புதன், 9 ஜூலை, 2014

மண்கணக்கு


 தமயந்தி (சிறுகதை 1997)


ராசதுரையப்பு புறப்பட்டுவிட்டார் என்பதை சுத்தமாய் விடியாத அந்த அதிகாலையிலும்கூட தெருமுழுவதும் அறிந்துகொண்டுவிட்டது. ராசதுரையப்புவின் காறிக் கனைக்கும் ஒலியில் விழித்துக்கொண்ட அயலட்ட நாய்களின் அன்புக் குரல்களும் ஊளையிடல்களும் அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டாரென்பதற்கு கட்டியம் கூறும். இது வழமை. நீண்டகால வழமை.

ராசதுரையப்புவுக்கும் அன்னபூரணம் ஆச்சிக்கும் பிள்ளைகள் இல்லை. அந்தக்குறையைத் தீர்க்கவும் மறக்கவும் கிராமத்துப் பிள்ளைகளில் பாசத்தையும் பரிவையும் வழங்கினார். தாராளாமாகவே அள்ளி வழங்கினார்.


 பாடசாலை முடிந்து திரும்பும் குழந்தைகளை பாடசாலையின் வாயிலில் நின்று எதிர்கொண்டு எல்லோருக்கும் பணிஸ், இனிப்பு என்று தினமும் கொடுப்பார்கள். விழிகள் கலங்க மகிழ்வார்கள். இதனால் நிகழ்ந்ததெல்லாம் ராசதுரையப்புவுக்கென இருந்த பென்னாம்பெரிய தென்னங்காணி, அதற்குள் அமைந்த பெரிய கல்வீடு என எல்லாம் இழந்ததுதான். பின் கொஞ்சக் காசுக்கு வாங்கிய ஒரு சிறு துண்டு கலட்டுக்காணிக்குள் குடிலமைத்து தமது மீதிச் சீவியத்தை நகர்த்தி வந்தனர். அன்னபூரணம் ஆச்சியின் இறுதி மூச்சும் இந்தக் குடிலுக்குள்தான் காற்றில் பரவியது.

காலை ஐந்து மணிக்கெல்லாம் ராசதுரையப்பு தனது வேலைத்தளத்தில் பிரசன்னமாகிவிடுவார். மண்கும்பான், மணல் வெட்டும் தளம். மண் முதலாளியொருவரிடம் ராசதுரையப்பு கணக்காளர். எத்தனை லோட் ஏற்றப்படுகிறதென்பதை சுட்டிக் கல்லிலெண்ணிக் கணக்கிட்டு முதலாளியிடம் ஒப்புவிப்பது. அவருக்குக் கிடைக்கும் தினக்கூலி ஐந்து, பத்தில் அவரது காலம் ஓடிக்கொண்டிருந்தது.

ராசதுரையப்பு இப்போ தனியன். மூன்று வருடங்களின் முன் மனைவி அன்னபூரணம் இறந்துபோனபின் அவருக்குத் துணையாயிருந்தது வீரன் மட்டும்தான். அன்னபூரணம் ஆச்சி சாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் பால்குடி மறவாத குட்டியாய் சிப்பியெடுத்த கிடங்கிலிருந்து வீரனை மீட்டெடுத்து வந்து தங்கள் பிள்ளைக் கலியைத் தீர்த்துக் கொண்டார்கள். இப்போ அவனும் செத்துப்போனான். செத்துப்போனான் என்பதைவிட சாகடிக்கப்பட்டான் எனாலாம். வயிற்றிலொன்று, கழுத்திலொன்றாக இரண்டு சூடு. யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள் என்பதெல்லாம் சுட்டவர்களுக்கு மட்டுமல்ல, அந்த சுற்றாடல் பூராகவே தெரியும். ஆனாலும் ''புண்ணியத்தில புழுத்துப்போன'' மண்ணின் பெயரால் யாருக்குமே தெரியாதாம் வீரனை யார் சுட்டார்களென்று.

ராசதுரையப்புவின் குடிலைத்தாண்டி நாலு எட்டு வைத்தால் காப்பலேந்தி மாதா கோயில். சொல்லிக் கொள்ளுகிற மாதிரி எந்த வருமானமுமில்லாத மாதாங்கோயில் அது. மாதாவின் முன்றலில்  இருக்கும் மர உண்டியலை ஐந்து சதம், பத்துச் சதம் அல்லது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்தைந்து சதம் , ஐம்பது சதம் யாராவது கிழடுக்கட்டைகளின் முந்தானையிலிருந்து அவிழ்ந்து நனைக்கும். வருமானமில்லாத கோயிலுகளைக் கட்டியழவும் , மாரடிக்கவும் சுவாமிமாரும் தயாரில்லைத்தான். தினப் பூசையையோ வாரப் பூசையையோ மாதாந்தப் பூசையையோ சீவியத்தில கண்டிராத ஒரு சின்னஞ்சிறிய மாதாங்கோயில்.

முந்தியொருக்கால் புயலடித்தபோது புதுமை செய்ததனால்தான் இந்த மாதாங்கோயில் புயலில் தப்பிய ஒரு புண்ணியவானால் கட்டியெழுப்பப்பட்டதாம் என்று மக்கள் சொல்லிக் கொள்வார்கள். அந்த ஒரு புதுமையுடனேயே கப்பலேந்தி மாதாவின் ''பவர் முடிஞ்சுபோச்சுது போல'' என சனம் எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் கொழும்பு லொறிக்காரச் சிலுவைக்கு மாதா புதுமை செய்துபோட்டா. கொழுக்புக்கு கருவாட்டுச் சிப்பங்களை ஏறிக்கொண்டுபோன சிலுவையின் லொறியை வழியில் கத்தி, பொல்லுகளோட ரவுடியள் மறிச்சங்களாம். ''கப்பலேந்தி மாதாவே காப்பாத்து'' என சிலுவை மனதுக்குள் மன்றாடிக் கொண்டாராம். மறிச்ச ரவுடியள் காசுப்பையை மட்டும் பறித்துக்கொண்டு சிலுவையையும் ட்றைவரையும் உயிருடன் விட்டாங்களாம். கப்பலேந்தி மாதாதான் தன்னைக் காப்பாற்றினார் என்று முற்றுமுழுதாய் நம்பிக்கொண்ட சிலுவை குடும்பத்தோடு கோயிலுக்கு வந்து பத்துப்பவுண் சங்கிலியை மாதாவுக்குப் போட்டார். வீரன் சாகடிக்கப்பட்டதற்கு இந்தப் பத்துப்பவுண் சங்கிலியே காரணமாகிவிட்டது. மாதாவின் கழுத்தில் பத்துப்பவுண் சங்கிலி கிடப்பதைக் கேள்விப்பட்ட ''ஏரியாப் பொறுப்பாளர்'' இரவோடிரவாய் தனது சகாக்களுடன் சென்று சங்கிலியை எடுத்துக் கொண்டு வரும்போது வீரன் சத்தம் போட்டிருக்கிறது. அந்தச் சத்தமே அதன் இறுதிச் சத்தமாயும் போய்விட்டது.

ராசதுரையப்புவுக்கு வீரன்தான் எல்லாம். எந்த நேரமும் வீரனோடு ஓயாமல் கதைத்துக் கொண்டேயிருப்பார். வீரனும் அவரது எல்லாக் கதைகளையும் செவிகளை ஆட்டி ஆட்டி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும். யோசிக்கும், அனுதாபமாய் ஊளையிடும், கோபமாய்க் குரைக்கும், நேசமாய் அனுங்கும். ராசதுரையப்புவின் மடிக்குள் தலையைப் புதைத்து ஆதார ஒத்தடம் கொடுக்கும், சமயங்களில் அழும், அழத்தெரிந்தது போலவே ராசதுரையப்புவின் ''முசுபாத்திக்'' கதைகளைக் கேட்டு அது சிரிக்கவும் செய்தது. விழுந்து விழுந்து சிரிக்கும், புழுதியில் புரண்டு புரண்டு சிரிக்கும், இங்குமங்குமாய் ஓடியோடிச் சிரிக்கும். இப்போது அதன் சிரிப்பும், கோபமும், அழுகையும் மட்டும்ல்ல உயிரும் அடங்கித்தான்போனது. ராசதுரையப்புவுக்கு சொற்களிலளவிடமுடியாத துயரம். மனைவி மட்டுமல்ல மகன் வீரனையும் இழந்த துயரல்லவா?

ஊராரின் ''மெல்லப்போசு'' முறைமைகளிலிருந்து ராசதுரையப்புவிக்கு சாடைமாடையாகத் தெரியும் வீரனை யார் சுட்டார்களென்று. அதுதான் ராசதுரையப்புவுக்கு இன்னும் கவலை. ராஜ், அந்த ஏரியாப் பொறுப்பாளர். பாடசாலை முடிந்ததும் ராசதுரையப்புவின் பணிஸ் வாங்கவென்றே முண்டியடித்து எல்லோருக்கும் முன்னாய் ஓடி, தனக்கும் தன் தாய்க்குமாய் ராசதுரையப்புவிடம் அல்லது அன்னபூரணம் ஆச்சியிடம் பணிஸ் பெற்றுக்கொண்ட அந்தோனிதாசன் என்ற அந்த சிறுவன், இன்று ராஜ். ஏரியாப் பொறுப்பாளர். அந்தோனிதாசன் கைக்குழந்தயாய் இருந்தபோதே அவனையும் தாயையும் விட்டு ஓடியவன்தான் தந்தை. இன்றுவரை திரும்பவேயில்லை. சிப்பி லொறிக்காரனிடம் சிப்பிக்கிடங்கின் மறைவில் அந்தோனிதாசனை ''வயித்தில வாங்கிப்போட்டாள்'' என்பதுதான் அவனது குற்றச்சாட்டு. கொழும்பில் அவன் வேறொரு கலியாணம் செய்து குடும்பமாயிருக்கிறான் என்று கேள்வி. கணவன் ஓடிய பின் அந்தோனிதாசனை வளர்த்து ஆளாக்க அவன் தாய் மரியம்மா பட்ட பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாவத்துக்கிரங்கி ராசதுரையப்பு  முன்பு கொடுத்த பத்துத் தென்னைகளடங்கிய ஒரு சிறுதுண்டு காணிக்குள் மகன் அந்தோனிதாசனோடு வாழ்வை நகர்த்தி வந்தாள். இப்போ அந்தோனிதாசன் அந்த ஏரியவுக்கே பெரியாள். இப்போது அவன் அந்தோனிதாசனல்ல. ராஜ்.

தினமும் தான் ஆசையாசையாய் முத்தமிட்டு வளர்த்த அந்தோனிதாசன் கம்பீரமாய், வீரனாய ஊருக்குள் பெரிய பெயரோடு இருக்கிறான் என்பதை எண்ணும் போது ராசதுரையப்புவுக்கு சரியான சந்தோஷந்தான் . அதேபோல் தன் மகன் வீரனை அந்தோனிதாசன் கொன்றான் என்பதை எண்ணும் போது அப்புவுக்கு சோகத்தின்மேல் சோகம், கோபத்தின்மேல் கோபம். ராசதுரையப்பு வேலைத்தளத்திற்கு வந்து விட்டார். மண் வெட்டும் வேலையாட்கள் பனை வடலிகளின் மெலிந்த நிழல்களுக்குள் தம்மை இருத்தி வைத்திருந்தனர். ட்ராக்டர்களும் அப்படி அப்படியே நின்றன. ''தாங்க வருமட்டும் மண்ணெடுக்க வேணாமெண்டு ஓடர்'' கூட்டத்திலொருவன் சொன்னான்.
''ஏனாம்?" ராசதுரையப்பு கேட்டார்.

''ஏதோ வரிக்கணக்குப் பிழையாம்!" இன்னொருவன் சொன்னான்.
ராசதுரையப்புவுக்கு ஓரளவு விளங்கி விட்டது. மண்முதலாளி குறைந்த லோட் கணக்குக் காட்டி பொடியளுக்குக் கொடுக்க வேண்டிய வரியில் விழுங்கிவிட்டான். '' பொடியளென்ன லேசுப்பட்டவங்களே? மணந்து மணந்து களவப் புடிச்சுப்போடுவாங்கள். மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து வீதியோரப் பனையடியில் நின்றது. இரு இளைஞர் இறங்கி வந்தனர்.
''ஆர்ரா இங்க கணக்குப்புள்ள?'' கம்பீரமாய் இறங்கிவந்த அந்த இளைஞன் அதிகாரமான குரலில் கேட்டான். பனைமர நிழலில் நின்ற ராசதிரையப்பு ''நான் தான் ஏன் ராசா?" என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார். அப்புவின் முன்றலில் வந்து தரித்தான் ராஜ் என்ற அந்தோனிதாசன். தனது தென்னங்காணிக்குள் பச்சைப் பிஞ்சாய் தாயோடு தஞ்சமடைந்த அந்தக் குருத்து. இப்போ நெடுநெடென்று நெடுத்து, நிகிர்ந்து, வீரனை விழுங்கிய வீரனாய்.

''நீதானா கணக்குப்புள்ள?'' அப்புவை அதட்டலாய்க்  கேட்டான்.
''ஓம் ராசா. என்ன நடந்தது.....'' அவனது கேள்வியில் பொதிந்திருக்கும் மர்மம் அறியாதவராய் அப்பு கேட்டார்.
''எங்களுக்கே கள்ளக்கணக்கா.....? கேட்டபடியே அவனது வலக்கரம் அவனது இடப்பக்க இடுப்பை தேடிச்சென்று அதை உருவியது.
வெடித்தது!
வெடித்தது!!
வெடித்தது!!!
மூன்று சத்தம்.
மூன்று தோட்டா.
மூன்று பொட்டு.
ராசதுரை அப்புவின் இரத்தத்தை மண் குடித்தது.
மண்கணக்கு சரிசெய்யப்பட்ட திருப்தியோடு மோட்டார்சைக்கிள் சிரித்துக் கொண்டு பறந்தது.

நன்றி: கண்ணில் தெரியுது வானம்

1 கருத்து: