறை நிலத்தின்கீழ் தன்னை அசைத்து அசைத்து வைரமான வேர்க் குழந்தைகளை ஈன்றுகொண்டிருந்தது.

படைவீரனின் கரங்களில் விறைத்து நின்ற சுடுகுழல் ஒருதடவை எக்காளமிட்டது.
இரண்டு தடவை எக்காளமிட்டது.
மூன்று தடவை எக்காளமிட்டது.

சவப்பெட்டி அழுதழுது தன் பணியைச் செய்யத் தொடங்கியது. அகதிமுகாம் தன் தலையில் அடித்து அடித்து ஓலமிட்டு அழுதது. தோணி என்ன செய்யும்?!, இங்குமங்குமாய்த் தன்னை உலுப்பியது. அசைந்தசைந்து அங்குமிங்குமாய் நடந்தது. பின்பு அடங்கியது.

மீண்டும் புனிதர் "அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான். அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்" என்றார். பின்பு மௌனமானார். கடலைப் பார்த்திருந்தார். படைவீரன் கிராமத்தின் அயலில் வந்தான். அது இரத்தம் சொட்டச் சொட்ட சோர்ந்து கிடந்தது. அவன் தன் கையிலிருந்த சுடுகுழலின் முனையை கிராமத்தின் பிடரியில் வைத்து அழுத்தியபடி தன் கருமத்திற்குத் தயாரானான்.சவப்பெட்டியும், அகதி முகாமும் கண்களை இறுக மூடிக் கொண்டன. அவற்றின் இறுக மூடிய கண்களால் உடைப்பெடுத்து நீர் சொரிந்தது.

தோணி தன்னை உலுப்பியது. மீண்டும் மீண்டும் தன் உடலை தூக்கிக் குத்தியது. பாசி படர்ந்த கயிறு அறுந்து தெறித்தது. தோணி வேகமாய் கரையை வந்து தட்டியது.

ஆயிரமாயிரமாய் வேர்க் குழந்தைகள் பாறையைத் தூக்கி மேலே கொண்டு நிமிர்ந்தன. பாறை இப்போது மலையானது. பெரு மலையானது. அதன் வைரம் பாய்ந்த வேர்க் குழந்தைகள் அதனைத் தாங்கி நிறுத்தி நின்றன. பெருமலையாய்த் தலை நிமிர்ந்து நின்றது பாறை, தன் உடலை ஒரு தடவை அசைத்தது. பாறி விழுந்தார் புனிதர் ஊரிமணற் தரையில். தரைதட்டிய தோணி அவரை அலாக்காகத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆழிக்கடல் நோக்கி ஓடியது.

"ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப் பண்ணும்." புனிதரின் இறுதி வார்த்தைகளாய் கொட்டுண்டன ஆழியிடையில்.

ஆயிரமாயிரம் வேர்க் கால்கள் முளைத்து நடந்து வந்த மாமலையைக் கண்ட படைவீரன் திகைத்தான். நடுங்கினான். நடுங்குமவன் கைகளிலிருந்த சுடுகுழல் நிலத்தில் வீழ்ந்து மண்டியிட்டுச் சாய்ந்தது. அதுபோலவே படை வீரனும்....

'ஆழிக்கடல் போன ராசா வருவாரோ பகல் கொண்டு......" கிராமம் பாடியது.

ஆழிக்கடல் போன தோணி பாய் வலித்து வருகிறது. துவர்ப் பாய். புதுப் பாய். ஏழு தலைப் பாய். கிராமம் சிரித்தது முகமலர்ந்து.

(குறிப்பு: இந்தக் கதையில்(?) புனிதர் என்ற பாத்திரம் புகலும் அனைத்து உரைகளும் விவிலியம் பழைய ஏற்பாட்டில் இருந்து எடுத்தவைகளாகும்.)

நன்றி: தோற்றுத்தான் போவோமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக