புதன், 9 ஜூலை, 2014

மண்டா -தமயந்தி-சிறுகதை

நன்றி: குவர்னிகா 41வது இலக்கியச்சந்திப்பு மலர் 


2012 கோடையின் ஆரம்பம். ஸ்லின்னிங்கன் முகத்துவாரம்.
மூத்தவள் அணியத்தில் இருந்தாள், இளையவள் கடையாலில், நான் வாரியில் நடுப்படகில்.

மார்ட்டீன் அண்டர்சனின் 17அடி தும்புக்கண்ணாடி வள்ளம். அதன் எவன்றூட் வெளியிணைப்பு யந்திரத்தின் ஆடுதண்டு உப்புவரில் துருப் பிடித்ததால் இயக்கம் மறுத்து விட்டது. அதனால் மார்ட்டீன் அண்டர்சன் அதனை திருத்துவோனிடம் செப்பனிடக் கொடுத்துவிட்டார். எனவே இன்று தண்டு வலித்துக்கொண்டுதான் ஸ்லின்னிங்கன் முகத்துவாரம்வரை வந்தோம். போன கோடையில்தான் மார்ட்டீன் அண்டர்சன் புதிதாக வாங்கியிருந்தார் இந்தப் படகை. சில்வர் வைகிங்க் படகு. அவரது தாத்தா அண்டர்சன் ஹாகன் தனது பரம்பரை முதிசமாகக் கொடுத்துச்சென்ற நாட்டு மரப்படகு அடிக்கடி கலப்பத்துக்குள்ளாவதால் அதனை வீட்டுக் கோடிப்புறத்திலேயே கட்டையில் ஏற்றிப் பக்குவமாய் தறப்பாளிட்டு மூடி வைத்துவிட்டார்.
நேர்வேயின் பிரதான மீன்பிடி நகரமான இந்த ஓலசுண்ட் நகருக்கு நாம் குடிபெயர்ந்து பதினைந்து வருடங்கள். மார்ட்டீன் அண்டர்சன் கடந்த பதினைந்து வருடங்களாக எமது அயலாளி. அப்போத்திக்கரியாயிருந்து கட்டாய ஓய்வு பெற்றவர். வருடத்தில் வரும் கோடை காலங்களில் சில நாட்கள் வேட்டைக்குப் போவார், மீன் பிடிக்கப் போவார், பழங்கள் பிடுங்கப் போவார், மனைவியையும் அழைத்துக்கொண்டு ஒரு வாரம் மகள் மருமகன் பேரக்குழந்தைகளைக் காண தங்கள் சொந்த இடமான வல்டால் கிராமத்துக்குப் போய்வருவார். அப்பப்போ மான், மரை, மீன், நண்டு, பழங்கள் என மார்ட்டீன் அண்டர்சனின் மனைவி சில்வியா அண்டர்சன் எங்களுக்கும் அனுப்பி வைப்பார். இங்கிருந்து சமைத்த உணவுகள் அங்கு செல்லும். கோடையில் அநேகமாக எங்கள் மூத்தவளையும் இளையவளையும் அழைத்துக் கொண்டுதான் மீன் பிடிக்கச் செல்வார், பழம் பிடுங்கச் செல்வார். இது மார்ட்டீன் அண்டர்சன், சில்வியா அண்டர்சன் பற்றிய கதை இல்லை என்பதால் சுருக்கமாக, கடந்த பதினைந்து வருடங்களாக நல்ல அயலாளி நட்புக்குடும்பங்களாக இருந்து வருகின்றோம் எனக் கூறிவிட்டு கடந்து செல்கிறேன்.

கடந்த மூன்று நாட்களும் வேகமான காற்றும், அலையாட்டமும், நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் கடல் கலங்கியிருந்தது. மார்ட்டீன் அண்டர்சனின் சிறிய எக்கோசவுண்டர் மீன்வள நோட்டம் பார்ப்பதற்கான குறைந்தபட்ச அனுசரணையைக்கூட எமக்குத் தரவில்லை. எனவே குறைந்தபட்ச அனுபவத்திலிருந்தும், குத்துமதிப்பிலிருந்தும் முகத்துவாரத்தின் தென்கிழக்கில் படகை நங்கூரமிட்டிருந்தோம். ஒன்றும் மோசம் போகவில்லை. மூத்தவள் ஆறு மீன்களும், இளையவள் ஏழு மீன்களும் நான் ஐந்து மீன்களுமாக பதினெட்டு மீன்களை இதுவரை பிடித்திருந்தோம். கிட்டத்தட்ட மூன்றரைக்கிலோ. இது போதுமென்று நான் நினைத்தேன். ஆனால் மூத்தவள் விடுவதாயில்லை. தன்னைவிட ஒரு மீன் இளையவள் அதிகமாய்ப் பிடித்துவிட்டாள் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிப்படையாக மூத்தவள் காட்டிக் கொள்ளாவிட்டாலும்கூட அவளால் ஒப்புக்கொள்ள முடியாத தோல்வியாயிருந்தது. சற்று நேரத்தின் பின் கண்மூடி முழிப்பதற்குள் கோர்வைத் தூண்டலில் ஒரே தடவையாக இன்னும் ஐந்து மீன்களை இழுத்துவிட்டாள் இளையவள். இப்போ இளையவள் பிடித்த மீன்களின் எண்ணிக்கை பன்னிரண்டாக உயர்ந்து விட்டது. மூத்தவளைவிட இரட்டிப்பு. இப்போ மூத்தவளைக் கேட்கவும் வேண்டுமா...? தான் அமர்ந்திருக்கும் அணியப்பகுதியுள்ள கடற்பரப்பில் மீன்பாடு இல்லை என்றாள். இளையவள் அமர்ந்திருக்கும் கடையாற் பகுதியுள்ள கடற்பரப்பிலேயே அதிக மீன்பாடு இருக்கிறதென்றாள். இளையவள் வைத்திருக்கும் நெல்சன் சித்தப்பா வாங்கிக்கொடுத்த தூண்டிற்கம்பு தரம் வாய்ந்தது எனவும் தான் வைத்திருப்பது அண்ணா பலகாலம் பாவித்த பழைய, தரம் குறைந்ததும் என்றாள். மூத்தவன் களக்கம்புத் தூண்டிலில் மீன் பிடிப்பதில் வலு விண்ணன். கடந்த வருடம்தான் தனது மேற்படிப்பிற்காக வேறு மாநிலம் போய்விட்டான்.  மூத்தவள், தனது தூண்டிலில் அகப்படாமல் இளையவளின் தூண்டிலில் அகப்பட்ட அத்தனை மீன்களையும் திட்டினாள், சாபம் கொடுத்தாள்.  சிறிது நேரத்தில் நீரோட்டம் மாறி நுகைப்பு எடுத்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோவுக்குமேல் பிடித்து விட்டோம். ஆனால் யார் யார் எத்தனையெத்தனை மீன்கள் பிடித்தோம் என்ற எண்ணுக்கணக்கு மூவருக்குமே தெரியாது. அது தேவையற்றதாகவும், முடியாததாகவும் போய்விட்டது. ஆரம்பத்தில் நான் பிடித்த ஐந்து மீன்களைத் தவிர மேலதிகமாக இன்னும் மூன்று நான்கு மீன்கள்தான் பிடித்திருப்பேன். எனது தூண்டில்தடியை வைத்துவிட்டு, மூத்தவளும் இளையவளும் பிடிக்கும் மீன்களைத் தூண்டிலில் இருந்து கழற்றிப்போடவே சரியாயிருந்தது.

இவை அதிகம். இரண்டு மூன்று கிலோ மீன்களே இன்று எமக்குப் போதுமானது. போனவாரம் மூத்தவளும் இளையவளும் ஐயாவோடு தொலைபேசியில் பேசியபோது அவர் கேட்டிருந்தார் ”நீங்கள் பிடிக்கிற மீனில அப்பப்பாவுக்கும் பொரிச்சுக்கொண்டு வருவியளோ” என்று. அதற்காகத்தான் இன்றைய மீன்பிடி. நாளைக் காலை எமது தீவிலிருந்து விமானம் ஏறுகின்றோம். நாளை மறுநாள் சென்னைக்குப் போய்விடுவோம். மூத்தவன் தானிருக்குமிடத்திலிருந்து நேரடியாகவே ஜெர்மனுக்கு வந்து எம்மோடு சென்னை பயணிப்பதாகத் திட்டம்.

எண்பத்தியாறாம் ஆண்டு இயக்க அழிப்புக்களின் அமளிதுமளி. மார்கழி முழுநிலவொளியில் எங்கள் துறைமுகமான பெரியபார் துறைமுகத்திலிருந்து என்னைக் கள்ளத்தோனியில் ஏற்றி ராமேஸ்வரம் அனுப்பிவைத்த ஐயாவை இந்தக் கோடையில்தான் மீண்டும் பார்க்கப் போகிறேன். இருபத்தியாறு வருடங்களுக்கு மேலாகி விட்டது. பெரியபார் துறைமுகத்தில் யந்திரப்படகில் என்னை ஏற்றி அனுப்பியபோது கரையில் நின்ற உறவுகளின் கண்களிலிருந்து ஒழுகிய கண்ணீரில் மார்கழிமாத முழுநிலவின் ஒளிபட்டு மின்மினிப் பூச்சிகளாய்த் தெறித்த அந்தக் கணங்கள் இன்னமும் நெஞ்சைவிட்டகலாத் துன்பமானவை. அத்தனை பேருக்கும் நடுவில் நின்று எல்லோருக்கும் ஆறுதல் சொன்ன விறைச்ச மனுசன் ஐயா, படகின் யந்திரம் இயங்கத் தொடங்கியபோது பெரியபாரின் கரையில் நின்ற ஒற்றைப்பனையில் தலையை மோதி மோதி ஓங்கிய குரலெடுத்துக் கதறிய காட்சி இன்னமும் என் நெஞ்சைத் துழைக்கும் வியாகுலமானது. எத்தனையெத்தனை மாற்றங்கள். யுத்தம் சப்பித் துப்பிய பூமியில் ஓர் குடிகூடப் பாதிக்கப்படாமல் இல்லை. அதில் எனது குடிமட்டுமென்ன விதிவிலக்கா?

தீவுக் கிராமங்கள் பண்ணை வெளியைத் தாண்டி நகர்ந்து யாழ் நகர்ப்பகுதிகளில் தஞ்சமடைந்திருந்த தொண்ணூறு. நாவாந்துறையில் ஐயாவும் அம்மாவும் தம்பி தங்கைகளும் தூரத்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருந்தனர். 91கோடை முடிந்த கையோடு வந்த தகவல் ஐயாவின் வலதுகால் கண்ணிவெடியில் போய்விட்டதென்று. ஐயாவும் பெரியையாவும் மாடோடிப்பிட்டி களச்சரிவில் வெள்ளாப்புப்பாடு வலையை விரித்து வைத்துவிட்டு, கொஞ்சம் விறகுக்காகக் கண்ணாச்சுள்ளிகள் எடுக்கலாமென்ற எண்ணத்தில் தோணியை கரையில் விட்டுவிட்டு இறங்கியிருக்கிறார்கள். கரையில் புதைத்து வைத்திருந்த ஜொனிவெடியின்மேல் ஐயா வலதுகாலை வைத்து விட்டார். கதை அவ்வளவுதான். அதன்பின்னும் யுத்தம் அவர்களை சும்மா விட்டு வைக்கவில்லை துரத்து துரத்தென்று துரத்தியது. கண்டு கேட்டிராத தேசாந்திரமெல்லாம் ஒற்றைக்கால் ஐயாவும் அம்மாவும் இரண்டு தம்பிகளும் மூன்று தங்கைகளும் அலைவாய்ப்பட்டுத் திரிந்தனர். 92இல் மன்னார் வழியாக கள்ளத்தோணியில் தம்பி தங்கைகளை ஏற்றி ”எங்கயாவது தப்பிப்போங்கோ குஞ்சுகளே” என்று தமிழ்நாடு அனுப்பி வைத்து விட்டார் ஐயா. பின் 97இல் ஐயாவும் அம்மாவும் அதே மன்னார் வழியாக தமிழகம் வந்து சேர்ந்தார்கள். 

ஐயா கொழும்புத்துறையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தனது காதலியைச் சந்திக்க ஒவ்வொரு ஞாயிறும் தீவுக்கு சைக்கிளில் இருபத்தைந்து கிலோமீற்றர் வருவார். காதலியின் வீட்டைக் கடந்து செல்லும்போது பெல் கொடுப்பார். திரும்பி வரும்போது காதலி கிணற்றடியில் வந்து நிற்பாள். மட்டைவேலியால் எட்டிப் பார்த்து சிரித்துவிட்டு, கை காட்டிவிட்டு, அதே மொழியிலான பதிலைப் பெற்றுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு 25கிலோமீற்றர் சைக்கிலோட்டம். மட்டைவேலிக்கு மேலால் எட்டிப்பார்த்துக் கையை மட்டும் காட்டிவிட்டுச் செல்வதற்காக ஐம்பது கிலோமீற்றர் சைக்கிலோட்டம் வேர்க்க விறுவிறுக்கத் தேவைதானா, என்னவொரு விசர்த்தனம் என்று நாம் கேட்பதுதான் விசர்த்தனம் காதலில்.

ஐயா தனது காதலியைக் கடத்திக்கொண்டு செல்லவேண்டிய கட்டாயமொன்று வந்துவிட்டது. அந்தக் கிராமத்துக்குள் ஐயாவால் போக முடியாத சூழலும் வலுவாயிருந்தது. போவாரானால் மண்டாக்கம்புகள் புடைசூழ பிய்த்தெடுத்து விடுவார்கள். என்ன செய்வது...?

ஐயாவின் கூட்டாளிகள். நாரந்தனை கொர்னலியஸ், கருகம்பனை கந்தையா, அல்லைப்பிட்டி தாஸன், கரையூர் பெரியதம்பி, திட்டி பேரின்பநாதன், உரும்பிராய் திருமேனி, கொட்டடி பெரியசெட்டி.

ஐயாவின் காதலியை தீவிலிருந்து எப்படிக் கடத்தி வருவது என்ற திட்டங்களையும் வியூகங்களையும் கரையூர்ப் பெரியதம்பி வீட்டிலிருந்து எட்டுப்பேரும் தீட்டிக்கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை பின்னேரப் பூசைக்கு கரம்பன் செபஸ்தியார் கோயிலுக்கு ஐயாவின் காதலியை வரச்சொல்வது. பூசை முடியப் பொழுது சரிந்துவிடும். அந்த மைம்மலுக்குள் அங்கிருந்து கந்தையா தனது சைக்கிளில் ஏற்றி ஊறாத்துறைக்குக் கொண்டு வருவது. கூடவே பாதுகாப்புக்காக இன்னொரு சைக்கிளில் கொர்னலியஸ். ஊறாத்துறையிலிருந்து அல்லைப்பிட்டிச் சந்திவரை கொர்னலியஸ் தனது சைக்கிளில் கொண்டு செல்வது. அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து கொட்டடிவரை தாஸன் தனது சைக்கிளில் ஏற்றிச் செல்வது. கொட்டடியிலிருந்து கந்தர்மடம்வரை பெரியசெட்டி தனது சைக்கிளிலும், பெரியதம்பியும் பேரின்ப நாதனும் ஒரு சைக்கிளில் பாதுகாப்புக்கும் செல்வது. கந்தர்மடத்தடியில் ஐயாவும் திருமேனியும் பொறுப்பேற்று உரும்பிராய்வரை. திருமேனி வீடுதான் கடைசி விடந்தை. திட்டம் செகசோதியான வெற்றியைப் பெற்றது.

ஒருவாறாக இரு வீட்டாரும் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி கல்யாணத்தை முடித்து வைத்தார்கள். அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் சிலவேளை தனகல், கொழுவல் வரும்போது நான் அறிந்த காலம்வரை சொல்லியிருக்கிறா ”அடியோய் எட்டுப்பேரோட கிணாய்ச்சுக்கொண்டு ஓடிப்போன வேசதானேயடி நீ”  என்று. இதைக் கேட்டால் அம்மாவுக்கும் ஐயாவுக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வரும். ஒருவரையொருவர் பார்த்துத் சிரித்துக் கொள்வார்கள். அந்தச் சிரிப்புக்குள் மயிர்க்கூச்சறியும் அந்தக் காதல்க் காட்சிகள் சற்றுத் தலையை உயர்த்தி எட்டிப் பார்க்கும்.

படகை கரையே இழுத்து வைப்பதற்கான ஒத்தாசைகளை மார்;ட்டீன் அண்டர்சனும், சில்வியா அண்டர்சனும் செய்தார்கள்.

”ஓ.... மக்ரல் முகத்துவாரத்திற்குள் வந்து விட்டதா...? ஒரு வாரம் பத்து நாட்களின் பின்புதான் உட்கடலுக்கு மக்ரல்மீன் வரும் என்று நினைத்திருந்தேன். ம்.... கடந்தசில நாட்களாக பலத்து வீசிய காற்று காரணமாக இருக்கலாம், அடி என் சிறிய அழகுகளே! இந்த வருடத்துக்கான முதல் மக்ரலைப் பிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் என் சின்னப் பெண்களே” மார்ட்டீன் அண்டர்சன் மூத்தவளையும் இளையவளையும் வாழ்த்தினார். பருவகால மீன்களான இந்த மக்ரல் மீனினம் கோடைகால ஆரம்பத்தில் அட்லாண்டிக் கரைகளை அண்டிய குடாக்கடலுக்குள் வரும், கோடை முடிவுறும் காலத்தில் வெளியேறிவிடும். இந்த ஸ்லின்னிங்கன் முகத்துவாரத்துக்குள் வருடாவருடம் உள்ளே அடிக்கும் முதல் மீனை யார் முதலில் பிடிப்பதென்ற போட்டி எனக்கும் மார்ட்டீன் அண்டர்சனுக்கும். போன வருடம் மார்டீன் அண்டர்சன்தான் முதல் மீனைப் பிடித்தார். அதற்கு முதல் வருடம் மூத்தவன். எதிர்பாரா விதமாக அறுபது கிலோவுக்குமேல் பிடித்து விட்டான். மார்ட்டீன் அண்டர்சனும் நானும் திகைத்துப் போனோம். ஏனெனில் இன்னமும் இரண்டுவார காலமாவது இருக்கிறது மக்ரல் குடாவுக்குள் வருவதற்கு என நாங்கள் போட்டு வைத்த கணக்குத் தவறி விட்டது.

எமக்குத் தேவையான பதினைந்து மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அப்படியே மார்ட்டீன் அண்டர்சனுக்குக் கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். நேரம் மாலை ஆறு மணியைத் தொட்டிருந்தது. சூரியன் வெப்பம் குறையாமல் அடம் பிடித்துக்கொண்டு நின்றான். மீன்பொரியல் வேலைகள் அகோரமாக நடந்துகொண்டிருந்தன. பயணத்துக்கான ஆயத்தங்கள், பெட்டியடுக்குதல்கள் ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருந்தன. தொலைபேசியில் ஐயா. மூத்தவளும் இளையவளும் இன்று மீன்பிடியில் நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் ஐயாவுக்கு ஒப்புவித்துக்கொண்டிருந்தனர். ”தம்பி, பிள்ளயளப் பத்திரமாக் கூட்டிக்கொண்டு வந்து சேர் தம்பி” என என்னோடும் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஐயாவின் குரலில் மிகுந்த உசார் பளிச்சிட்டது. கடந்த சில வருடங்களாக இவர்களைப் பார்க்காமல் தான் இறந்து போய்விடுவேனோ என்று மிகப் பயந்துபோயிருந்தார்.

நானும் எனது மூத்த தங்கையும் சின்னன்களாக இருந்தபோது ஐயா துரையப்பாவின் காரியதரிசியாக இருந்தார். அப்போ சம்பள உயர்வு கேட்டு ஒரு போராட்டம் நடந்தது. அதில் ஐயாவும் ஐயாவின் சில கூட்டாளிமாரும்தான் முன்னணியில் நின்று போராட்டத்தை நடாத்தினார்கள் என்பதற்காக ஐயாவோடு சேர்த்து ஆறுபேரைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துவிட்டார் துரையப்பா. ஒரு மாதத்தின்பின் தபாலட்டை போட்டு ஐயாவைக் கூப்பிட்டிருந்தார் துரையப்பா. இவர்கள் முன்வைத்த சம்பள உயர்வுக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும் பணியில் வந்து இணைந்துகொள்ளும்படியும் சொன்னார். ”நீங்கள் வாவெண்டால் வாறதுக்கும், போவெண்டால் போறதுக்கும் நானொண்டும் உங்கவீட்டு வாரக்குடி இல்ல சேர். எனக்கு என்ர கடலிருக்கு. அங்க நான்தான் ராசா, நான்தான் முதலாளி. உங்கட வேலய நீங்களே வச்சிருங்கோ குறை நினைக்காதேங்க சேர்” சொல்லிவிட்டு ஊருக்கு வந்தவர்தான். டேவிற் பெரியையாவைக் கொண்டு ஒரு தோணி செய்து இறக்கினார், ஒரு கூட்டம் களங்கண்டி போட்டார், எங்கள் கிராமத்தில் ஒரு கடையைத் திறந்தார். களங்கண்டியும் நன்றாக நடந்தது, கடையும் நன்றாக நடந்தது. கடை பற்றிய ஒரு சுவாரஸ்யம் சொல்லியே ஆகவேண்டும். ஊர்ச் சனங்களுக்கு நிறையக் கடன் கொடுத்து விட்டார். அன்றாடம்காய்ச்சி மீனவக் கிராமத்துச் சனங்களால் அவற்றைத் திருப்பித் தரமுடியாது என்பது ஐயாவுக்கு நன்றாகவே தெரியும். தவிரவும் கிராமத்தார் எல்லோருமே ஒவ்வொரு வகையில் இரத்த உறவினர்கள். ஒரு நாள் நான் படசாலை விட்டு வந்து கடையில் நின்றுகொண்டு ஐயாவை வீட்டுக்குச் சாப்பிடுவதற்காக அனுப்பினேன். சாப்பிட்டுவிட்டு மாலை மீண்டும் கடைக்கு வந்த ஐயா மேசை லாச்சியைத் திறந்தார் நிலுவைக் கணக்குப் புத்தகங்கள் மூன்றையும் எடுத்தார், கடை முற்றத்தில் போட்டார், மண்ணெண்ணைக் கரண்டியால் எண்ணையை நிரப்பி அவற்றின்மேல் ஊற்றினார், நெருப்புக் குச்சியத் தட்டி வாயிலிருந்த த்ரீறோசஸ் சிகரெட்டை மூட்டிவிட்டு கணக்குக் கொப்பிகளின்மேல் போட்டார். ஆட்டம் க்ளோஸ்.

ஐயாவின் கூட்டாளிகள். நாரந்தனை கொர்னலியஸ் மாமா, கருகம்பனை கந்தையா மாமா, அல்லைப்பிட்டி தாஸன் மாமா, கரையூர் பெரியதம்பி மாமா, திட்டி பேரின்பநாதன் மாமா, உரும்பிராய் திருமேனி மாமா, கொட்டடி பெரியசெட்டி மாமா. வருடத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் எங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வார்கள். அது ஒரு நத்தார்தினமாக இருக்கும், அல்லது எங்கள் கோயில் திருவிழாவாக இருக்கும். லயன்ஸ்லாகர் பியர்தான் எடுப்பார்கள். எட்டுப் போத்தல். இப்போ நினைத்தால் சிரிப்பாக வருகிறது. ஆளுக்கு ஒவ்வொரு போத்தல் பியரிலேயே உச்சிவானம் காலுக்கடியில் வீழ்ந்து கிடக்கும் அன்று இவர்களுக்கு.

இப்படித்தான் ஒரு நாள் தாஸன் மாமா ஐயாவைத் தேடி அவசர அவசரமாக வந்தார். தான் யாரோ சிலரோடு ஊரில் சண்டை எனவும் அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் தனக்கு ஆயுதங்கள் தேவை எனவும் ஐயாவிடம் சொன்னார். ஐயாவும் தனது வள்ளத்தில் இரண்டு மண்டாக்களை ஏற்றிக்கொண்டுபோய் அல்லைப்பிட்டியில் கொடுத்துவிட்டு வந்தார். அதிலிருந்து எதிர்ப்பார்டிக்காரர் தாஸன் மாமாவோடு கொழுவல் போடுவதில்லை. ஊரிலிருக்கும் எல்லா சாதியினரும் பார்த்து அச்சப்படும் ஒரு ஆயுதம். இரண்டு இரண்டரைப் பாகம் நீளமான மரக்கோலின் நுனியில் சூலம்போன்ற, ஆனால் சூலத்திற்கு இருப்பதுபோல் மூன்று முனைகள் அல்ல இரண்டு கூரிய முனைகள் மட்டுமே. இது கடல்தொழிலுக்கு பறிக்கூடு கடலில் வைக்கவும் எடுக்கவும், திருக்கை, சுறா போன்ற பெரிய மீன்களை குத்திப் பிடிக்கவும், தோணியில் நின்றபடியே கடலட்டைகளைக் குத்தி எடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம். எங்கள் ஊரில் அப்பப்போ சாதிக்கலவரம் வருவதுண்டு. அவர்களிடம் கமக்காவலுக்கென்று அனுமதி பெற்ற துவக்குகள் இருக்கும். ஆனாலும் எங்கள் கிராமத்தவரின் மண்டாவென்றால் அவர்களுக்கு பீச்சல் பயம். துவக்கையும் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். நான் சின்னனாயிருந்தபோது எனக்குத் தெரிய நடந்த ஒரு சாதிச் சண்டைக்கு ஐயாவின் ஏழு கூட்டாளிமாரும் கட்டுத்துவக்கு, நாட்டுவெடிகுண்டு, டைனமட், பாளைக்கத்தி, வாள், சுருள்வாள், திருக்கைவால் என நிறைய ஆயுதங்களோடு வந்து எங்கள் ஊர் எல்லையில் காவல் காத்திருக்கிறார்கள். என்னதான் ஆயுதங்கள் இருந்தாலும் மண்டாக் கம்புடன் எல்லைக் காவல் நின்றால்தான் ஊர்ச்சனங்களுக்கு தமது பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வரும். 

தாஸன் மாமாவுக்கு ஐயா மண்டாக்கள் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களில் திருமேனி மாமா வீட்டுக்கு வந்து ஐயாவோடு பெரிய வாய்த் தர்க்கம். ஏனென்றால் தாஸன் மாமாவோடு சண்டை போட்டது திருமேனி மாமாவின் சொந்தக்காரர்களாம். பின்பு இருவரும் சைக்கிள் எடுத்துக்கொண்டு தாஸன் மாமா வீட்டுக்குப் போனார்கள். ஏதோ பலகட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்து திருமேனி மாமாவின் உறவினர்களும் தாஸன் மாமாவும் சமாதானமானார்கள். அந்த வருடம் நாங்கள் ஐயாவின் எங்கள் தோணியில் துறைமுகத்திலிருந்து குடும்பமாக பாலைதீவு அந்தோனியார் கோயிலுக்குப் பயணமானோம். திருமேனி மாமாவும், பெரியையாவும் (ஐயாவின் அண்ணன்) எங்களோடு பாலைதீவுக்குப் பயணம் வந்தார்கள். போகும் வழியில் அல்லைப்பிட்டியில் தோணியை நிறுத்தி அங்கேயிருந்த அந்தோனியார் கோயிலில் மெழுகுதிரி கொழுத்திக் கும்பிட்டோம். கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த ஈச்சைமர ஓரத்தில் மூன்று கற்களை வைத்து அம்மா பொங்கல் காய்ச்சினார். ஊருக்குள் போன ஐயாவும், திருமேனி மாமாவும் தாஸன் மாமாவோடு திரும்பி வந்தார்கள். எங்கள் எல்லோரையும் தாஸன் மாமா தனது வீட்டுக்கு அழைத்தார். மாலையில் கொண்டல்காற்று வீசத் தொடங்கிவிடுமானால் குழந்தைகளோடு பாலைதீவுக்குச் சென்று சேர்வது கடினம், மீண்டும் வரும்போது கண்டிப்பாக வருவதாக வாக்குக் கொடுத்தார் ஐயா.

தாஸன் மாமாவோடு ஊருக்குள் போன பெரியையா கள்ளடித்துவிட்டு வந்திருந்தார். ஐயாவுக்கு கெட்டகொதி வந்துவிட்டது. குழந்தைகுட்டிகளோடு வெறியோடுள்ள பெரியையாவையும் கொண்டு தொடர்ந்து கடலோடுவதை ஐயா விரும்பவில்லை. இங்கேயே அந்தோனியார் கோயிலிலேயே இரவைக் கழித்துவிட்டு விடிகாலையில் போகலாமென்ற திறவு எடுக்கப்பட்டது. அம்மாவுக்கும் அது சரியென்று பட்டது. தாஸன் மாமா வீட்டுக்கு அவரோடு ஐயாவும் நானும் போனோம். தாஸன் மாமா வீட்டின் கோடிப்புறத்தில் கிடுகுகளால் மறைத்து கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன ஐயா கொடுத்த இரண்டு மண்டாக்களும். அன்றிரவு தாஸன் மாமா எங்களுடனேயே அந்தோனியார் கோயிலில் வந்து தங்கினார். அம்மா தயார் செய்துகொண்டுவந்த பயத்தம் அல்வா, பணியார வாளிகள் தோணியிலிருந்து இறக்கப்பட்டன. இரவிரவாக ஐயாவும் தாஸன் மாமாவும், திருமேனி மாமாவும், பெரியையாவும் பாடிக்கொண்டே இருந்தார்கள். பணியார வாளியில் திருமேனி மாமா மேளம் அடிக்க, கத்தி கரண்டி வைத்து தாஸன் மாமா தாளம் தட்ட, ஐயா பாடினார்.

சுக்கானி சந்தியோகு, மச்சான் சுவக்கீனாரு
காட்டுமதியினில் கம்புப் பறியிட்ட
நாட்டுக் கதையினை நானும் சொல்லவா
சொல்லாக் கதை இதுவே சனமே
சனமே சனமே சனமே....

முசுறாண்ட காடு ஏறி, மூக்குச் சத்தகம் காவி
ஈஞ்சு அறுத்துமே இளைத்த பறியினை
மாஞ்சு கடலடி போட்டு வைத்துமே
மறு நாளில் மீன் பிடித்தார் சுவக்கீன்
சனமே, சனமே சனமே சனமே....

புயலை அடக்கும் யேசு, ரசத்தைப் படைச்ச யேசு
பக்தன் சுவக்கீன் பறியை நிரப்பிட
ஓரவஞ்சனை செய்த தேனடா
வெறும்பறி மடிக் கனமே... சனமே, 
சனமே சனமே சனமே....

தோணி வங்கைத் துழாவி, தீர்வைக்கு மீன் திரட்டி
சேர்த்த காசினில் சாந்த செபஸ்தியான்
குந்த ஒருபெரும் கோயில் கட்டியே
கூனல் விழுந்தாரடா சுவக்கீன்
சனமே சனமே சனமே....

கூட்டாகக் கோயில் கட்டி, கும்பிட நாதி இல்லை
பீடம் முன்னிலே பிணைஞ்ச கதிரையை
சாதி குறைஞ்சவன் போட முடியுமா
மேற்றாணிகூட மேல்சாதி... சனமே,
சனமே சனமே சனமே....

கீழ்சாதி குந்திடவே, கோயிலுக் குள்ளே கோடு
மாஞ்சு கடலடி ஓடி உழைச்சவர்
காசில் மீன்செணி காண மறந்தனர்
தீண்டத் தகாதவராம் சுவக்கீன்
சனமே, சனமே சனமே சனமே....

சாதிக்கோர் கோயில் கட்டி, நீதிக்கோர் ஞானமூட்டி
நாலு புனிதரை நாலு சாதியாய்
ஆக்கித் தந்த எம் ஆண்டவர்களை
ஓசன்னா பாடிடுவோம்... சனமே,
சனமே சனமே சனமே....


ஐயா பாடி முடித்ததும் மேளம் அடிப்பதை நிறுத்திவிட்டு திருமேனி மாமா சிறிது நேரம் யோசித்தார். அமைதி அந்தோனியார் கோயிலடி வெள்ளை மணலை மூடிக் கிடந்தது. ”ஏன்ரா மச்சான், அந்தச் செபத்தியார் கோயில் உன்ர அப்பன் பேரன் கட்டினதுதானேயடா, பிறகிட்டு ஏனடா வெள்ளாளருக்கு விட்டுக் குடுத்தனீங்கள்...?” அமைதியைக் கலைத்து திருமேனி மாமா கேட்டார்.

”காத்தடி கடலடியில மரக்கல் பிடிச்சு, ரெத்தம் கொட்டி, குருவி சேர்க்கிறது மாதிரிச் சேத்து என்ர சனங்கள் கட்டின கோயில் மச்சான் அது. என்ர சனத்துக்கு நன்ம செய்யிறதெண்டு ஏமாத்தி வெள்ளாளப் பிசப்புகளும் கள்ளச் சுவாமி மாரும் சதி செய்துதான் அந்தக் கோயில வெள்ளாளருக்குச் சொந்தமாக்கினவங்கள். விடு மச்சான் அந்தக் கதய” அந்தக் கோயிலைப் பற்றிய கதைகள் வரும்போதெல்லாம் ஐயா கோபத்தின் உயரத்துக்கே போய்விடுவார். தொடர்ந்து கூத்துப் பாட்டுகளோடு அன்றைய சாமம் கடந்தது.

காலம் செல்லச் செல்ல ஐயாவுக்கும், ஐயாவின் ஏழு கூட்டாளிமாருக்குமான போக்குவரத்துகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தே போயின.
யுத்தம் எண்பத்திமூன்றிலிருந்து ஐயாவின் கூட்டாளிமாரை ஒவ்வொருவராய்த் தின்னத் தொடங்கியது.
எண்பது நடுப்பகுதியில் இயக்கத் தொடுசல்கள் கிடைத்து எண்பத்தியிரண்டு இறுதியில் மொத்தமாகவே வீட்டைவிட்டுப் போய்விட்டேன். அதன்பின் நீண்டகாலம் ஐயா அம்மாவை நான் பார்க்கவில்லை.

கொழும்பில் ஒரு புடவைக் கடையில் வேலை செய்து வந்த கந்தையா மாமாவின் மகன், மகள் இருவரையும் எண்பத்துமூன்று ஆடிக் கலவரத்தில் வெட்டிக் கொன்றுவிட்டார்கள். அந்த அதிர்ச்சி தாங்கமுடியாமல் கந்தையா மாமா நெஞ்சடைப்பால் இறந்து போனார் என்ற தகவலை நான் அறிந்தேன். அதே வருடம் இறுதியில் குருநகர் ராணுவமுகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்ட பேரின்பநாதன் மாமாவும் இன்னமும் வீடு திரும்பவில்லை. எப்போதும் திரும்பப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். 84தொடக்கத்தில் புலிகள் உரும்பிராய்க்குள் கூட்டம் வைக்கப் போன இடத்தில் அந்த ஒடுக்கப்பட்ட சனம் நிறையக் கேள்விகள் கேட்டு கூட்டம் வைக்க விடவில்லை என்ற கொதியில் உரும்பிராயை அண்டிய பலாலிவீதியில் கண்ணி வெடியைப் புதைத்துவைத்து வெடிக்கவைத்து ஓடி விட்டார்கள். வேகரம் கொண்ட ராணுவம் அன்று அந்தப் பகுதியை துவம்சம் செய்தது. கோண்டாவிலில் இருந்து உரும்பிராய் நோக்கி சைக்கிளில் வந்துகொண்டிருந்த திருமேனி மாமாவை நெத்திமுட்டாக எதிர்கொண்ட ராணுவம் சுட்டுக் கொன்றது. அந்தத் தாக்குதல் உரும்பிராய்ச் சனத்துக்கு அழிவு வரவேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டதுதான். இந்த வடிவத்திலான தாக்குதல்கள் அவர்களுக்கு ஆதரவு தராத பல இடங்களில் நடந்தன. அதற்கான போர்த்தந்திர விளக்கங்களும் நியாயங்களும் பின்நாளில் அவர்களால் சொல்லப்பட்டது. ஐயாவின் கூட்டாளிமார் ஒவ்வொருவராய்க் குறைந்துகொண்டு போனார்கள். அல்லது யுத்தம் அவர்களை வாழைக் குலையிலிருந்து ஒவ்வொரு பழமாகப் பிடுங்கிப் போட்டதுபோல் பிய்த்தெறிந்துகொண்டிருந்தது.

முன்பெல்லாம் ஐயாவின் கூட்டாளிமார் எங்கள் வீட்டில் கூடும் காலங்களில் கந்தையா மாமாவுக்கும், பெரியசெட்டி மாமாவுக்குமிடையில் ஒரு செல்லச் சண்டை நடக்கும். அதுவும் என் பொருட்டு. கந்தையா மாமா தனது மகள் சாந்திக்கு என்னைக் கட்டி வைப்பதாகவும், பெரியசெட்டி மாமா தனது மகள் மேகலாவுக்குக் கட்டி வைப்பதாகவும் போட்டி போட்டுக் கொள்வார்கள். அதேபோல் எனது தங்கையின் பொருட்டு, அவளை யார் வீட்டு மருமகளாக்குவது என்பதில் பெரியதம்பி மாமாவுக்கும், பேரின்பநாதன் மாமாவுக்குமிடையில் சண்டை நடக்கும்.

இந்தியன் அமைதிப்படை யாழில் நிலைகொண்டிருந்த காலம். தீவுப்பகுதிக்குள் புகுந்த அமைதிப்படை புளியங்கூடலில் பனையிலிருந்து கள்ளுச் சீவிக்கொண்டிருந்த கொர்னலியஸ் மாமாவை அப்படியே வைத்துச் சுட்டது. அசோகா ஹோட்டலுக்குக் குண்டெறிய வந்தவர்கள் தப்பிப்போக தனது படகைக் கொடுத்து உதவினார் என்ற குற்றம் சுமத்தி பெரியதம்பி மாமாவை ஈபிஆரெலெவ் தூக்கிக்கொண்டுபோய் பட்டப்பகலில் சுட்டது. மரக்கறி வியாபாரம் செய்துவந்த பெரியசெட்டி மாமாவின் சி.90 சைக்கிளை வரதனின் ஆட்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அதைக் கேட்டு வாங்குவதற்காக அசோகா ஹோட்டலுக்கு நாயாய்ப் பேயாய் அலைந்தார் பெரியசெட்டி மாமா. இதைத் தீர விசாரிக்காமல் வரதனின் கூலிப்படை என்று சொல்லி கொட்டடியில் வைத்து சுட்டார்கள் புலிகள். ஐயாவின் கூட்டாளிகள் மிகக்
குறுகிய காலத்துக்குள் தொலைந்து போனார்கள். தாஸன் மாமா குடும்பம் எங்கே இருக்கிறது, இருக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் ஐயாவுக்குத் தெரியாது. நீண்ட காலம் தொடர்புகள் அற்று இருந்ததால் எங்கே யாரிடம் விசாரிப்பதென்பதும் தெரியாது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியலையும் சீவியம் துரத்திக்கொண்டே இருந்தது.

மூத்தவளும் இளையவளுமாக பொரிச்சமீன் துண்டுகளை மெழுகுப் பையில் போட்டுக் கட்டினார்கள். இரண்டு லீட்டர் ஐஸ்கிறீம் அடைத்துவரும் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து பக்குவமாக மூடிக் கொண்டார்கள். பின் அதனையொரு மெழுகு பையிலிட்டுக் கட்டிக் கொண்டார்கள். யாருடைய பயணப் பெட்டிக்குள் அதை வைப்பதென்ற சண்டை அரைமணி நேரமாக நடந்தது.  இளையவளின் பெட்டியில் வைப்பதான தீர்மானத்தை இறுதி முடிவாகத் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். ஐயாவின் செயற்கைக் காலுக்கான காலுறைகளை மூத்தவளின் பெட்டியில் வைத்துக் கொண்டு
வருவதாகவும் தீர்மானமானது.

ஐயாவுக்கும் அம்மாவுக்கும் தலைகால் புரியாத மகிழ்ச்சி. பேரனையும், பேத்திமார் இருவரையும் தனது இறகுக்குள்ளேயே வைத்திருந்தார் ஐயா. பொரிச்சமீன் துண்டுகளை சுவைத்துச் சாப்பிட்டார். சாப்பிடும்போது கண்கள் கலங்கினார். அழுதழுது சாப்பிட்டார் பொரிச்சமீன் துண்டுகளை. ”கும்ப்ளா மீன்” என்றார். ”இல்லை அப்பப்பா, இது மக்ரல்” என்றாள் இளைவள். ”அடி போடி மடைச்சி, எனக்கே மீன்வக சொல்லித்தாறியா, இது கும்ப்ளா” ஐயா பிடிவாதமாக நின்றார். ”அப்பப்பா, இது மக்ரல் அப்பப்பா....” மூத்தவளும் வாதாடினாள். ”பேந்தும் பாரடா ரெண்டு பொடிச்சியளயும்.... இது கும்ப்ளா. சொன்னாக் கேளுங்கடி” மூத்தவளும் இளையவளும் ஆளையாள் பார்த்து முழிசியடித்தார்கள். இடையில் நான் தலையிட்டேன் ”ஐயா, இது கும்ப்ளா இனம்தான், அண்ணன் தம்பி. ஆனால் கும்ப்ளாவைவிட இது மூணூ நாலு மடங்கு பெரிசா வளரும்” எனச் சொல்லிவிட்டு எனது மடிக்கணனியை எடுத்து போன வருடம் மூத்தவனும் மூத்தவளும் மக்ரல்மீன் பிடித்த வீடியோவைக் காட்டினேன். ”ஓமடா தம்பி, இது பெரிசா உருண்டையாத்தான் இருக்கு...” என ஏற்றுக் கொண்டார். இப்போ மூத்தவளும் இளையவளும் ஐயாவைக் கிண்டல் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

கானத்தூர் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றார். மூவரோடும் சேர்ந்து ஐயாவும் ஒற்றைக் காலால் நீச்சலடித்தார். ஐயா ஒற்றைக் காலால் நீச்சலடிப்பதைப் பார்த்து மூத்தவளும் இளையவளும் அதிசயித்தனர்.

தமிழகத்தில் எங்கெங்கு சென்று வருவதென்ற ஒரு முன்னேற்பாட்டோடுதான் இங்கிருந்து புறப்பட்டோம். ஆனால் அத்தனை திட்டங்களையும் ஐயா குலைத்துப் போட்டார். அவரொரு சுற்றுலாத் திட்டத்தை வைத்திருந்தார். எங்களால் எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. அன்னை வேளாங்கண்ணி கோயில், வில்லியனூர் மாதாங்கோயில், பூண்டி மாதாங்கோயில், அந்த அந்தோனியார் கோயில், இந்த சவேரியார் கோயில் என எல்லாமே யாத்திரிகப் பயணத் திட்டமாயிருந்தது. தட்ட முடியவில்லை. ஆனால் ஆங்காங்கே தங்கி நிற்கும் நாட்களைக் குறைத்தோம்.

ஐயாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் ஐயா போட்டு வைத்த சுற்றுப் பயணங்களை முடித்துக்கொண்டோம். மீண்டும் கானத்தூர் திரும்பியதும் அந்தச் செய்தி கிடைத்தது. எனது நண்பனும் எழுத்தாளனுமான சக்திகாளியனின் தந்தை சென்னையில் இறந்து விட்டார் என்றும், அவரது இறுதி விடையங்கள் செய்ய அவன் வந்து நிற்கிறான் என்றும். தேடிப்பிடித்து அவனோடு தொடர்பு கொண்டபோது தகவல் தந்தான் நாளை பிரேத அடக்கம் என்று. மறுநாள் அடக்க நிகழ்வுக்கு நானும் மூத்தவனுமாகப் போய் வந்தோம். நான்கு நாட்களுக்குப்பின் நாம் தங்கியிருந்த ஐயாவின் வீட்டுக்கு கானத்தூரில் வந்து சந்திப்பதாகச் சொல்லி சக்திகாளி விடை தந்தனுப்பினான்.

ஐயா கூழ் காய்ச்சி முடிந்திருந்தது. ஒடியற்கூழ் காய்ச்சுவதில் ஐயா வலும் விண்ணன். அவரது கைப்பக்குவம் அம்மாவுக்கும் வராது. அம்மா திறமான சமையற்காரி என்றாலும் ஒடியற்கூழ் காய்ச்சுவதில் ஐயாவை அடிக்க முடியாது. சக்திகாளியும் வந்துவிட்டான். இருவரும் ஆளுக்கொரு போத்தல் பியரைக் குடித்து முடித்தோம். அரைஅண்டா கூழையும் காலி செய்தோம்.

கோடிப்புறத்து வேப்பமர நிழலில் அமர்ந்திருந்து ஐயாவும் சக்திகாளியும் பேசிக்கொண்டிருந்தனர். நீண்ட நேரம். ஐயா தான் வாசித்த சக்திகாளியின் கதைகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

நான் இளையவளோடு எட்டுக்கோடு கீறி விளையாடிக்கொண்டு நின்றேன். சடாரெனத் திரும்பிப் பார்க்கையில் வேப்பமரத்தின்கீழ் சக்திகாளி மட்டும் தலையைக் குனிந்தபடி இருந்தான். ஐயாவைக் காணவில்லை. வீட்டின் மறுபக்கம் ஓடிச் சென்று பார்த்தேன். தென்னை மரத்தோடு தலையை மோதியபடி வீச்சுவாங்கலோடு பெருங்குரலில் அழுது கொண்டு நின்றார். கைத்தாங்கலாக ஐயாவைக் கூட்டிவந்து வீட்டுக்குள் உட்காரவைத்துவிட்டு, சக்திகாளியிடம் ஓடிச் சென்று என்ன நடந்தது என்று கேட்டேன்.

”சந்தோசமாப் பலதும் பத்துமெண்டு கதைச்சுக்கொண்டிருந்தவரடாப்பா, இடையில என்ர ஊர் எதெண்டு கேட்டேர், சொன்னன். அங்க தாஸனைத் தெரியுமோ எண்டு கேட்டேர். எந்தத் தாஸன் எண்டு கேட்டன், மண்டா தாஸன் எண்டு சொல்லுவாங்கள்.... அவர்தான் எண்டேர். அவர்தான் என்ர ஐயா, இப்ப செத்துப்போனவர் எண்டு சொன்னன். கொஞ்ச நேரம் ஒண்டும் பறயாமல் இருந்தேர். ஓத்துறுச் சண்டைக்கு என்ர கூட்டாளிமாரெல்லாம் பலி போட்டாங்கள், நாங்க ஒண்டர மனிசர் மட்டுந்தானே மிஞ்சியிருந்தம் எண்டு சொல்லிக்கொண்டு எழும்பி போயிட்டேர்” என்றான் சக்திகாளி. 

தாஸன் மாமாவின் சாவு வீட்டுக்கா போய்வந்தோம்...? ஐயாவின் ஏழாவது கூட்டாளியும் இல்லாமல் ஆகி விட்டார்.
இது யாரின் கதையுமல்ல, போரின் கதை!

(அல்லைப்பிட்டி அந்தோனியார் கோயிலில் ஐயா பாடும் பாடல் மெலிஞ்சி முத்தனுடையது) 

1 கருத்து: