என்ன சனியனோதெரியா இண்டைக்கிக் காலமவெள்ளண விடிஞ்செழும்பினதிலேருந்து ஒரே பிடுங்குப்பாடாதன் கிடக்கு. இந்தமாசச் சம்பளத்தின்ர காவாசியக் கழிச்சுப் போட்டங்கள். சம்பளம் கணக்குப் பாக்கிறவளோடபோய் ஏனெண்டு விசாரிச்சால், அவள் சொன்னாள் பீங்கான் கணக்கெண்டு. போனகிழம கொட்டேல்ல கழுவேக்க தட்டுப்பட்டு அஞ்சாறு பீங்கான் நொருங்கிப்போச்சு. ஆனயின்ர விலபோட்டு அவ்வளவு பீங்கானுக்கும் பெரிய தொகயொண்டச் சம்பளத்தில வெட்டிப்போட்டாள். இப்படியே உழைப்பைத் தாரவாத்துக் குடுக்கிறதாப்போச்சுச் சீவியம். இந்தமாசப் பஜ்சட்டில கட்டாயம் இடி விழத்தான்போகுது. சம்பளக்காறியோட கதச்சுப்போட்டு வீட்ட வந்தா, வீட்டயொரு புதுப் பிரச்சன. சித்தப்பற்ர மகன் தருமு ஒரு புதுச்ச்சோலிய விலைக்கி வாங்கிக்கொண்டு வந்து நிண்டான்.
தமிழர் கலாச்சாரச் சங்கத்தலைவர் சிவக்கொழுந்தன்ர தங்கச்சியார்பெட்ட கமலவாணிக்கு இண்டைக்குப் பிறந்தநாளெண்டு சொல்லி சித்தப்பற்ர மகன் தருமுவையும் இண்டு மத்தியானச்சாப்பாட்டுக்கு பொடிச்சி வீட்ட வரச்சொல்லியிருக்கிறாள். தருமுவும் அந்தப் பொடிச்சியும் ஒண்டாத்தான் கொம்பனியொண்டில கழுவிற வேல செய்யினம். அந்தஸ் சினேகிதத்தில பொடிச்சி கூப்பிட்டுப்போட்டாளெண்டு இவனும் போயிக்கிறான். சாப்பாட்டுக்க கைவைக்கிறநேரம்பாத்து சிவக்கொழுந்தன் நல்ல தண்ணியில வந்திருக்கிறான். இவனக் கண்ட உடன முறுக்கியடிச்சிருக்கிறான் . "கண்ட எளியன்சாதியளயும் வீட்டுக்க கொண்ணந்தனியோடி" எண்டு தங்கச்சியார்க்காறிக்கு பத்துப்பதினைஞ்சு சனத்துக்குமுன்னால அடிச்சுப்போட்டான். இந்த வெங்கணாத்தியும் அவன்ர வீட்டுக்குள்ள வச்சே சோத்துக்கையால விளாசு விளாசெண்டு விளாசிப்போட்டான். சிவக்கொழுந்தனுக்குப் பல்லுக்கில்லெல்லாம் நொருங்கிப்போச்சு. மனிசிக்காறியும் பொலிசுக்குப் போண் பண்ணிப்போட்டாள். இவனக்கொண்டேய் மூண்டு மணித்தியானம் விளக்கமறியல்ல வச்சுப்போட்டாங்கள். ஒருமாதிரி அவன வெளியில எடுத்துக்கொண்டு வீட்ட வந்தா, வீட்டில திரும்பயொரு புதுப் பிரச்சன.
மூத்த தங்கச்சியட புருசன் ஜேர்மனிக்குப் போகபோறானெண்டு கொழும்பில ஏஜென்சியொண்டப் பிடிச்சு திடீரெண்டு மோஸ்கோவில வந்திறங்கி ரெலிபோணுக்குள்ளால என்னத்தேடிக் குண்டெறிஞ்சு கிட்டத்தட்ட எட்டு மணித்தியானமாகுது. மொஸ்கோவிலிருந்து அந்த ரெலிபோன் வந்தப்பிறகு நித்திரயே வரமாட்டனெண்டிட்டுது. சாமம் ஒரு மணிக்கு மேலாப் போயும் படுக்கேலாமல் உழண்டுகொண்டு திரிஞ்சன். திடீர்த் தாக்குதல் எண்டிறது இதத்தான் போல கிடக்கு. இவ்வளவு காலமும் தங்கச்சி; தங்கச்சியின்ர புருசன் கொழும்பில அல்லாட்டி மன்னாரில வந்து நிண்டுதான் வாங்கிக்கொண்டு போவினம். இவர வெளிநாட்டுக்கு எடுத்துவிடச்சொல்லி எத்தினயோதரம் தங்கச்சி, பத்தாததுக்கு அம்மாவும் மாறி மாறிக் கேட்டுப்பாத்தினம். நான் சம்மதிக்கேல்ல. காதில போட்டிருந்த வளயத்தோடயும் ஒத்தப்பட்டுச் சங்கிலியோடயுந்தான் பிள்ளய அனுப்பி வச்சவயளெண்டு சம்மந்தி எல்லா இடதிலயுஞ் சொல்லித் திரியிறேராம். பரிசுகேடாக் கிடக்காம் எண்டெல்லாஞ் சொல்லிப் பாத்து தலையாலும் வாலாலும் ஓடிப்பாத்தா அம்மா. '"ஐயா உன்னக் கட்டினதுக்கு எவ்வளவம்மா வாங்கினவர்? எண்டு கேட்டு அம்மாண்ட வாய அடிச்சு மூடி, ஏலாதெண்டு சொல்லிபிபோட்டன்.
தங்கச்சியின்ர மனுசன் மொஸ்கோவில வந்து நிக்கிறதப்பற்றி அக்காட்டச் சொன்னன். "ஏனாம் வந்தவர்? இங்கயென்ன அள்ளிக் கொட்டப் போறாராக்கும். இங்க உழாத மாடு வன்னியில உழுத கததான் அவற்ற கத. உனக்கெங்க போச்சுது மூள....? அதுசரி, நீயுஞ் சேந்து ஏத்தி விட்டிருப்பாய் அக்கா உதவி செய்வாளெண்டு. தாயாண என்னால ஒண்டுஞ் செய்யேலாது ஆளத் திரும்பிப் போகச் சொல்லு, இல்லயண்டா உன்னட்டயிருந்தா நீகுடு. என்ன வதைக்காத. உனக்கு காசுமாறித் தந்தாக்கள் இங்க அத்தான நெருக்கிப் பிடிக்கினம், கொஞ்சம் அதயொருக்காப் பாத்து அனுப்பி விடடா. பிள்ளயளக் கேட்டேண்டு சொல்லு. உனக்கும் ரெலிபோன் ஓடுது நான் வைக்கிறன்" சொடக்கெண்டு அக்கா ரெலிபோண வச்சிற்றாள். தங்கச்சியின்ர புருசனுக்கு உதவி செய்யடியப்பா எண்டு கேக்கப்போய் இப்ப என்ர கடன்காசுக்கு கழுத்தில கத்திய வாங்கிக்கொண்டன்.
ஒரு தம் அடிப்பமெண்டு யோசிச்சு தேத்தண்ணியப்போட்டன். இந்தக் குளிருக்க இனி ஜக்கெற்ரயும் போட்டுக்கொண்டு வெளியில போகவேணும். மூத்தவன் பிறக்கிறதுக்கு முந்தி ரொய்லற்ருக்குள்ளதான் என்ர தம்மடி. மூத்தவன் பிறந்தேப்பிறகு "வீட்டுக்கு வெளியதான்" எண்டு கட்டாயச் சட்டமாப் போட்டிட்டாள் என்ர நாச்சியார். மெல்லமா எழும்பிப் பூனமாதிரிப்ப்போய் குசினிக் கதவச் சாத்திக்கொண்டன். யன்னல நல்லாத் திறந்துவிட்டன். சுடுதேத்தண்ணியும் சுறுள்ப் புகயும் சுகமாயிருந்துது. திடீரெண்டு ஆரோ வாசல்க்கதவு பெல்லடிச்சுக் கேட்டுது. "இந்தநேரத்தில ஆற்ரா" எண்ட குழப்பம் எனக்கு. கடகடவெண்டு சிகரட்ட நாலிழுவ இழுத்துப்போட்டு யன்னலுக்கால தூக்கி எறிஞ்சிற்று, போய்க் கதவத் திறந்தன். அப்பு. என்ர அப்பு. பதினொரு வருசத்துக்குமுந்திச் செத்துப்போன என்ர அப்பு. என்ர அம்மான்ர தேப்பன். அந்த மட்டக்கிளப்புச் சாறமும், வெறும்மேலோட தோளில சாயம்போன அந்த துவாயுமா, கையில அழுத்தமாச் சீவீன அவற்ர அந்தக் காட்டு மல்லிகத் தடியோட வந்து நிண்டேர். எனக்குப் பக்கெண்டு ஆகிப்போச்சு. எனக்கென்ன செய்யிறெண்டே தெரியேல்ல. "அப்பு வாண" எண்டு உள்ள கூப்பிட்டன். அந்தக் கொடுப்புச் சிரிப்போட உள்ள வந்தேர். சப்பாத்துகள் கழட்டி வைக்கிற அந்த மூலைக்குள்ள மல்லியத்தடியப் பக்குவமாய்ச் சாத்தி வச்சேர். எப்பவுமே மனுசன் அந்தத் தடியில கவனந்தான். ஆளக் குசினீக்க கூட்டிக்கொண்டு போய் இருக்க வச்சன்.
"எப்பிடியண....? என்னண்டண...? ஏனண வந்த....? என்ர கேள்வியள் அறுந்தறுந்து, துண்டுதுண்டா, உள்ளயுமில்லாமல் வெளியயுமில்லாமல் அந்தரிச்சிது. "சும்மா உன்னயும் பிள்ளயளயும் பாத்திட்டுப் போவம்மெண்டு வந்தனான் ராசா. போனகிழம உன்ர கொக்காளாட்டத்தான் போனனான். அதுகுங் கனவிலதான். அவள்புள்ள விடிய எழும்பி அப்பு வந்திட்டுப்போறேர் ஏதோ கெட்டது நடக்கப் போகுதெண்டு புருசன் காரனயும் பயமுறுத்தி, வீட்டக் கழுவித்துடச்சு, கொத்தாருக்குத் தெரிஞ்சொரு ஐயரக் கூப்பிடுவிச்சு ஏதோவெல்லாஞ் செய்தாள் எனக்கொண்டும் விளங்கேல. இல்லாதது பொல்லாததெல்லாஞ் சொல்லி ஐயர் பேக்கிலவாண்டிப் பெட்டய ஏமாத்திக் காசு புடுங்கிக்கொண்டு போட்டான். பிறகிட்டுப் பாத்தா கனடாக்கு ஏதோ காரியமெண்டு போய்நிண்ட குணசேகரஞ் சுவாமியக் கூப்பிடுவிச்சு ஆசிநீரெல்லாம் வீடுமுழுக்கத் தெளிச்சு. செபஞ்சொன்னாளவய. அவருக்கு அண்டைக்கங்க நல்ல விருந்தும் தண்ணியும். ஏந்தான் இப்பிடிப் புத்திகெட்ட சீவியஞ் சீவிக்கிதுகளோ தெரியாது. அது சரி நீ எப்பிடி ராசா இருக்கிறாய்? உன்ர பெண்சாதி பிள்ளயளப் பாக்கவேணும் நான்" அப்பு சரியன ஆசயாக் கேட்டார்.
அப்பு செத்த கையோடயே நான் இந்தியாவுக்கு வெளிக்கிட்டிட்டன். அப்பு சாகிறதுக்கு முந்தியும் இயக்கப்போட்டில இந்தியாவுக்குப் போன்னான். அது வேற கணக்கு. அப்பு செத்தப் பிறகு கரயூர் நைலோன் போட்டில இந்தியாவுக்குப் போன்னான். இது வேற கணக்கு. மொத்தத்தில எல்லாக் கணக்கும் எங்கயோ இடிக்கிறமாதிரித்தான் கிடக்கு.
பெரியவன்ர கட்டிலடிக்குக் கூட்டிக்கொண்டு போனன். "இதுதானா உன்ர மூத்தது? எண்டு கேட்டபடியே கொஞ்சநேரம் அப்பிடியே நிண்டு பாத்தேர். பிறகு குனிஞ்சு அவன்ர நெத்தியில இறுக்கிக் கொஞ்சினேர். மனுசன் நிமிந்தொரு பெருமூச்சு விட்டிது கண்ணெல்லங் கலங்கிப்போச்சு. ஏனணயப்பு அழுகிறாயெண்டு கேட்டன். ஒண்டுமில்லயண்டமாதிரி தலயாட்டினேர். நிமிர்தென்ன ஒருக்காப் பாத்தேர். ஆளக் கூட்டிக்கொண்டு மற்ற அறைக்குள்ள போனன். கொஞ்சநேரம் அப்பிடியே நிண்டு தாயயும் மகளயும் ரசிச்சு ரசிச்சுப் பாத்தேர். பிறகு கட்டிலுக்கருகிலபோய்க் குனிஞ்சு சின்னவளட நெத்தியில கொஞ்சினேர். கொஞ்ச நேரம் நிண்டு ரெண்டுபேரயும் பாத்தேர். மனுசன்ர முகத்தில சரியான சந்தோசத்தப் பாத்தன். இறுக்கிக் கட்டிப்பிடிச்சு என்னயுங் கொஞ்சினேர். மனுசன்ர கண்ணால கண்ணீரோடிச்சுது. எனக்கும் அழுகயழுகயா வந்துது. ஆளக் கூட்டிக்கொண்டு திரும்பயும் குசினீக்குள்ள போய் இருக்க வச்சன்.
"பிள்ள எத்தின மாசமாயிருக்கிறாள்?" எண்டு கேட்டேர். எட்டு எண்டன். "வடிவாக் கவனியடாமோனே கஸ்ரப்படுத்தாத. தின்னக் குடிக்க கேக்கிறத வாங்கிக்குடு. பிள்ளயில பாட்சமாயிரு. பாவம் நல்லவள் மனம் நோகச்செய்யாத. உன்ர ஆச்சி வந்து எல்லாஞ் சொன்னாள். பிள்ள இஞ்ச உன்னட்ட வாறத்துக்குமுதல் தன்ன வந்து கண்டதாம். குணமான பிள்ளயெண்டு சொன்னாள்பாவி. உன்ர சின்னமாமி "இந்த ஒட்டலுக்கோ கிழவா இத்தூரம் போனியோடோ கிழவா" எண்டு நையாண்டி சொன்னாளாம். உன்ர பெரியமாமி நளத்தியெண்டும் பிள்ளய வ சசொன்னாளாம். அதுகள் புத்தியில்லாத சனங்கள் ராசா. அதயெல்லாம் மனசில வச்சிராத. பாவங்கள்.தங்கட பிள்ளயள்ள ஒருத்தரக் கட்டயில்லயெண்ட ஆத்திரமதுகளுக்கு. ஏதோ ஆத்தாக்கேட்டில பேசிப்போட்டுதுகள். அதெல்லாத்தயும் நீ பெருசா எடுக்காத". ஏதோ கெஞ்சிறமாதிரிக் கேட்டார். எனக்குச் சரியான அந்தரமாப்போச்சு. இல்லயணயப்பு நானொண்டும் பெரிசா நினைக்கேல்ல. அதெல்லாத்தயும் விட்டிட்டன். எண்டு சொன்னன்.
பசிக்கிதெண்டேர். சோறு சாப்பிடணை எண்டன். பழஞ்சோறோ எண்டு கேட்டேர். இல்ல நேற்றுத்தான் காச்சினது எண்டன். சிரிச்சுக்கொண்டு என்னப் பாத்தேர். எனக்கு விளங்கீற்றுது. இங்கயப்பு ரெண்டு மூணுநாள்ச் செண்டாலும் பழஞ்சோறாகாது எண்டன். என்ன கறியெண்டு கேட்டேர். கணவாக்காறி எண்டன். "கனகாலம் மோனே. கொஞ்சமாப்போடு" எண்டேர்.
அப்புவுக்குப் பழஞ்சோறெண்டால்ச் சரியான விருப்பம். காலமயில அவருக்குக் கட்டாயம் பழஞ்சோறு தேவ. முந்தியெல்லாம் வீட்டில எல்லாரும் சாப்பிட்டு ராத்திரியோடயே சோறு முடிஞ்சு போச்சுதெண்டால் அப்புக்கும் ஆச்சிக்கும் இடயில காலமயில சண்ட நடகும். ஆச்சி நெடுக மனிசனோட சண்ட பிடிப்பா."பகல்ச் சோத்துக்கே வழியக் காணயில்லயாம், இதில போக்கத்த மனிசனுக்குப் பாழஞ்சோத்துவிடாய் பெரும் விடாயாக் கிடக்குது" எண்டு புறுபுறுத்துக்கொண்டே இருப்பா. இதுமட்டுமில்ல, அப்புவுக்குக் கட்டாயம் தேத்தண்ணிக்குச் சீனி வேணும். சிறிமா காலத்தில பேரிச்சம்பழத்தோட, இல்லயண்டால் தோடம்பழ இனிப்போடதான் வீட்டில கனகாலம் நாங்கெல்லாம் தேத்தண்ணி விடாயத் தணிப்பம். ஆனா ஆச்சி எப்பாடு பட்டாவுதல் அப்புவுக்குக் கொஞ்சச்சீனி சுழிச்சுக்கொண்டந்திருவா. எல்லாத்தயும் நினைச்சு சிரிச்சன். ஏன் சிரிக்கிறாயெண்டு கேட்டேர். ஒண்டுமில்லயெண்டன். "எனக்குத் தெரியும் கள்ளபடவா ஆச்சியும் நானும் பட்ட அல்லோலகல்லோலத்த நினச்சிச் சிரிகிறாயென்ன? எண்டேர். "உண்மைதான்மோனே. அந்தச் சோக்கான காலத்த இப்ப நினச்சாலும் வாய்க்குள்ள இனிப்பாத்தான் கிடக்குது" எண்டேர் ஏதோ பறிகுடுத்தாள் மாதிரி.
கணவாக்கறிச் சட்டிய எடுத்து அடுப்பில சூடாகிறதுக்கு வச்சுப்போட்டு, பிறிச்சுக்குள்ளயிருந்து ஒரு பியர்ப்போத்தில எடுத்து உடச்சு அவருக்கு முன்னால வச்சன். என்னயிது? எண்டேர். பியரணயப்பு எண்டன். கொஞ்சங் குடிச்சுப் பாத்தேர். "பச்சக்கச்சல்" எண்டேர் . ஒரு பெருமூச்சு விட்டேர். என்னத்த நினச்சுப் பெருமூச்சு விட்டவரெண்டத விளங்கிக் கொண்டன்.
அப்பு நல்லாக் கள்ளடிப்பேர். காலமயும் பின்னேரமும் கட்டாகட்டியா ரெண்டு ரெண்டு போத்தில்க் கள்ளு வேணும் மனிசனுக்கு. ஒவொருநாளும் பிறஞ்சிக்கிழவன் காலமயும் பின்னேரமும் கொண்ணந்து குடுத்துப் போட்டுப்போகும். பிறஞ்சிக்கிழவன் "கும்பா கும்பா" எண்டு அப்புவோட நல்ல வாரப்பாடு. அப்புவும் அப்பிடித்தான். ஒருக்காவும் ரெண்டுபேரும் பேர்சொல்லிக் கூப்பிட்டத நான் காணேல்ல. கும்பா போட்டு வலும் மரியாதயாத்தான் புளங்கிச்சினம். அம்மவுக்கு பிறஞ்சிக்கிழவந்தான் தல தொட்டது. அந்தஸ் சொந்தந்தான் இந்தக் கும்பாஸ் சொந்தம். பிறஞ்சியக்கொண்டு அம்மாக்குத் தல தொட்டதுக்கு அப்புவின்ரயாக்கள் சரியான எதிர்ப்பாம் "நளவனக்கொண்டு தலதொடுகிறதோ"? எண்டு அப்புவின்ர ஆக்கள் அம்மான்ர ஞானஸ்தானத்துக்கே வாரயில்லயாம். அப்பு நெடுகச் சொல்லுவேர். எல்லாத்துக்குஞ்சேத்து தன்ர சகோதிரங்களுகு நல்ல பாடம் படிப்பிக்க நினச்சு அப்பு ஒரு மணி வேலயும் பாத்துவிட்டேர். பிறஞ்சிக்கிழவன்ர மூத்த மகளயும், அப்புவின்ர கடக்குட்டித்தம்பிக்காரனயும் சினேகிதம் புடிக்கச்செய்து, ரெண்டுபேரயும் எழுதுமட்டுவாளுக்கு ஓடச்செய்து, சடங்குகட்டி வச்சேர். அதுக்குப்பிறகு அப்புவின்ர சகோதிரங்களெல்லாம் கப்சிப். ஆனா, "உன்ர புரியன்தானேயடி எங்கட வம்சத்தக் கொண்டேக் கள்ளுக்கு வித்தவன்" எண்டு அப்புவின்ர ரெண்டு பொம்பிளச் சகோதிரங்களும் ஆச்சியோட நெடுக ராத்திக்கொண்டேயிரந்தினம். "அடியோமடி போங்கடி, அந்தளவுக்காவுதல் உங்கட வம்சத்த என்ர புருசன் பெறுமானமாக்கிப் போட்டானேயெண்டு சந்தோசப்படுங்கடி" எண்டு ஆச்சி சொல்லிப்போடுவா.
அப்புவுக்குச் சோத்தப்போட்டு, நிறயக் கணவாக்கறியும் வச்சுக் குடுத்தன். ஒருதுண்டுக் கணவாய எடுத்து வாயில வச்சேர், ம்.... ஆணத்தில நல்ல கைப்பக்குவந் தெரியுது. புள்ளயா சமச்சவள்"? எண்டு கேட்டேர் . இல்ல நாந்தான்" எண்டன். நிமிந்தென்ன ஒருக்காப்பாத்து முளுமுகத்தாலயுஞ் சிரிச்சேர். பிறகு ரெண்டுவாய் சாப்பிட்டேர். எண்டாலும் எங்கட கடலுக் காணவாயின்ர சுவ இல்லத்தான்" எண்டேர். இங்க ஒண்டிலயும் எங்கட ஊர்ச்சுவ இல்லயணயப்பு" எண்டன் "கடலால வந்தோண்ண உன்ர ஆச்சி குஞ்சுக்கணவாயில எடுத்து மைக்கூடும்போட்டு ஒரு புளியவியல் வைப்பாள் நாச்சியார்.... ம்... அந்தக்காலம் மலயேறிப்போச்சு மோனே" எண்டுசொல்லியொரு பெருமூச்சு விட்டேர். எனக்கும் வாயூறிச்சு. முந்தி ஊரில இருக்கேக்க அப்புவோட கொய் வீசப்போனா, ரெண்டுபாடு வீசிப்போட்டு, அப்பிடியே நரயாம்பிட்டியில தோணிய விடுவேர். நல்ல பெரிய கொய்யா நாலெடுத்து காஞ்ச மணலுக்க தாட்டுப்போட்டு மேல நெருப்பக் கொழுத்தி விடுவேர். கொஞ்ச நேரத்தால நெருப்ப நூத்துப்போட்டு மண்ணக்கிளறி மீன எடுத்தேரண்டால், ஒரு கருக்கலில்லாமல் கொய் வெந்திருக்கும். அப்பிடியே தோல உரிச்சு எண்ண பிறக்க எனக்கொரு கொய்யத் தருவேர்.... அதின்ர சுவையே தனிதான். பாதி மீனே என்னால சாப்பிடேலாமல் போயிரும்.
இண்டைக்கு காலமயிலேருந்து நடந்ததெல்லாத்தயும் அப்புவுக்குச் சொன்னன். எல்லாத்தயும் வடிவாக் கேட்டேர். இடைக்கிட சிரிச்சேர். கோபப்பட்டேர். யோசிச்சேர். அனுதாபப்பட்டேர். சிவக்கொழுந்தனுக்கு சித்தப்பற்ர மகன் தருமு அடிச்சது சரிதானெண்டார். "இப்படியான ஆக்கள் வச்சு நடத்திற சங்கங்கள கொழுத்த வேணும்" எண்டேர்.
"மாமியாக்கள் சாதி சொல்லிப் பேசினவயள் எண்டத, புத்தி கெட்டதுகள் அத விடு எண்டு சொல்லிப்போட்டு, இதமட்டும் கொழுத்தவேணுமெண்டு சொல்லுறாயெண இதெந்த ஞாயம்" எண்டு அப்புவட்டக் கேட்டன். அப்பு ஒரு சிரிப்புச் சிரிச்சுப்போட்டு சொன்னேர், அது விக்கினமில்லாததெடா மோனே. இது விசம். ரெண்டயும் ஒண்டாச் சேர்க்காத. அதுக்கா உன்ர மாமிமார் சாதிசொல்லிப் பேசினதச் சரியெண்டு சொல்லேல்ல. ஆனா, ரெண்டுக்கும் கனக்க வித்தியாசங் கிடக்கு. அது அறியாத்தனம். இது திட்டம்போட்டு வளக்கிறது. திருத்தேலாது. வெட்டித்தான் எறியவேணும். நீ வடிவா யோசி" எண்டேர். அப்பு சொல்லுறதோட என்னால ஒத்துப்போகேலாமல்க் கிடந்துது. "ஒரு விதத்தில இதுகும் அறியாத்தனந்தானணயப்பு, பொதுவா ரெண்டும் ஒண்டுதானே? எண்டன். "ஓம்ராசா. ரெண்டுமே நல்லதில்லத்தான். மொத்தமா இல்லாமல்ப் போனாத்தான் மனிசன்ர சீவியம் நடக்கும். இல்லயண்டால் மனிசன்ர சீவியத்த கடல்ல சாம்பல் காடாத்திறமாதிரிக் காடாத்த வேண்டியதுதான்" எண்டார். அதுக்கு வெட்டுறதும், கொழுத்திறதுந்தான் சரியான காரியமாண அப்பு? எண்டு கேட்டன். "வேற வழியிருந்தாச் சொல்லுபாப்பம்" எண்டு என்னட்டத் திரும்பிக் கேட்டேர். எனக்கெண்டால் இவர் சொல்லுறது சரியாப் படேல்ல. அறியாத்தனத்தத் திருத்த ஆயுதமென்னத்துக்கு எண்ட கேள்வி எனக்குள்ள.
இலங்கயரசாங்கம் தமிழர ஒதுக்குதெண்டு சொல்லி சண்டைக்கு வெளிக்கிட்டநாங்கள், முசுலீமுகளத் திரத்தி அதே பிழய எங்களுக்குள்ள செய்தம். இதெல்லாம் எந்த விதத்தில ஞாயமில்லயோ, அதுமாதிரித்தான் எங்களுக்குள்ள கிடக்கிற இந்தச் சாதிப்பிரச்சினயும். மேல்சாதியெண்டு சொல்லுறவாயால ஒதுக்குப்படிற ஆக்களும் தங்களுக்குக்கீழயுங் குறஞ்ச சாதியெண்டு கொஞ்சப்பேர ஒதுக்கி வச்சிருப்பினம். அதுமாதிரி இவயளும் தங்களுக்குக்கீழ இன்னுங் கொஞ்சப்பேர ஒதுக்கி வச்சிருப்பினம். பிறகு இவயளும் தங்களுக்குக்கீழ கொஞ்சப்பேரயெண்டு......... இப்பிடியே அடம்பன்கொடி மாதிரி மண்முழுக்க எங்களின்ர சாதிப்பிரச்சன வேரோடிக்கிடக்கு. இத அழிக்கிறதெண்டால்த் தாய்வேரிலிருந்து , தளிர்மட்டுக்கும் பிடுங்கியெறியவேணும். அதெல்லாத்தயும் விட்டுப்போட்டு இதென்னடாண்டால், சங்கம், அமைப்பு, இயக்கமெண்டு சொல்லிக்கொண்டும் , இன்னொரு பக்கத்தால சாதிய வளத்துக்கொண்டும், நானில்ல அவன்தான், நானில்ல அவன்தானெண்டு ஆளயாள்ச் சாட்டிக்கொண்டும் திரியிறாக்கள் சொல்லுறதக்கேட்டு ஓம்மோமெண்டு கோயில்மாடுமாதிரித் தலயாட்டிக்கொண்டிருக்கிறம். இதுகளப் பாக்கேக்க இந்தத் தலயளயும், தலயாட்டிறதுகளயும் பிடிச்சு நடுத்தெருவில விட்டு அப்பு சொல்லுற காரியத்தச் செய்யிறதுஞ் சரியானதாத்தாந் தெரியிது.
அப்பு சாப்பிட்டு முடிச்சு போறதுக்கு எழும்பினேர். எனக்கெண்டால் மனிசன அனுப்பிறதுக்கு மனமில்ல. "இன்னொரு சமயம் வாறன்" எண்டுபோட்டுப் போட்டார். என்ர நாச்சியார் விடிஞ்செழும்பின உடன ராத்திரி நடந்ததெல்லாத்தயுஞ் சொன்னன். அவ்ள் சிரிச்சுப்போட்டு "வெளிக்கிடுங்கோ டொக்டரட்டப் போவம்" எண்டாள். ஏனெண்டு கேட்டன். "முத்தமுன்னம் போறது நல்லம் எண்டாள். ஆறு மாசத்திற்கு முந்தி நான் வேலயில விழுந்து தலயில அடிபட்டேப்பிறகு சின்னச் சந்தேகமொண்டு இவளுக்கு இருந்தொண்டுதானிருக்கு.
அப்பு வந்திட்டுப்போனத ஒரு அஞ்சாறு பக்கத்தில ஒரு குறிப்புமாதிரி எழுதினன். அத வாசிச்சுப்பாத்துப்போட்டு "கொஞ்ச நாளைக்கு எழுதாமல் ரெஸ்ற்ரெடுங்கோவன் குஞ்சு" எண்டாள். இதுக்குமேல நான் என்னத்தக் கதைக்கல்லாம். அப்பு வந்திட்டுப் போனத அம்மாக்கு அனுப்பினாச் சந்தோசப்படுவா எண்டு சொல்லி அத அனுப்பினன். அம்மா மருமகள்காரிக்கு ரகசியாக் கடிதம் போட்டா "உன்ர மனிசங்காரன எங்கயாவது காட்டுபிள்ள" எண்டு, தலயில அடிபட்டதால எனக்கு ஒண்டும் நடக்கேல்ல எண்டத என்ர நாச்சியாருக்கு நிரூபிக்கிற காரியத்தில இப்ப நான் மும்மரமாயிருக்கிறன்.
(அம்மா-சிறுகதை இதழ் பிரான்ஸ், வைகாசி 1998)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக