-தமயந்தி- சிறுகதை/ 1993
நாளை சனிக்கிழமை. தாய்மொழிக் கல்வி புகட்டும் தமிழ்ச்சிறுவர் பாடசாலை. சென்ற கிழமை மகனின் ஆசிரியை ஆளுக்கொவ்வொரு சிறுவர் பாடலை வீட்டில் பெற்றோரிடம் கேட்டுப் பாடமாக்கி வரும்படி கட்டளையிட்டுள்ளார். கார்த்திகாவுக்கு நேரமில்லை. புகுந்த நாட்டு மொழியைப் பொறி பறக்கக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் அவள். அத்தோடு பகுதி நேர வேலையாக ஒரு சிறுவர் பூங்காவை சுத்திகரிக்கும் சிலமணிநேர வேலை. இரண்டுமே செய்தாகத்தான் வேண்டும். இந்த இரண்டில் எந்தவொன்றையும் அவளால் தியாகம் செய்ய முடியாது. இந்த நாட்டில் வாழ்வதென்பது மொழியறிவற்று முடியாத காரியம். அதனால் மொழி கற்றுக்கொள்வதை இடையில் நிறுத்தவோ குறைக்கவோ முடியாது.
சாதாரண இருமலென்று வைத்தியரிடம் சென்ற ஒரு புதிய தமிழ் அகதிக்கு மொழிபெயர்த்த தமிழ் மொழி பெயர்ப்பாளர், வைத்தியர் கூறியது புரியாமல் "கான்சராம் உனக்கு" எனத் தவறாக மொழி பெயர்த்து அந்த அகதியைக் கதி கலங்க வைத்ததும், இன்னோரிடத்தில் புதிய அகதிகளுக்கு நோர்வேயின் சுருக்கமான விபரங்களைப் பற்றி அதிகாரியொருவர் விளங்கப்படுத்துகையில், நாற்பது லட்சம் சனத்தொகையைக் கொண்ட நாடு நோர்வே என்பதை நான்கு லட்சம் சனத்தொகையைக் கொண்ட நாடு நோர்வே என்றும் மொழி பெயர்த்த எமது தமிழ் மொழி பெயர்ப்பாளர்களின் சாதனைகளைக் கேள்விப்பட்டபின் கார்த்திகாவுக்கு, மொழியறிவு கட்டாய அடிப்படைத் தேவைகளில் ஒன்றென்ற முடிவுக்கே வந்துவிட்டாள். அடுத்து, சிறுவர் பூங்கா சுத்திகரிக்கும் வேலை. இதை நிறுத்தவே முடியாது. சுந்தரேசன் செய்துவந்த ரெஸ்ரோரண்ட் வேலையையும் இப்போது பாதியாகக் குறைத்து விட்டார்கள். அவனது வருமானம் சாப்பாட்டிற்கெனில். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், என்பவற்றையேனும் சமாளிக்க கார்த்திகா இந்த வேலையைச் செய்தேதான் ஆகவேண்டும்.
இந்த இயந்திரத் தனமான நகர்வுக்குள் மகன் மாறனின் அலுவல்களில் நேரம் ஒதுக்குவதென்பது இருவருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் எல்லாவற்ரையும்விட மிக முக்கியம் மகனின் வளர்ச்சி பற்றியதென்பதுதான் என்ற முடிவில் இருவரும் உறுதியாயிருந்தனர். மிகவும் பிரயத்தனப்பட்டு இருவரும் நேரங்களை மகனுக்காக ஒதுக்கிக் கொண்டனர்.
நாளை தமிழ்ப்பாடசாலையில் மகன் பாடிக் காட்டுவதற்காக "மாமா வீட்டு முற்றத்திலே...." என்ற பாடலைத் தேடியெடுத்து "அப்பாட்டக் குடுத்துப் பாடமாக்கு செல்வம்" என்றுவிட்டு சிறுவர் பூங்கா வேலைக்குச் சென்று திரும்பிய கார்த்திகாவின் காதுகளில் சுந்தரேசன் கூரியது விழுந்தது.
"கெட்ட மனுசன், குறைஞ்சது நூற்றியம்பது காயாவது ஆய்ஞ்சிருக்கும். அந்தப் பிள்ள கஸ்டப்பட்டு மணியடிச்சு அணிலுகளத் துரத்தினதாலதான் அவ்வளவும் மிஞ்சியிருக்கும். ஆனால் ஒரேயொரு மாம்பழந்தான் அந்தப் பிள்ளைக்கு மனுசன் குடுத்திருக்கு. பாவமந்தப் பிள்ளை. உது சரியான சுரண்டல். அந்தப் பிள்ளையின்ர உழைப்புக்கேத்த கூலி ஒரு மாம்பழந்தானா...? எங்களின்ர அப்பர் அம்மாவும் உந்தச் சுரண்டலத்தான் படிச்சுப் பாடமாக்கிச்சினம், நாங்களும் உதத்தான் சப்பினம், இப்ப என்னெண்டால் எங்கட பிள்ளையளுக்கும் உதத்தான் திணிக்கிறம். மாடா அடியனடிச்சு, உழைச்சு கொஞ்சச் சலுகயோடயே திருப்திப்பட வேணுமெண்டதுதான் உந்தப் பாட்டின்ர நோக்கம். உது சரிப்பட்டு வராது...."
"பிள்ளைக்குப் பாட்டச் சொல்லிக் குடுங்கோ எண்டால் உங்கட தத்துவங்களச் சொல்லி அறுத்துக்கொண்டிருக்கிறையள்"
"தத்துவங்களெண்டால் அறுவையெண்டே வழக்கமாப் போச்சு. உது தத்துவமில்ல, வாழ்க்க. வாழ்க்கைக்குத் தேவயான விசயம். உந்தத் தேவயான விசயத்த மறுதலிக்கிறதுதான் உந்த மாமா வீட்டு மாமரம், உதப் போய் பிள்ளைக்கும் திணிக்கிறது நல்லாயில்லக் கார்த்தி"
"அதுக்கு அவசரத்துக்கு என்னப்பா செய்யிறது? நாளைக்குப் பிள்ள ரீச்சரிட்டப் பாடிக் காட்டவேணும்"
"எங்கட அவசரத்துக்காக வாழ்க்கைக்கு முரணாகப் பிள்ளைக்குத் திணிக்கேலாது கார்த்தி"
"எனக்கு விளங்காமலில்ல, இப்ப பிள்ளைக்குச் சொல்லிக் குடுக்க நல்ல பாட்டுக்கு எங்க போறதாம்...?"
"நீர் கொஞ்சம் சத்தம் போடமலிரும், அவன் நாளைக்கு நல்ல பாட்டுப் பாடுவான்"
சனிக்கிழமை.
தமிழ்ப்பாடசாலை முடிவுற்றுப் பிள்ளைகள் வெளியேறிக்கொண்டிருந்தனர். தத்தமது பிள்ளைகளை அரவணைத்தும், ஆரத் தழுவியும், "என்ன படிச்சனீங்க இண்டைக்கு...?" என செல்லமாய் தமது பிள்ளைகளிடம் வழமையான ஒரேமாதிரியான கேள்வியைக் கேட்டபடி பிள்ளைகளைக் குளிருடைக்குள் திணித்தபடியும், திணித்து முடித்தோர் கார்களில் ஏற்றி பாதுகாப்பு பெல்ட் பூட்டியபடியும் பெற்றோர் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். கார்த்திகா மகன் மாறனை எதிர் பார்த்தபடி வெளியில் காத்து நின்றிருந்தாள். இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றது பஸ்ஸிற்கு. இந்த பஸ்ஸை விட்டால் இனி ஒரு மணி நேரம் கழித்துத்தான் அடுத்த பஸ் வரும்.
ஆசிரியை மாறனை ஒரு கையிலும், மறு கையில் ஒரு பேப்பர் துண்டுடனும் வெளிப்பட்டார். "இங்க பாருங்கோ கார்த்திகா, இது அவ்வளவு நல்லதில்ல. மற்றப் பிள்ளயளயும் கெடுக்கிற வேல இது. இதால வாற பிரச்சனைக்கு நான் தான் பதில் சொல்லவேண்டியிருக்கும். நிர்வாகம் என்னத்தான் கேள்வி கேட்கும். பெற்றாருக்கும் நான் தான் பதில் சொல்லவேண்டியிருக்கும். உங்கட அரசியல குழந்தயளின்ர பள்ளிக்கூடத்துக்குள்ளயும் கொண்டுவந்து பூர்க்காதேங்கோ"
ஆசிரியை பொரிந்து தள்ளிவிட்டு மாறனையும், அந்தப் பேப்பர் துண்டையும் கார்த்திகாவிடம் கொடுத்துவிட்டுப் போய்த் தனது காரில் ஏறி கதவை அடித்து மூடினார். கார்த்திகாவுக்கு எதுவும் புரியவில்லை.
"தாவிக் கரை வந்து மேவும் அலைகளில்
தேடி வருகுது ஒரு பாட்டு
தேடி வரும் அதில் நாடி எங்கேயென
தேடுதென் சிந்தையும் தாய் நாட்டை
வானை அளந்ததன் நீளம் அறிந்திட
வானத்தில் தாவுது என் மூச்சு/ தாவுமென்
மூச்சினில் ஆணிவேர் ஏதென
தேடுகில் தோணுதென் தாய் மண்ணே.
காற்று வெளிதனில் கேட்டிடும் சங்கொலி
வாவென என்னை அழைத்திடுதே
காற்றில் வருமொலி பற்றி நான் சென்றிட
றக்கை விரித்து விண் மேல் நடப்பேன்
வீசுது கீழ்த்திசை மீதினில் நின்றொரு
மெல்லிய தென்றலின் உயிர் மூச்சே
வீசிடும் தென்றலின் மூச்சினிற் கேட்குதென்
தேசத்தின் சுதந்திரத் தமிழ்ப்பாட்டே"
"அதுசரி உதென்ன வேல பாத்திருக்கிறியள்...? பிள்ளைக்குப் பாட்டுச் சொல்லிக் குடுங்கோ எண்டு சொன்னால் நீங்க என்ன எழுதிக் குடுத்திருக்கிறியள்? அங்க ரீச்சர் என்னோட ஏறி விழுகிறா. நாங்க மற்றப் பிள்ளயளயும் கெடுக்கிறமாம். பள்ளிக்கூடத்துக்க அரசியலத் திணிக்கிறமாமெண்டு குதிக்கிறா. எல்லாத்திலயும் உங்களுக்கு விளையாட்டா சுந்தா....?" மாறனின் சப்பாத்து உடைகளைக் களைந்தவாறே கோபமாய் சுந்தரேசனை வினவினாள். சுந்தரேசன் எதிர் பார்த்த விடையம்தான் இது.
"கார்த்தி..., நிதானம். ஏன் கோவிக்கிறீர்? நான் எழுதிக் குடுத்த உந்தப் பாட்டு உமக்கும் பிழயெண்டு படுகுதோ?"
"எங்களுக்குப் பிழயில்லாமல்த் தெரியலாம் ஆனால் உது மற்றவைக்கு பிழயாத் தெரிஞ்சால் நாங்கள் தவிர்க்கிறது நல்லதுதானே"
நீர் என்ன சொல்லுறீரெண்டது உமக்கு விளங்குதோ...? அல்லது விளங்காமல்த்தான் சொல்லுறீரோ? மற்றவைக்குப் பிழயாப் படுகுது எண்டதுக்காக எங்கட சரியளச் சாகடிச்சுப்போட்டு நாங்களும் பிழயாப் போகேலாது..."
"பொறுங்கோ சுந்தர், பள்ளிக்கூடமெண்டது எங்களுக்கு மட்டும் சொந்தமானதில்ல. பல பேரின்ர பிள்ளயள் அதில படிக்குதுகள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கு. தங்கட தங்கட பிள்ளயள எப்பிடியெப்பிடிப் படிப்பிக்க வேணும், எப்பிடியெப்பிடி வளக்க வேணுமெண்டு ஒவ்வொருத்தருக்கயும் ஒவ்வொரு விருப்பங்களிருக்கு...."
"அத நான் மறுக்கயில்லயே?! எங்கட பிள்ள எப்பிடி வளர வேணுமோ அதின்ர வெளிப்பாடுதான் உது. உதப் பிழயெண்டு சொல்லுறீரோ...?"
"..............."
"உதில வந்து அடிப்படப் பிரச்சன என்னண்டால், வெளி நாடுகளில வளர்ர எங்கட பிள்ளயளுக்கான பள்ளிக்கூடங்களுக்கெண்டு ஒரு சரியான பொதுப் பாடத்திட்டம் இல்லாததுதான்"
"சுந்தர்! இப்ப பொதுப்பாடத்திட்டம் இருக்கா இல்லையா எண்டதில்லப் பிரச்சன... இப்பிடியான சூழ் நிலைக்குள்ள தொடர்ந்து பிள்ளய தமிழ்ஸ்கூலுக்கு அனுப்பிறதா இல்லையாண்ட முடிவுக்கு வரவேணும் நாங்க"
"கார்த்தி, இப்பிடியான ஒரு சூழ்நில ஏன் உருவாகினது எண்ட கேள்விக்கு பதில் வந்து சரியான பொதுப் பாடத்திட்டம் இல்லாததுதானேயம்மா...? பிறகேன் பாடத்திட்டம் இருக்கா இல்லயா எண்டதில்லப் பிரச்சன எண்ட கேள்வியக் கேக்கிறீர்.?"
"இப்ப என்ன செய்யிறது...? சரியானது வரும்வர பிள்ளய வீட்டில வச்சிருக்கிறதா..."
"வேற வழியில்ல, பிள்ள எப்பிடி வளரவேணுமெண்டு நாங்கள் எங்களுக்குள்ள ஒரு கனவ வளத்துக்கொண்டிருக்க, அவன் அங்க போய் வேறமாதிரி வளந்து வந்து நிற்பான். இப்போதைக்குப் பிள்ள வீட்டில நிக்கட்டும். முடிஞ்சவர நாங்கள் சொல்லிக்குடுப்பம். நல்லமாதிரிச் சூழ்நில வரேக்க பாப்பம்"
"சுந்தர், பள்ளிக்கூடத்தில சொல்லிக் குடுக்கிறதவிட நாங்கள் திறமான முறயில நம்மட பிள்ளைக்கு தமிழச் சொல்லிக் குடுப்பம் எண்டதில எனக்குச் சந்தேகமுமில்ல, ஆனால் இப்ப மாறன் தமிழ் படிக்கிறதுக்காக மட்டும் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்குப் போகேல்ல, எங்கட சமுகத்த அறியாதவனா வளராமல் எங்கட சனத்த அறிஞ்சவனா வளரட்டுமெண்டுதானே அனுப்புறம்"
" உத இல்லயெண்டு இப்ப ஆர் சொன்னது? தமிழ்ச் சமூகத்த அறிய வேணுமெண்டு அனுப்பிற பிள்ள, நாளைக்கு மொத்தச் சமூகத்துக்குமே உதவாத கருத்தோட வளந்தால் என்ன செய்யிறது....?"
".............."
"கார்த்தி...! எதுக்கும் இன்னும் கொஞ்சக் காலம் அனுப்பிப் பாப்பம். நிலமயளப் பாத்து தொடந்து அனுப்பிறதா இல்லயாண்டதப் பற்றி யோசிப்பம்..."
"நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்"
அடுத்த சனி.
காலை பத்துமணி. சுந்தரேசன் வேலைக்குப் போய்விட்டான். கார்த்திகா வீட்டில் செய்யவேண்டிய காலை அலுவல்களை முடித்து விட்டாள். காலையில் சுந்தரேசன் நேரத்தோடு எழுந்து சமையல் பாத்திரங்களைக் கழுவி விட்டுச் சென்றிருந்ததால் அவளுக்கு வேலை குறைவாகவே இருந்தது. மாறனுக்குக் காலைச் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு, தமிழ்ப்பாடசாலை செல்வதற்காக அவனுக்கு உடையணுவித்தாள்.
"நான் பள்ளிக்குப் போக மாட்டன்..." மெல்லச் சிணுங்கியபடி கூறினான் மாறன். அவனது சிணுங்கலில் ஒரு பரிதாபமான கெஞ்சல் வெளிப்பட்டது. கார்த்திகா வியப்பானாள். வழமையாக தமிழ்ப் பள்ளிக்குப் போவதென்றால் ஆர்வமிகுதியால் துடித்துக்கொண்டு நிற்கும் பிள்ளை இன்று ஏன் இப்படி என்பது அவளது வியப்பில் கேள்விக்குறியாய் நின்றது.
"ஏன் குஞ்சு...? உங்களுக்குச் சரியான விருப்பமெல்லோ தமிழ்ப் படிக்க?" சப்பாத்துக்குள் அவனது காலையிட்டுக் கட்டியபடி சாந்தமாய்க் கேட்டாள்.
"தம்பி இனிப் போகமாட்டன். தம்பிக்கு விருப்பமில்ல" குழந்தையின் இந்த வார்த்தைகளுடன் அவனது கண்களும் மெல்லப் பனித்தன. கார்த்திகா ஏங்கிப் போனாள்.
"அங்க நிதர்சனண்ணா, சூட்டியக்கவின்ர கெளசல்யா, சாளினி, கோகுலன், பரிமளனண்ணா எண்டு தம்பியில நேசமான எல்லாரும் தமிழ்ப்பள்ளிக்கு வருவினம், தம்பியும் போவம் என்ன...?" குழந்தையைச் சமாளிக்க முயன்றாள். அவன் அழத் தொடங்கினான். அவனது விம்மல்களிடையே துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளை பொறுக்கியெடுத்து பிரயத்தனப்பட்டு விளங்கிக் கொண்டாள்.
"ரீச்... ஈ ச்சரர் எ எ.... என்ன்... என்னி... ல நே... ஏ ஏசமில் ல. தம்... த... ம்பிய... அவவுக்கு... பிடிக்... க்கயில்.... ல. தம்...பி பள்ளிக்கு இனி... போ... க..யில்ல...."
கார்த்திகா பதகளித்துப்போனாள். கண்கள் கசிந்தன. சிவந்தன. அவள்து சிவப்பேறிய விழிகளில் கசியும் நீர் இரத்தம் கசிவதைப் போன்றிருந்தது. கோபம் அவளுடலை வெப்பமாக்கியது.
"ச்சீ, என்ன மனுசர்....?" அவளது கோபமும் வெறுப்பும் இந்த வார்த்தைகளுடன் மட்டும் அடங்கிப் போனது. ஆனால் அவளொரு முடிவுக்கு வந்தவளானாள்.
மூன்றாம் சனி
நள்ளிரவு.
"எனக்குப் பயமாயிருக்கு சுந்தர், பிள்ள கண்டபடி உளர்ரான். காய்ச்சலும் நெருப்பாக் கொதிக்குது, சன்னி வந்தமாதிரி நடுங்கிறான்... சுந்தர்....! என்ன சுந்தா பேசாமல் இருக்கிறியள் எனக்குப் பயமா இருக்கு சுந்தா..." அவளது குரலை நடுக்கம் துளைத்தது. கண்களை இறுக மூடி நடுங்கியபடி படுக்கையில் கிடந்த மாறனின் தலையைத் தடவிக்கொடுத்தபடி சுந்தரேசனின் முகத்தையே பார்த்திருந்தாள் ஆறுதலான பதிலுக்காக.
"பயப்பிடாதேயும் கார்த்தி, அதொண்டும் பயமில்ல, உது சும்மா சாதாரண காய்சல்தான். அதோட கோகுலன், கெளசல்யா... இவயளக் கொஞ்ச நாள்ச் சந்திக்கவுமில்ல, அவங்களப் பற்றி ஏதாவது கனவு வந்திருக்கும் அதுதான் அவங்களின்ர பேருகளச் சொல்லிப் புலம்புறான். விடிஞ்சா எல்லாஞ் சரியாப் போயிடும். நீரந்தப் பரசெற்ற இன்னொருக்கால் குடும்"
"இப்பதான் குடுத்தனான்...." சுந்தரேசனின் பதில் அவளத் திருப்திப் படுத்தவில்லை.
"கெளசல்யா.... கோகுல்.... நேசனண்ணா.... நேசனண்ணா.... பரி... என்ர சாளி... என்ன விடுங்கோ... நான் கோகுலோட விளையாடப் போறன்.... என்ன விடுங்கோ... ரீச்சர் என்னில அன்பில்ல...." இப்போது மாறன் அதிகமாய் வாயுளறத் தொடங்கினான்.
"சுந்தர்! எனக்குப் பயமாக் கிடக்குது.... டொக்டரிட்ட ஒருக்கால் கொண்டு போவமா..." அவள் நடுங்கும் குரலில் சுந்தரேசனைக் கேட்டாள். சுந்தரேசனையும் இப்போ பயம் கவ்விக் கொண்டது. நீண்ட அமைதிக்குப் பின் "சூட்டியக்காவுக்கு ஒருக்கா அடிச்சுப் பாப்பம் கெளசல்யாவக் கொண்டுவரச் சொல்லி..." சுந்தரேசனின் விழிகள் கலங்க ஆரம்பித்தன. வார்த்தைகள் தரித்துத் தரித்துப் பிரசவமாகின.
"இந்தச் சாமத்தில அவயள் படுத்திருப்பினம்..."
"வேற என்னம்மா செய்யிறது...? அடிச்சுச் சொல்லிப்போட்டு ராக்ஸி பிடிச்சுத் தம்பிய நாங்க அங்க கொண்டு போவம்..."
தெரு வெளிச்சங்களெல்லாம் அவசர அவசரமாகத் தலை தெறிக்க ஓடின. இருளைப் பிளந்து பெருந்தெருவினூடு உருண்டுகொண்டிருக்கும் ராக்ஸிக்குள் அவர்கள். சுந்தரேசனின் மடியில் மாறன் தன் நண்பர்களது பெயரை ஒவ்வொன்றாய் உச்சரித்தபடி. இடையிடையே "ரீச்சர் என்னில அன்பில்ல..." என்ற வார்த்தைகளும் வெளி வந்தன. வேகம் குறைத்துக்கொண்ட ராக்ஸி கப்டன் ஊலாவ் தெருவுக்குள் நுழைந்தது. சூட்டியக்காவின் வீட்டின் மின் விளக்குகள் சன்னல்களூடாக மின்னின. "ரீ...ச்சர்... தம்பியில... அன்பில்ல... அவவுக்கு என்னப் பிடிக்க... யில்...ல" மாறன் மிகவும் சோர்ந்து போனான். இந்த வார்த்தைகள் மட்டும் ஏக்கமாய்க் கொட்டுண்டது தெரு நீளம்.
நன்றி: புலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு சிறப்பு மலர்,
நிறப்பிரிகை வெளியீடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக