திங்கள், 8 பிப்ரவரி, 2016

மீன்பிடித் தடைச் சட்டம் - விளப்பமற்ற ஆய்வுகளும், பொருத்தமற்ற சட்டங்களும்.




தற்போதைய இலங்கைச் செய்தி: 

"யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தடைவிதிக்கப்படவுள்ளது. தமிழக நடைமுறைகளை ஒத்ததாக மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான உள்ளூர் மீன்பிடி முறைமையான களங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் களங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமானது பாதிக்கப்படுகின்றது. அந்த களங்கட்டிகளைத் தாண்டியே காக்கைதீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்கள் வரவேண்டியுள்ளது.

அத்துடன், குடாக்கடலில் மீன்களின் படுகைகளும் குறைந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது."


மேலேயுள்ளது தற்போதைய செய்தி. இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. உண்மையாக இருக்கும் பட்சத்தில்.....
படு முட்டாள்த்தனமான முடிவு என்பது இதைத்தான். இத்தகைய ஆலோசனைகளை வழங்கும் அந்தக் கடல்வள ஆராய்ச்சி அறிவாளிகள் யாரென்பதை அறிய மிகுந்த ஆசையாக இருக்கிறது.

இவர்களது கடல்வள ஆராய்ச்சி செய்யும் மூளைகளைப் பிடுங்கி உப்பில ஊறப்போட.
சரி, அதைப் பிறகு பார்ப்போம். இப்போ இந்த 45நாட்கள் கடற்தொழில் செய்யத் தடை விதிக்கும் நடவடிக்கையின் விளைவுகளைக் கொஞ்சம் யோசிப்போம்.

ஏற்கனவே வடபகுதி மீனவர்கள் ஏழு மாதங்களுக்கும் குறைவான காலங்களில்தான் முழுமையான கடற்தொழில் செய்கிறார்கள்.  சோளகக் காத்தடி காலங்கள் 2மாதங்கள், கோடைகொண்டல் காலம் 1மாதம், பருவகால வாடைக்காற்று, மாரிமழை, கடற்பெருக்குக் காலம் 1மாதம், ஆனித்தூக்கம் 2வாரங்களிலிருந்து 6வாரங்கள் வரை.

இந்தக் காலங்களில் வடபகுதி மீனவர்கள் வாழ்வாதாரம் நொடித்து, அரைவயிறு, கால்வயிறுதான் சீவியம் நடந்து வருகிறது. தொழில் நடைபெறும் காலங்களில் புதிதாக வாங்கிய தொழில் உபகரணங்களை இந்த வறுமைக் காலத்தைச் சரிக்கட்ட கால்விலை, அரைக்கால் விலைக்கு விற்றும், கடன் பட்டும், வட்டி வாசிக்கு வாங்கியும்தான் வாழ்வே நடாத்துகிறார்கள்.
இந்த நிலையில், மீனவ மக்களின் வாழ்வாதாரம் சீரற்ற நிலையில் இருக்கும்போது இப்போ புதிதாக இப்படியொரு 45நாட்கள் தொழில் தடைச்சட்டம் போட்டால் எங்கே போவது இந்த மக்கள்.
சரி, கடல்வளத்தில் அக்கறையுள்ள அரசு அதில் கொஞ்சமாவது மக்கள் மீதும் அக்கறை செலுத்த வேண்டுமா இல்லையா...

அப்படியில்லை, நாடாளுமன்றக் கதிரைகளில் இருந்தால் ஏதாவது சட்டம் இயற்றித்தான் ஆக வேண்டும் என நினைத்து இப்படியொரு சட்டத்தை இயற்றுவீர்களானால், இந்தத் தடைக்காலத்தில் இந்த மக்களைக் காக்க வேண்டியதும் அவசியமல்லவா...
இந்தச் சட்டத்தைப் போடுவதற்குமுதல் செய்ய வேண்டிய கட்டாய பணி இந்த மக்களைக் காப்பதும்.

இந்தக் காலங்களில் தொழிற்தடைக்காலக் கொடுப்பனவை முதலில் அமுல்ப் படுத்தட்டும். அதாவது இந்தக் காலங்களில் வடபகுதி மீனவ மக்களுக்கு மிகக் குறைந்த வாழ்வாதாரக் கொடுப்பனவாக 10வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒருவருக்கு தினப் படியாக 200ரூபாவும், 10வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தினப்படியாக 300ரூபாவும், தவிர கல்விக் கொடுப்பனவாக 6ம் தரத்திலிருந்து மேற்படிப்பு மாணவர்களுக்கு ஒருவருக்கு கல்விநாட்களில் வாரத்துக்கு 500ரூபாவும் (திங்கள் முதல் வெள்ளிவரை உள்ள வாரத்தில் ஐந்து நாட்கள்) வழங்க சட்டம் அமுல்ப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொடுப்பனவுகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என்ற ரீதியில் வழங்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் அரசிடம் நிதி வசதி இல்லை என்ற காரணத்தை முன் வைத்தால்.... அதற்கும் இருக்கிறது மாற்று வழி. இந்த 45நாட்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களை ஒத்தி வையுங்கள். கோட்டைக்கு நல்ல இரும்புப் பூட்டாகப் போட்டுப் பூட்டி வையுங்கள். இந்த 45 நாட்களுக்கான மந்திரிகளின் அரச கொடுப்பனவு, சலுகைகளையும் நிறுத்தி வையுங்கள். இதனால் ஒன்றும் நாடு குடி முழுகப் போவதில்லைத்தானே. இதனால் மிச்சம் பிடிக்கும் பணத்தை இந்த மீனவ மக்களுக்கு 45நாட்கள் வாழ்வாதாரத்துக்குப் பிரித்துக் கொடுங்கள்.
மக்கள் முக்கியம் மந்திரிகளே, மக்கள் முக்கியம். மக்கள் உயிரோடு இருந்தால்தான் நீங்கள் மந்திரிகள். இல்லையெனில் சுடலையாய்ப் போன நாட்டைக் கட்டிக் காக்கும் பூதங்கள்.

தமிழ்நாட்டு அரசுக்கு தும்மல் வருகிறதென்பதற்காக நீங்களும் வலிந்து தும்ம வேண்டிய கட்டாயமில்லை.
அவர்களுக்குள்ளேயே படு முட்டாள்த்தனமான கடல்ச் சட்டங்களை வைத்திருக்கிறார்கள். கடலூருக்குள் பக்கத்துத்துறை மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது, கடலூர் மீனவர்கள் அடுத்த துறையை அண்டி மீன் பிடிக்க முடியாது. இப்படி அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே கடல்ச்சட்டங்களை வைத்து அரசியல்வாதிகள் குளிர் காய்கிறார்கள். அப்படியான முட்டாள் அரசு மோட்டுத்தனமான 45நாட்கள் கடற்தொழில் தடைச் சட்டம் போடுகிறது என்பதற்காக நீங்களும் ஏன் முக்குகிறீர்கள். அவர்களிடமுள்ள ராட்சத இழுவைப் படகுகளுக்கு அப்படிச் சட்டம் போடுவதைக்கூட ஒரு வகையில் சரி என்றே ஏற்றுக் கொண்டாலும்கூட, எமது மீனவர்களின் தொழில் முறையால் கடல்வாழ் உயிரின இனப்பெருக்கம் தடைப் படுகிறது என்ற காரணத்தை சொல்வதென்பது சுத்த அபத்தத்திலும் அபத்தம்.

காலகாலமாக எமது மீனவர்கள் பயன்படுத்திவரும் தொழில்முறைகள் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்குக் குந்தகமில்லாத முறைகளேயாகும். களங்கண்டியும் அப்படித்தான். மீன் முட்டைகள் குஞ்சுகள் எல்லாம் வலைக் கண்ணறைகளாய் வெளியேறி விடும். அத்தோடு இனவிருத்தியாகும் மீன் குஞ்சுக் கூட்டத்தைப் பாதுகாக்கும் மீன் வகைகளும் உண்டு. இதில் உதாரணத்துக்கு இரண்டைச் சொல்லலாம். கருமுரல், மற்றும் அடவிப் பாறைகளை அண்டி வாழும் வலியனோரா மீனினம். இவை களங்கட்டிப் பட்டிப் பொறிக்குள் உள் நுழைவதுபோல் மீள வெளியே வரவும் தெரிந்த மீன்கள். பொழுது எழுவதிலிருந்து, சாய்வதுவரை இவை களங்கட்டிப் பட்டிக்குள் பட்டாளமாக நுழையும், அங்குள்ள சிறுமீன் கூட்டத்தை தம் பின்னால் அழைத்துச் சென்றுவிடும்.
 இப்படியான ஏகப்பட்ட அதிசயமான உயிரினங்களைக் கொண்டதுதான் கடற் திரவியங்கள். இப்படி இந்த ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கடல்வழங்கள் பற்றிய புதினங்களோ ஏராளம்.
இங்கே நான் குறிப்பிட்டிருப்பது உதாரணத்துக்காக ஒரு சிறு தகவல் மட்டும்தான்.

எமது மீனவர்கள் முட்டாள்கள் இல்லை. கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலங்களையும், இடங்களையும் அறிந்தவர்கள். அதற்குப் பாதகமான எந்தத் தொழிலையும் அவர்கள் செய்வதில்லை. தமக்குச் சோறு போடும் கடல்வளத்தை அவர்கள் பாதுகாத்துக் காமேந்து செய்வதுபோல் எந்த அரசாலும், சட்டங்களாலும் செய்ய முடியாது என்பதை முதலில் ஆட்சியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் உணர்ந்தாக வேண்டும்.

அந்த மக்களுடையதான வாழ்வனுபவங்களை, தொழில் முறைகளை அவர்களோடு கூட இருந்து வாழ்ந்துதான் கண்டறிய வேண்டும் என நான் சொல்லவில்லை. அது உங்களால் யாராலும் முடியாதென்பதும் தெரியும். ஆனால் அவர்களிடையே களப்பணிகள் செய்வதன்மூலம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.

தவிர எமது கடல்வள ஆராய்ச்சி விண்ணர்கள் கற்பனை செய்வதுபோல் கடல்வாழ் உயிரினம் லூசுகளோ, மொக்குகளோ இல்லை. அவை தங்களது இனப்பெருக்கக் காலத்தையும், வளங்களையும் நன்றாகவே உணரக் கூடியன. காக்கைதீவுக்குள்தான் வந்து குட்டி போடுகிறது என்று கண்டுபிடித்த அந்த அண்ணாவியாரும், விண்ணாதி விண்ணர்களும் யார். அறிய மிகுந்த ஆசையாசையாக இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. காக்கைதீவுச் சேற்றுக் கடலுக்குள் இறால் இனங்கள் மட்டும் குறிப்பிட்டளவு விளையும். அது சூரிய வெப்பதில் தானாகவே விளையும் உயிரி. பெருமீன்கள் காக்கைதீவுக்குள் வந்து குட்டி போடுவதில்லை.

மீன், நண்டு, சிங்கறால் இனங்கள் ஏழாற்றுப்பிரிவு முகத்துவாரத் திடல்களிலுள்ள கற்பாறைகளையும், அடவிகளையும், நெருக்கமான தாளைகள் போன்ற தாவரக் காடுகளுக்குள்ளும், அடர்த்தியான சாட்டாமாற்றுக் கொத்தைகளுக்குள்ளும்தான் இனப்பெருக்கம் செய்யும். இவ்வகைப் பகுதிகளில் மீனவர்கள் எந்தத் தொழிலும் செய்ய முடியாது. மிகச் சில இடங்களில் மட்டும் பறிக்கூட்ட தவிர. பறிக்கூடு என்ற பொறிமுறைத் தொழிலால் இனப்பெருக்கத்துக்குக் கடுகளவும் பாதகமில்லை. 
ஏழாற்றுப் பாறைத் திடல்களைப் போல, கச்சைதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவுத் தெற்கு அடவித்தொடர், நயினாதீவு, புலியந்தீவு, அனலைதீவு, பருத்தீவு, எழுவைதீவுகளின் மேற்குப் பாறைத் தொடர், பாலைதீவு, மண்டைதீவுப் பாறைகளும். அந்தப் பாறைகளில் எந்த மீனவரும் தொழில் செய்வதில்லை. செய்யவும் முடியாது.


இந்தக் குடாக்கடல் சிறு தொழிலாளர்களுக்குத் தடை போட்டு இந்துசமுத்திரப் பிராந்தியக் கடல் வளங்களையும், இலங்கை கடல்வாழ் உயிரிகளையும் பாது காக்கப் போகிறோம் எனச் சொல்வது அடிப்படை அறிவுள்ள எந்தவொரு மனிதராலும் சொல்ல முடியாதது.

தமிழ்நாடு மீன்பிடித் தடை செய்கிறது என்பதற்காக நாங்களும் செய்யவேண்டும் என்ற கட்டாயமோ, தேவையோ இல்லை. முடிந்தால் இழுவைப் படகுகளுக்கு இரண்டு நாடுகளும் தடை செய்யுங்கள். அதுதான் சரியான கடல்வளப் பாதுகாப்புக்கான முடிவாக இருக்கும்.

அப்படி இல்லை, தமிழ்நாடு அரசு கோவணம் அவிழ்க்காமலே கக்கூசுக்கு இருக்கிறது நாங்களும் அப்படித்தான் இருக்கப் போகிறோம் என அடம் பிடிப்பீர்களானால்.... நான் முன்னுக்குக் குறிப்பிட்ட வாழ்வாதாரக் கொடுப்பனவை இந்த 45நாட்களும் மீனவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு தடையை அமுல்ப் படுத்துங்கள்.

இந்தத் தடையை நிச்சயம் மீனவர்கள் ஏற்கப் போவதில்லை.
தவிர, இப்படியான தடைச்சட்டம் மக்களை அரசுக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்யும்படியான நிலையை உருவாக்கும்.

தமயந்தி
08.02.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக