வியாழன், 19 பிப்ரவரி, 2015
நெடும்பயணம் -தமயந்தி-
82, 83 காலப் பகுதிகளில் மிகுந்த உணர்வுகளோடும், அர்ப்பணிப்பு மனநிலைகளுடனும் விடுதலை இயக்கங்களுக்கெனப் புறப்பட்டுவந்த இளம் பெண்களை எங்களது யாழ்ச்சமூகம் எப்படியெல்லாம் வசவு சொல்லி நோகடித்தது.
"எடுபட்டுப் போனவள், கிணாய்ச்சுக்கொண்டு ஓடினவள், வேசையாடப் போனவள், தோறை, அடங்காப்பிடாரி, அள்ளுப்பட்ட வேசை, அரிப்பெடுத்த குமரி, தறுதலைத் தேவடியாள், ஆட்டக்காறி, டம்பாசாரி...." இப்படிப் பல பட்டப் பெயர்களையும் வாங்கிக்கொண்டு, நாட்டு விடுதலைக்காகப் பணி செய்த பெண்கள் ஆயிரமாயிரம். ஆயினும் அவர்கள் இதனையெல்லாம் கொஞ்சம்கூடக் கரிசனைக்கெடுத்துக் கொள்ளவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட தேச விடுதலைப் பணியைத் தலையால் சுமந்தார்கள். சொல்லொணா இடர்பாடுகளைத் துச்சமென ஊதித் தள்ளினார்கள். அந்தந்த அமைப்புக்கள் தத்தம்மளவில் கொண்ட விடுதலைக் கொள்கைகளை, அரசியற் கருத்தியலை உள்வாங்கி, தெளிவுள்ளவர்களாகவே மக்களுக்குள் போர்ப்பணி செய்தார்கள்.
இன்று பெப்ரவரி-7, சனிக்கிழமை, 2015.
வேலை மிகக் குறைவு. ஒரு மணிவரையும்தான்.
ஒருமணியாவதற்கு இன்னமும் ஒருமணி நேரம் மட்டுமே இருக்கிறது. திங்கட்கிழமை வெளியாகவேண்டிய பத்திரிகைக்கான சில செய்திப் படங்களை மட்டும் செப்பனிட்டு போட்டோ ப்ரொடக்ஷன் டெஸ்கிலிருந்து லே-அவுட் டெஸ்க்கிற்கு அனுப்பிவிட்டு, கோப்பியை எடுத்துக்கொண்டு சிகரட் கூண்டுக்குள் தஞ்சமாகினேன். முன்பெல்லாம் கன்ரீனின் ஒரு பகுதி புகைபிடிப்பதற்காக ஒதுக்கப் பட்டிருந்தது. கடந்த ஆறு வருடங்களாக டிஸ்கோ, பார், வேலைத்தளங்கள் என எல்லா இடத்திலும் புகைப்பிடிப்பது சட்டரீதியாகத் தடை செய்யப் பட்டு விட்டது. பத்திரிகைக் காரியாலயத்தில் பணியாற்றும் அறுபது பேரில் நாற்பது பேர் புகைப் பிடிப்பவர்கள்.
நிர்வாகத்தோடு பல சந்திப்புக்களையும், எடுத்துரைப்புக்களையும், பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியதன் பயனாக இரண்டாவது மாடியிலமைந்துள்ள ப்ரொடக்ஷன் தென்கிழக்கு மூலையிலேயே ஒரு கண்ணாடிக் கூண்டு அமைத்து, கூண்டிலிருந்து தனிப் புகைபோக்கி ஒன்றையும் கூரைக்கு வெளியே நீட்டி, புகை வளையங்களை கூரைக்கு மேலாக நேரடியாகவே சென்றடையும்படி ஆக்கி விட்டது நிர்வாகம். இதனையும் இந்த வருடத்தோடு கலைக்கப் போகிறார்களாம்.
ஒரு சமூக ஊடகமே சட்டத்தைக் கனம் பண்ணாமல் விடுவது தர்மமே அல்ல என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இந்த சிகரட் கூண்டை அகற்றுவதற்கான ஒப்புதலை அனைத்துப் பத்திரிகைப் பணியாளர்களிடமும் பெற்றுவிட்டது நிர்வாகம். இனி கட்டிடத்தை விட்டு வெளியே சென்றுதான் புகை ஊத முடியும். 1988ம் ஆண்டு 36குரோணர்களுக்கு வாங்கிய இருபது போட்ட சிகரட் பெட்டி இப்போ நூறு குரோணர்களுக்கு விலையுச்சமாகி விட்டது. புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சித்து எடுத்த பிரயத்தனங்களெல்லாம் தோல்வியில்தான் முடிந்து போயிற்று. மிகமிக அற்ப ஆயுளிலேயே மடிந்துபோகும் ஒரேயொரு சபதம் உலகத்திலேயே எதுவாக இருக்கும் என்றால், வருடாவருடம் டிசம்பர் 31ம் திகதி இரவு 12மணிக்கு எடுக்கப்படும் "இந்த வருடத்தோடு சிகரட்டை நிறுத்துவது" என்ற சபதமாகத்தான் இருக்கும்.
இறுதித் தம்மையும் இழுத்து ஊதி கட்டையை சாம்பல்க் கோப்பையில் அழுத்திவிட்டு, பாதிக் கோப்பியோடு புகைக் கூண்டை விட்டு வெளியே வரும்போது எனது கடைக்குட்டி கவின்யா போனில் வந்தாள். தகவலைச் சொன்னாள் படக்கென வைத்து விட்டாள்.
எந்த பிளைட் எடுக்கிறார் என்றோ, எத்தனை மணிக்கு எடுக்கிறார் என்றோ எந்தவித விபரமும் தெரியாது. பின்னேரம் வந்திறங்குவதாக மட்டுமே தகவல் தந்தாள் குட்டி.
விமான நிலையத்திற்குப் போவதானால் நானிருக்குமிடத்தில் இருந்து இரண்டு தீவுகளைத் தாண்டிப் போக வேண்டும். ஒருமணிக்கான விமானநிலைய பஸ்ஸை எடுத்தால் இரண்டு மணிக்கெல்லாம் விமான நிலையம் போய் விடலாம். அவசர அவசரமாக கமெராப் பையை எடுத்து தோளில் கொழுவிக்கொண்டு பஸ் நிலையத்துக்கு ஓடிப்போனால் அப்போதுதான் விமான நிலைய பஸ் தனது தரிப்பிடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. என்னைக் கண்டதும் பஸ் சாரதி கதவைத் திறந்து என்னையும் தனது பயணத்தில் இணைத்துக் கொண்டார். பஸ்ஸுக்குள் சனம் மிகக் குறைவு. பத்தோ பன்னிரண்டு பயணிகள்தான் வரும். எவ்வளவுதான் இருக்கைகள் வெறுமையாகக் கிடந்தாலும் வழமைபோல் நமது கால்கள் கடைசி இருக்கைக்கே கொண்டு சென்று சேர்த்து விடுகிறது. இந்த "பின்சீற் மனநிலை" தொடர்பாக என்னை நானே பல தடவைகள் விமர்சித்தும், கடிந்துமிருக்கிறேன். ஆனாலும் அப்பப்போ இப்படி அடிவளவு வருத்தம் என்னையும் வென்று விடுகின்றது.
வீக்ரா விமான நிலையத்தில் மூன்று மணிநேரம் காத்திருந்து கடந்தாயிற்று. பெட்டியிலிருந்த கடைசிச் சிகரட்டுக்கும் கொள்ளி வைத்துவிட்டு விமான நிலையத்தின் வெளியிருக்கையில் அமர்ந்திருந்தேன். மீண்டும் கவின்குட்டி கைப்போனில் வந்தாள். "அப்பா எங்க நிக்கிறீங்க...., அங்கிள் பஸ்ஸில வந்து, ரவுணில பஸ்ரேஷனில பாத்துக்கொண்டு நிக்கிறாராம் கெதியா ஓடுங்கோ" இவளொரு குறள்க் குடுக்கை. குறள் வரிகள்போல இரண்டு லைனில், தந்தி மொழியில் விசயத்தைச் சொல்லி முடித்துவிட்டு ஷட்டரை மூடி விடுவாள்.
கந்தையர் அங்கிள் ஒஸ்லோவிலிருந்து காலை ஏழுமணி பஸ் எடுத்திருக்கிறார் என்ற விசயம் இப்போதுதான் ஓடி விளங்கியது. நாலரை மணிக்கு வந்திறங்கும் பேர்கன் விமானப் பயணிகளை ஏற்றிக் கொண்டு நின்றது ஓலசுண்ட் பஸ். கடைசிச் சிகரட்டின் அடிக்கட்டையை நிலத்தில் போட்டு ஏறி மிதித்துவிட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். நான் அவரிடம் போய்ச் சேர கிட்டத்தட்ட ஆறு மணியாகி விடும். அதிகாலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பார். பெரிதாக எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டார். நல்ல பசியில்தான் வந்திருப்பார். மாசிப்பனியின் குளிர்வேறு உடம்பை விறைக்கச் செய்து கொண்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து நகரத் தொடங்கிய பஸ்ஸிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் கவின் குட்டி கைப்போனுக்கு வந்தாள். "அப்பா, அங்கிள நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறன் நீங்க வேலய முடிச்சுப்போட்டு வாங்கோ"
நான் "ம்," அல்லது "சரி" என்று சொல்வதற்கு முதலே கட்.
இந்த இடத்தில் கட் பண்ணினால் அடுத்த காட்சி வரவேண்டுமல்லவா. அதுதானே விதி. விதிகளை மீறக்கூடாது. இதெல்லாம் யார் வைத்த விதி என்றெல்லாம் கேட்கவும் கூடது. அப்படிக் கேட்கப்போனால் தப்பான ஆளாகி விடுவோம். எனவே விதியின் பிரகாரம் அடுத்த காட்சிக்கு வருகிறேன்.
கம்பஸில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் எனச் சொல்லி, ராசாவின் தோட்டம் ஏரியாவில் அறை எடுத்து இயக்க வேலைகள் செய்து கொண்டிருந்த 83, 84 காலம். அநேகமாக அந்த அறையில் நான் தங்கியதென்பதே மிகக் குறைவு. அப்படி அறைக்கு வந்து தங்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் கொஞ்சம் தள்ளியுள்ள மருதடி ஒழுங்கையில் இருக்கும் நண்பன் குணாளன் வீட்டுக்குப் போய்விடுவேன். அவனது வீட்டுக்குப் போகும் வழியில் மருதடி வீதியில்தான் அங்கிளின் வீடு.
"எழுத்தாளர் கந்தையர் வீடு" என குணாளன் சொல்லித்தான் நானும் அறிந்தேன். எழுபதுகளின் பின்பாதியிலும், 80களின் முன் பாதியிலும் அவரது சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்த வார மலர்களிலும், சிறு சஞ்சிகைகளிலும் படித்திருக்கிறேன். ஆசிரியப் பணி செய்தாலும் தொடர்ந்து எழுத்தைக் கைவிடாமல் இருந்தார் கந்தையர். அன்றாடம் அவரது வீட்டைக் கடந்துபோனாலும் கந்தையர் அங்கிளை நான் ஊரில் கண்டதே இல்லை. ஊரில் மட்டுமல்ல, இங்கும், இதுவரை நேரில் பார்த்ததில்லை. அவர் நோர்வே வந்து ஆறு வருடங்களும் பல தடவைகள் தொலைபேசியில்தான் உரையாடியிருக்கிறேன். நான் அவரை அங்கிள் என அழைத்தாலும், அவர் என்னைத் தோழா என்றுதான் சொல்வார்.
போர்க்கால விதிக்குரங்கு கந்தையர் அங்கிளையும் சும்மா விடவில்லை.
அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்.
மூத்தவன் மகன் சென்.ஜேம்ஸில் A/L படித்துக்கொண்டிருந்தவன். 1983ம் ஆண்டு 30ம் திகதி சனிக்கிழமை இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெலோ இயக்கத்துக்குப் போய்விட்டான். 1986ம் ஆண்டு சித்திரை 30 அன்று ரெலோ இயக்கத்தின்மீது சகோதரப் படுகொலை தொடங்கப்பட்ட சம்பவத்தில் 1986 மே-3ம் திகதி சனிக்கிழமை எரித்துக் கொல்லப்பட்டான்.
ஈழத்தில் அமைதியை நிலைநாட்டவென வந்திறங்கிய இந்திய அமைதிப் படை 1987, OCTOBER,11ம்திகதி போர்ப்பிரகடனத்தை அறிவித்து தமிழ் மக்களை வேட்டையாடியது. பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்று தள்ளியது.
1987 டிசம்பர் 26ம் திகதி சனிக்கிழமை ரியூசனுக்கு எனப் போன கந்தையர் அங்கிளின் மகள் வீடு திரும்பவேயில்லை. இந்திய அமைதிப்படை அவளோடு சேர்த்து இன்னும் சில இளம் பெண்களைப் பிடித்துக் கொண்டுபோன செய்தி மட்டும் அடுத்தடுத்த நாட்களில் பேசப்பட்டன. இந்திய ராணுவம் அவர்களை என்ன செய்தது என்பது இன்றுவரை சரிவரத் தெரியாத செய்திதான்.
மகளையும் மகனையும் பறிகொடுத்த தாங்காத் துயரத்தால் கந்தையர் அங்கிளின் மனைவி ஒரு நடைப் பிணமாகவே ஆகிவிட்டார்.
1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு சனங்கள் ஓடியபோதும், ஓடப்பண்ணிய போதும் அவரும் சேர்ந்தே ஓடினார். நடைப்பிணமான மனைவியையும் அள்ளியெடுத்துக்கொண்டே ஓடினார். வீடு வாசல், நாய் ஆடு கோழி எனவும், அவரது எழுத்துக்களையும் விட்டுவிட்டு ஓடினார். நாச்சிக்குடாவரை ஓடினார். அவரது வீடும் தப்பவில்லை. குண்டுகளால் அடி வாங்கியது.
நோர்வே அரசு சொல்கைம் நெறிப்படுத்தலில் முழுநீள நாடகம் ஒன்றை அரங்கேற்றியபோது நாச்சிக்குடாவிலிருந்து 2004ம் ஆண்டு முல்லைத் தீவுக்கு மனைவியோடு குடிபெயர்ந்தார். அங்கும் அவரைச் சுனாமி உருட்டிப்புரட்டிப் போட்டது. மனைவியை ஆழிப்பேரலை அபகரித்துச் சென்றது. குருநகர் கரைவலைப் படகுச் சம்மாட்டியின் மகள்வயிற்றுப் பேரன் அல்போன்ஸ் அந்தோனிராசா அந்தச் சுனாமிச் சங்காரத்திலிருந்து காப்பாற்றியிருக்கவில்லையெனில் கந்தையர் அங்கிளின் வரலாறும் சுனாமிக் கல்லறைகளில் ஒன்றாகியிருந்திருக்கும். பின், 2009இல் சுருங்கிப்போன யுத்தநிலத்தில் அவரும் தனியனாய் ஒதுங்கிப்போனார்.
2009 மே பதினாறாம் திகதி சனிக்கிழமையின் முதல் நிமிடங்கள்.
அந்தக் கரிய இருட்டின்மீது எதிரிகளின் நெருப்புக் கோடுகள் சித்திரம் கீறி விளையாடிக்கொண்டிருந்தன.
வலைஞர் மடம் களுவாடி தென்னந்தோப்புக்குள் கிடுகுகளால் மறைக்கப் பட்டிருந்த இரட்டை வெளியிணைப்பு யந்திரம் பொருத்தப்பட்ட படகினை நான்கு போராளிகள் கடலில் இறக்கிக் கொண்டிருந்தபோது, தோப்புக்குள் கிடந்த தென்னம் மட்டைக் குவியலுக்குப் பின்னால் முனகல் சத்தம் கேட்டது. சென்று பார்த்தால் ஒரு வயோதிபர் பாதியிலும் பாதியான உயிரைக் கையில் பிடித்தபடி இழுத்துப் பறித்தபடி கிடந்தார். அது கந்தையர் அங்கிள். அவரையும் தூக்கிப் போட்டுக்கொண்டு படகு அலைகளைக் கிழித்தெறிந்தபடி பறந்தது.
"தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கைப் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதன்மூலம், விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவித் தப்பித்திருப்பார்களா" என சில தினங்களின்பின் தமிழக செய்திப் பத்திரிகைகள் எழுதின.
ஸ்ரீலங்காவின் ஆழிப்படையானது பல நாட்டு இராணுவ, யுத்தசூட்சும மூளைகளின் துணையுடன் கட்டிய அத்தனை நுட்பமான, பலமான கடல் வலயங்களையும் சுழித்துக்கொண்டு எப்படித்தான் தென்னகம் வந்தார்கள் என்ற சூட்சுமம் இன்னமும்தான் எனக்குப் பிடிபடவில்லை. இந்த நான்கு இளவட்டங்களாலும் வெளியேற முடிந்திருக்கிறது என்றால், இத்தனை பெரிய பலம்பொருந்திய சேனைகளை வைத்து ஏன் தலைவரைக் காப்பாற்ற முடியாமல் போனது என்ற கேள்வியும் அப்பப்போ எழுவதுண்டு. யாரிடமும் இதுபற்றி வாய் திறக்காமல் அப்படியே விழுங்கி விடுவேன்.
வலைஞர் மடம் களுவாடி தென்னந்தோப்பிலிருந்து புறப்பட்ட போராளிகளில் ஒருவன் எனது பெரியக்காவின் மகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ் மற்றும் ஊர்ப்பெடியளும் உறவுப் பிள்ளைகளுமான தவராசா சத்தியராசா, ஓட்டி குணசிங்கம் பாலதாஸ், லோஞ்சர் அப்சரா. கூடவே கந்தையர் அங்கிள்.
மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ் மிக நேர்த்தியான மாலுமிசாஸ்திரம் கற்ற படகோட்டி மட்டுமல்ல, பல யுத்த களங்களைக் கண்ட போராளி.
தவராசா சத்தியராசா ஆனையிறகுத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களின் பெரும் பங்காற்றியவன். ஓட்டி குணசிங்கம் பாலதாஸ் மிகக் கெட்டிக்கார படகோட்டியும், கச இருட்டிலும் சமுத்திரத்தின் நடுவில் திசைகளை அச்சொட்டாகச் சொல்லக் கூடியவனும், கடற்புலிகளின் மிக மூர்க்கமான போராளியும். லோஞ்சர் அப்சரா, லோஞ்சர் போன்ற பாரிய போர்க்கருவிகளைக் கொண்டு சமராடுவதில் கெட்டிக்காரி. சமர்க்களங்களில் பல எதிரிக் காவலரண்களை சர்வ நாசம் பண்ணிய வீரி.
2009 மே முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களின் பொருட்டு தூக்கம் என்பது அறவே இல்லையென்றான நிலை. எனது உறவுகளென இதுவரை 12பேர் உயிருடன் இல்லை என்ற தகவல் ஊர்ஜிதப் படுத்தப்பட்டு விட்டது. பலரைக் காணவில்லை. போராளிகளாயிருந்த இருபதுக்கும் மேற்பட்ட எனது உறவுக்கார இளைஞர்களின் நிலைகள் என்ன என்பதும் தெளிவில்லை.
மே 23ம் திகதி, சனிக்கிழமை அதிகாலையில் நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத, நம்பமுடியாத அதிர்ச்சித் தொலைபேசி.
தொலைபேசி அழைப்பில் வந்தவன் மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ்.
"மாமா நான் ஜெயந்தன், இந்த நம்பருக்கு உடன எடுங்க மாமா" இலக்கத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துக்கொண்டான்.
யாரது ஜெயந்தன் என சடனாக புலனில் தட்டுப்படவேயில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து யாரோ நமது பிள்ளைகள்தான் என மட்டும் விளங்கிக் கொள்ள முடிந்தது.
தூக்கத்தைத் தூர உதறி எறிந்துவிட்டு, தட்டுத்தடுமாறி சுரண்டல் போன்கார்ட்டை எடுக்கவும் பொறுமையின்றி அவன் கொடுத்த இலக்கத்துக்கு அழைத்தேன். மிக இரத்தினச் சுருக்கமான சங்கேதத்திலும், என்னால் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்திலும் தாங்கள் வந்த கதையைச் சொல்லி முடித்தான். முதியவர் ஒருவரையும் தாங்கள் காப்பாற்றி வந்ததாகச் சொன்னான்.
அன்றைய அரைநேர வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு, அவனோடு விரிவாகப் பேசி விபரங்களைக் கேட்டறிந்தேன்.
தனுஷ்கோடியிலிருந்து ஆறு நாட்களாக நடந்தும், லொறிகளிலும் எனப் பல்வேறு வழிகளைப் பசியோடும், நாவரட்சியோடும் கடந்து செங்கல்பட்டுவரை வந்து சேர்ந்த இடர்பாடுகளை விபரித்தான். "அமைப்பின்ர பேரச்சொல்லி வெளிநாடுகளில இருந்து வயிறு வளக்கிற மூதேசிப் பூனாக்கள வெட்டுவன் மாமா. அம்மாவாண இந்தப் பூனாமக்கள நம்பினதாலதான் அண்ணைக்கு இந்த நில...." அந்தக் கோபாவேசத்திலும் அழத் தொடங்கி விட்டான். என்னாலும் அவனது அழுகையைச் சகிக்க முடியவில்லை. கலங்கி விட்டேன்.
"சரியடா இப்ப ஒண்டும் கதைக்க வேணாம், பிறகு கதைப்பம். கவனமா இருங்க. கண்டபடி திரியவேணாம். கடைகளில ஏதாவது சாப்பாட்டுச் சாமானுகள் வாங்கிறதெண்டாலும் நீங்கள் போக வேணாம்"
"சரி மாமா"
தமிழகத் தோழர்களோடு தொடர்பு கொண்டு அவர்களைச் சென்னைக்கு அழைத்து வரவும், அங்கு பாதுகாப்பாகத் தங்குவதற்குமான ஏற்பாடுகளை ஒருவாறு செய்து முடித்தபின்புதான் மனம் சற்று இலகுவானது.
சரியாக ஒருவாரம் கழித்து, மே 30, சனிக்கிழமை. அதிகாலை நான்கு மணிக்கு மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ் தொலைபேசி எடுத்தான். "அவசரம் மாமா, ஒருக்கா எடுங்கோ"
எடுத்தேன்.
"மாமா, நல்லொரு சாண்ஸ் கிடைச்சிருக்கு மாமா, இண்டைக்கிரவு ஜம்ப் பண்ணப்போறம். அஞ்சுபேருக்கும் இங்கத்தயானுக்கு இருவது..."
"லைனுக்கு வெளியவோ...?"
"ஓம் மாமா"
"அவருமோ...?"
"ஓம் மாமா. எப்பிடி மாமா அவரத் தனிய விட்டுப்போட்டுப் போறது...?"
"அதுதான் கேட்டனான். அவரையுமெண்டால் நல்லது. மொத்தமா இருவதோ"
"ஓம் மாமா, சின்ன இருவது"
"அப்பிடியெண்டால் பக்கத்து லைனோ?"
"அப்பிடித்தான் மாமா"
"சரி, அப்ப இண்டைக்குப் பின்னேரத்துக்குள்ள கிடைக்கச் செய்யிறன் ஒண்டுக்கும் யோசிக்கவேணாம்"
மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ் சகலகலாச் சுழியன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது அதை நம்பும்படியாக அவன் செயல்ப்படுகிறான். மலேசியாவிலிருக்கும் தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இந்தப் பயண ஒழுங்குகளைச் செய்திருக்கிறான். வெறும் இந்தியப்பணம் இருபதாயிரத்துடன் நால்வரும் இன்றிரவு மலேசியா பயணமாகிறார்கள்.
இன்னும் மூன்று தினங்களுக்குள் கட்டவேண்டிய கரண்ட்பில் காசு மூவாயிரம் குரோணர்கள் இருந்தன. கட்டத் தவறினால் ஒருவாரம் கழித்து ஒரு எச்சரிக்கைக் கடிதம் வரும் "இன்னும் 14நாட்களுக்குள் கட்டத் தவறினால் மின்சார இணைப்புத் துண்டிக்கப் படும்" என்று. எனவே மூன்று வாரங்களுக்குப்பின் பில்லைக் கட்டுவதற்கான கால அவகாசம் உள்ளது. அதற்குள் சம்பளம் வந்துவிடும். அவசர அவசரமாக ஓடிச்சென்று தமிழகத் தோழர் ஒருவரின் கணக்கில் வெஸ்ரேன் யூனியனூடாகப் பணத்தை அனுப்பி வைத்தேன். இந்தியப் பணத்துக்கு இருபத்தெட்டாயிரத்து எண்ணூற்றிச் சொச்சம் வந்தது. அடுத்த சில மணிநேரங்களில் அவர்களது கையில் கிடைத்து விட்டதையும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.
அதன்பின் ஒருவாரமாக மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை.
தமிழகத் தோழர்களிடமும் விசாரித்துப் பார்த்தேன். ஒருவித விபரமான தகவலும் கிடைக்கவில்லை.
கவலை மிகவாக இருந்தது. என்னவானார்கள் என்ற ஏக்கமும், பயமும் ஒருவாரமாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
கொடுமரணச் சமுத்திரத்தை மூர்க்கமாகத் தாண்டிவந்த சாதனையாளர்கள், கெண்டைக்கால் நீரில் மூச்சு முட்டிச் சாவதோ என்ற ஏக்கம்.
2009 ஜூன் 6ம் திகதி, சனிக்கிழமை மதியம் இனந்தெரியா இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ்.
"வையப்பன் நான் எடுக்கிறன்" என்றேன்.
"இல்ல மாமா, இது Freeதான் கதையுங்கோ" என்றான்.
தாங்கள் மலேசியா வந்து சேர்ந்ததையும், இப்போ பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொன்னான். கந்தையர் அங்கிளைப்பற்றி விசாரித்தேன். அவர் மிகச் சந்தோசமாக இருப்பதாகச் சொன்னான். மலேசியத் தமிழ் நண்பர்களின் உதவிகள் இருந்தாலும்கூட லோஞ்சர் அப்சராவின் நிதானமான திட்டங்களும், தீர்மானங்களும், ஆலோசனைகளுமே தம்மை மலேசியாவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்தது என்பதையும் சொன்னான். அதுமட்டுமல்ல, வலைஞர் மடத்திலிருந்து புறப்பட்டபோது குறுக்கிட்ட மூன்று டோராப் படகுகளையும் லோஞ்சரால் அடித்துடைத்து, மூன்று லைன்களையும் லோஞ்சர் அப்சரா கிளீயர் பண்ணியதால்தான் தாம் வெளிவர முடிந்தது என்றும் சொன்னான்.
82, 83 காலப் பகுதிகளில் மிகுந்த உணர்வுகளோடும், அர்ப்பணிப்பு மனநிலைகளுடனும் விடுதலை இயக்கங்களுக்கெனப் புறப்பட்டுவந்த இளம் பெண்களை எங்களது யாழ்ச்சமூகம் எப்படியெல்லாம் வசவு சொல்லி நோகடித்தது.
"எடுபட்டுப் போனவள், கிணாய்ச்சுக்கொண்டு ஓடினவள், வேசையாடப் போனவள், தோறை, அடங்காப்பிடாரி, அள்ளுப்பட்ட வேசை, அரிப்பெடுத்த குமரி, தறுதலைத் தேவடியாள், ஆட்டக்காறி, டம்பாசாரி...." இப்படிப் பல பட்டப் பெயர்களையும் வாங்கிக்கொண்டு, நாட்டு விடுதலைக்காகப் பணி செய்த பெண்கள் ஆயிரமாயிரம். ஆயினும் அவர்கள் இதனையெல்லாம் கொஞ்சம்கூடக் கரிசனைக்கெடுத்துக் கொள்ளவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட தேச விடுதலைப் பணியைத் தலையால் சுமந்தார்கள். சொல்லொணா இடர்பாடுகளைத் துச்சமென ஊதித் தள்ளினார்கள். அந்தந்த அமைப்புக்கள் தத்தம்மளவில் கொண்ட விடுதலைக் கொள்கைகளை, அரசியற் கருத்தியலை உள்வாங்கி, தெளிவுள்ளவர்களாகவே மக்களுக்குள் போர்ப்பணி செய்தார்கள்.
எண்பத்துமூன்றின் இறுதியிலும், 84இன் தொடக்கங்களிலும் விடுதலை இயக்கங்கள் ஆயுதபலத்துடன் யாழ் மண்ணில் உலா வந்தபோது, பெண்போராளிகள் மீதான கட்டுப்பெட்டிக் கலாச்சார ஒழுக்கம்சார் வசவுகள் பெரும்பாலும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து குறைந்துபோயின. அந்த ஆயிரமாயிரம் விடுதலைப்போர்ப் பெண்களின் பிரதிநிதியாக லோஞ்சர் அப்சராவை இந்த இடத்தில் நிறுத்தி அழகு பார்க்கவும், சல்யூட் அடித்து மரியாதை செலுத்தவும் நான் ஆசைப்படுகிறேன்.
2009 நவம்பர் 28. சனிக்கிழமை. மருமகன் ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ் தொலைபேசியில் வந்து சொன்னான் "மாமா, சந்தோசமான விசயம் ஒண்டு"
"ஐயோ சொல்லப்பன், என்னடா...?"
"அங்கிள் இண்டைக்கு வெளிக்கிடுறார். நோர்வே UNHCR அவருக்கு அசூல் குடுத்து எடுக்கிறாங்கள். அங்க வாறார்"
"அப்ப உங்களுக்கு....?"
"விடு மாமா. இத நம்பி நாங்க இல்லத்தானே மாமா....." சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான்.
"........................."
இதுதான் அவனுடனான கடைசி உரையாடலாக இருக்குமென்று அப்போது எனக்குத் தெரியாது. இதற்குப்பின் அவர்கள் நால்வரும் எங்கே சென்றார்கள், என்னவானார்கள் என்பது பற்றிய கடுகளவு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.
கந்தையர் அங்கிளும் தனக்கு விபரங்களெதுவும் தெரியாது என்றார்.
2009 நவம்பர் 28ம் திகதி இரவு தன்னை அவர்கள் நால்வரும் வந்து ஒரு பேனா பரிசளித்து வழியனுப்பி வைத்தது வரைதான் தனக்குத் தெரியும் என்றார்.
இதில ஒரு கட்.
ஹாண்டிலக் கொஞ்சம் வெட்டி, எதிர்க்க வாற முடக்கால திருப்பி, குறுக்கமுன்னா வாற குச்சொழுங்கைக்குள்ளால கூப்பிடுதுலைவரைக்கு உளக்கிக்கொண்டு போனால் ஒரு கிறவல் றோட்டு வரும், அதாலை நாலு மிதி மிதிச்சால் ஓலசுண்ட் ரவுண்.
இதிலயும் ஒரு கட்.
விமான நிலைய பஸ் ஓலசுண்ட் பஸ் ஸ்ரேசனில் வந்து தரித்தது. இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டும்தான் உள்ளது ஆறு மணியாவதற்கு.
இதொரு கண்டறியாத பட்டினம். நோர்வேயின் மிகப்பெரும் பாரம்பரிய மீன்பிடி நகரங்களில் ஒன்று. நோர்வேயின் பெரும்பான்மை ஆதிக்கர்களான கடலோடிகள் கட்டிக் காத்த வரலாற்று முக்கியத்துவமான நகரம். அதிலும் கிறிஸ்தவ சுத்தமான சூசைப்பிள்ளைகள். அதனால் குடிபானங்களை எடுத்த மாத்திரத்தில் எல்லா நேரங்களிலும் கடைகளில் வாங்க முடியாது. பெரிய குடிபானங்கள் சாராயத் தவறணைகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதியுண்டு. கிழமை நாட்களில் சாராயத்தவறணை மாலை நான்கு மணியோடு பூட்டு. இன்று சனிக்கிழமை இரண்டு மணியோடு பூட்டப்பட்டிருக்கும். பியர் வாங்குவதானால் பலசரக்குக் கடைகளில்தான் வாங்க முடியும். கிழமை நாட்களில் இரவு எட்டு மணிவரையும், சனிக்கிழமைகளில் மாலை ஆறுமணிக்கு முதலும்தான் வாங்கமுடியும்.
அவசரத்துக்கு அப்பப்போ கை கொடுக்கும் போலந்துநாட்டு நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குப் போன் பண்ணினால் போலந்த் வொட்கா மிக மலிவாகக் கொண்டுவந்து கொடுப்பான். என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் நினைவில் வந்தது கந்தையர் அங்கிள் பெரியவை பாவிக்க மாட்டார் பியர் மட்டும்தான் எடுப்பார் எனவும். எனவே பியரையே வாங்குவதெனத் தீர்மானித்தேன்.
இன்னும் சில நிமிடங்கள் மட்டுதான் உள்ளன. ஓட்டமும் நடையுமாகச் சென்று ஒரு கடைக்குள் புகுந்து ஆறு ரின் பியரை வாங்கிக் கொண்டு, ஆறு பத்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
முதன்முதலில் கந்தையர் அங்கிளை நேரடியாகக் காண்கிறேன். சீர்காழி எஸ் கோவிந்தராஜனைப்போல் அச்சொட்டான உருவம். அதே சிரிப்பு. இருவரும் கட்டித் தழுவிக் கொண்டோம். ஒரு நிமிடத்துக்குமேல் நின்று நிதானித்து ஒருவரையொருவர் சிரித்தபடியே பார்த்துக் கொண்டோம்.
குளித்துமுடித்து விட்டு, நான் வரும்வரையும் சாப்பிடாமல் இருப்பதாக கவின்குட்டி சொன்னாள். பியர்ரின் கேஸை எடுத்து மேசையில் வைத்தேன். "உத எடுத்து வை தோழா" எனச் சொல்லிவிட்டு தனது சிறிய சூட்கேஸிலிருந்து ஸிவாஸ் போத்தல் ஒன்றை எடுத்து மேசைமீது வைத்தார்.
ஓஹ், கந்தையர் அங்கிள் இந்தளவுக்கு முன்னேறி விட்டாரா....?, இரண்டு ரின் பியர்தான் இவருடைய றேஞ்ச் என்று ஒஸ்லோ நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். காலங்களும் சூழல்களும் எப்படியெல்லாம் மாற்றங்களை உருவாக்கி விடுகின்றன. 80களில் இயக்க காலங்களில் தம் அடிப்பவர்கள்மீது, அதிலும் இயக்கப் போராளியாக இருந்து தம் அடிப்பவர்கள்மீது அப்படியொரு வெறுப்பு எனக்கு. அதே நான் 87இல் கோடம்பாக்கத்தில் தினப்படி இருபதுக்கும் குறையாமல் (காஜா பீடிதான் பெரும்பாலும்) ஊதித் தள்ளும்படியாக ஆக்கியதும் இந்தக் காலமும் சூழலும்தானே. இதற்கு கந்தையர் அங்கிள் மட்டுமென்ன விதிவிலக்கா...?
குசினிக்குள் நின்று இறாலை ஆய்ந்து மிளகாய்த்தூளும் உப்பும் போட்டும் பிரட்டி, எண்ணைச் சட்டியில் போட்டுக்கொண்டே ஸிவாஸின் முதலாவது பெக்கை முடிவுக்குக் கொண்டு வந்தோம். "இதுக்கு சிவப்பு வெங்காயந்தான் தோழா சோக்காயிருக்கும்..." என சிவப்பு வெங்காயத்தை எடுத்து வெட்டத் தொடங்கினார் கந்தையர் அங்கிள். "விடுங்கங்கிள் நான் செய்யிறன்" என்று அவரைத் தடுத்தேன்.
"நம்ம வீட்டு வேலயள நாமதான் செய்யவேணும் தோழா. நீ அடுப்பைப் பார்" எனச் சொல்லிவிட்டு சிவப்பு வெங்காயத்தை மிக நேர்த்தியாக வளையம் வளையமாக வெட்டினார். அவர் வெங்காயம் வெட்டும் ஸ்ரைலே ஒரு தனி ரகமாக இருந்தது. கைதேர்ந்த சமையற்கலைஞன் புகுந்து விளையாடியதுபோல் இருந்தது. ஒவ்வொரு வெங்காய வளையமும் நூல் பிடித்து அளந்து வெட்டியதுபோல் இருந்தது. பின்பு தானாகவே மிளகுப் பொடியையும், உப்பையும் எடுத்து வெங்காயச் சீவலுக்குள் தூவினார். பாதி இலுமிச்சையை பிழிந்து விட்டார். பொரிந்த இறாலை நான் இறக்கி பீங்கானில் போட்டதும் அதன்மேல் வெங்காயச் சீவல்களை அழகாகப் பரத்தித் தூவினார். ஒரு தக்காளியை எடுத்து பிறை வடிவத்தில் துண்டுகளாக்கினார். பொரியல் பீங்கானின் கரைகளில் வட்டமாக அடுக்கினார். கொத்தமல்லி இலையில் சிறிது உருவித் தூவினார். கறிவேப்பிலையில் கொஞ்சம் உருவி இறால் பொரித்த எண்ணைச் சூட்டில் சிறிது போட்டெடுத்து அதையும் பொரியல் பீங்கானில் தூவினார். இப்போ பொரியல் பீங்கான் ஒரு அழகான ஓவியம்போல் இருந்தது. சாப்பிடுவதற்காக இந்தக் கைவண்ணத்தைச் சிதைப்பதா என்ற சங்கடம் தோன்றியது.
உப்பில் ஊறிய ச(ல்)மன் மீன் துண்டுகளின்மீது புளியைக் கரைத்து ஊற்றி, ஆறு பச்சைமிளகாய்களை எடுத்து கிரைண்டரில் இட்டு நல்ல பட்டுப்போல் அரைத்தெடுத்து பிரட்டி ஊற வைத்து விட்டு இருவரும் இறால் பொரியல் பீங்கானுடன் மீண்டும் ஹோலில் போய் அமர்ந்து கொண்டோம். ஸிவாஸின் இரண்டாவது பெக் இருவரின் கோப்பைகளிலும் தஞ்சமாகியது.
கந்தையர் அங்கிள் தனது புதிய சிறுகதைத் தொகுப்பின் இரண்டு பிரதிகளை தனது சிறிய சூட்கேசிலிருந்து எடுத்தார். ஒன்றை எனக்குத் தந்தார். இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டேன். "வலைஞர்மட கரையின் தடங்கள்" தலைப்பைப் பார்த்தும் உள்ளே என்ன இருக்கும் என்பதை ஓரளவு உணர முடிந்தது.
ஈர மணற்கரையில் பதிக்கப்பட்ட கால்த்தடங்கள் அப்படியே கடலுக்குள் சென்று கரைந்து போவதான முகப்புப் படமும் கவித்துவமாக இருந்தது. இப்படியொரு புகைப்படத்தை "மீண்டுமவனைக் காணவில்லை" என்ற தலைப்பில் 1986ம் ஆண்டு யாழ்.சுண்டுக்குளி மகளிர் மகாவித்தியாலயத்தில் நடந்த எனது முதலாவது புகைப்படக் கண்காட்சியில் வைத்திருந்தேன். சட்டென அதுதான் நினைவுக்கு வந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்தப் படமும் தலைப்பும் எல்லாப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. பத்திரிகைகள்கூட அதனைப் பெரிதுபடுத்தி எழுதியிருந்தன.
முதலாவது தடவை அவன் காணாமல் போனது, தேச விடுதலையின் பொருட்டு அடுக்களையில் சீனிப் பேணிக்குள், அல்லது சரக்குப் பெட்டிக்குள் அம்மாவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு இயக்கத்துக்குப் போனது. மீண்டும் இரண்டாவது தடவை அவன் காணாமல்ப் போனது, விடுதலையின் பெயரால் புறப்பட்ட இயக்கங்கள் அவனைக் காணாமல்ப்போகச் செய்தது. இதுதான் அந்தப் படம் சொல்லிய தகவல். "மீண்டும் அவனைக் காணவில்லை" என சேரனோ, சோழனோ, பாண்டியனோ யாரோ ஒருவர் கவிதை எழுதியதாகவும் நினைப்பு. அதன் தாக்கமாகக்கூட இருக்கலாம் அந்தப் படத்துக்கு அந்தத் தலைப்பை நான் தேர்வு செய்து இட்டதற்கு. களத்தில் இல்லாமல், தப்பித்து பாதுகாப்பாக ஓரத்தில் நின்று எழுதுபவர்களது எழுத்துக்களையும் உள்வாங்குவதும், அங்கீகரிப்பதும், கொண்டாடுவதும்தானே விடுதலைப் போரின் சிறப்பு.
"எந்த இயக்கத்தைத் தேர்வு செய்வது, எந்த இயக்கத்தில் சேர்ந்து போராடுவது என்ற குழப்பத்தில் அப்போது நான் இருந்தேன்" என இப்போ வந்து சிலர் சப்பைக்கட்டுக் கட்டுவதெல்லாம் சுத்தப் பம்மாத்து.
இந்தச் முச்சந்தியில் நின்று இன்னொரு விசயம் பற்றியும் நாலு வார்த்தை சொல்லி வைத்துவிட்டுப்போக ஆசைப் படுகிறேன். விடுதலை இயக்கங்கள் தமிழர்களுக்கான விடுதலைப் போரை சரிவர நடாத்தியதோ இல்லையோ ஆனால் சிலபல நன்மைகள் இயக்கங்களால் நடந்தேறின. அதிலொன்றுதான் போராளிகள் பலரை நல்ல இலக்கியப் படைப்பாளிகளாக ஆகச் செய்தது.
அதொரு புறமிருக்க, 83இல் அள்ளுகொள்ளையாக விடுதலை இயக்கங்களுக்கு பெண்கள் ஆண்கள் என தமிழ் இளஞ்சமூகம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்களை வசதியான அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு பார்சல் செய்துகொண்டிருந்தன. அப்படித் தப்பிப் பிழைப்பதற்காக ஏற்றுமதி செய்யப்பட்ட பலர் தம்மை எல்லா வசதிவளக் கட்டுமானங்களிலும் ஸ்திரப் படுத்திக்கொண்டதன் பிற்பாடு இலக்கியர்களாகவும், அரசியல் விமர்சகர்களாகவும் உருப்பெற்று நடுச்சந்தியில் வந்து எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் முக்காடு விலக்குகிறார்கள். அவர்கள் எண்பது காலப் போரையும், போரியக்கங்களையும், போராளிகளையும் அடித்துப் பிரித்து பிய்த்து மேய்ந்து பந்தாடி பக்கம் பக்கமாக அரசியல், விமர்சன, இலக்கியப் புண்ணாக்குகளைப் படைக்கிறார்கள். அவர்களையும்கூட எந்தவித நிராகரிப்பும் செய்யாமல் இந்தப் போர் கையைப் பிடித்துக் கூடவே கூட்டிக்கொண்டுதான் போகிறது. இதுதான் இந்த விடுதலைப் போரின் சிறப்பு.
கந்தையர் அங்கிளின் "வலைஞர்மட கரையின் தடங்கள்" சிறுகதைத் தொகுப்பை முன்னும் பின்னுமாகத் திருப்பித் திருப்பி ஸ்பரிசித்தேன். மிக அழகான, கச்சிதமான தொகுப்பாய்த் தெரிந்தது. பதினோரு கதைகள் அடக்கமாயிருந்தன. முதலாவது கதையின் தலைப்பு "பலம் பொருந்திய மேய்ப்பர்களும், அச்சப்பட்ட மந்தைகளும்" என இடப்பட்டிருந்தது.
86இல் மகன் கொல்லப்பட்டதோடு எழுதுவதையே நிறுத்தி விட்டார் கந்தையர் அங்கிள். இங்கு வந்தபின் கடந்த சில மாதங்களாகவே எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆயினும் அவரால் புலம்பெயர் படைப்புக்களின் பக்கம் எட்டிப் பார்க்க முடியாதிருந்தது. யுத்தபூமி அனுபவங்களை ஒரு பதிவாக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே எழுதத் தொடங்கினார். புலம்பெயர் இலக்கியத்துள் நடக்கும் பிடுங்குப்பாடுகள் அநேகமானவை அங்கிளுக்குத் தெரியாது.
"அங்கிள், இந்த முதல்க் கதையை வாசிப்பமோ அங்கிள்...?"
"ஏனில்ல, வாசிக்கலாம் தோழா. நீ வாசி."
"இல்லயங்கிள், நீங்கள் வாசியுங்கோ, இன்னொரு கதையெடுத்து நான் வாசிக்கிறன்"
கந்தையர் அங்கிள் முதலாவது கதையைப் படிக்கத் தொடங்கினார்.
கதையை அவர் வாசிக்கும்போது கதையோடுகூட அவரது குரலில் ஒரு கோபம் தொடர்ந்து பயணித்தது. இடையிடையே குரலில் ஓர் தளர்வும், சோகமும்.
யாழ்ப்பாணத்திலிருந்து நாச்சிக்குடாவுக்குப் புலம் பெயர்த்தப்பட்ட வழிப்பயணத்தின் துன்பங்களையும், இடர்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது கதை.
கதையோடு கலந்து ஸிவாஸின் இரண்டாவது பெக்கும் எமக்குள் கரைந்துபோனது. மூன்றாவது பெக் கிண்ணங்கள் இரண்டையும் நிறைத்தன.
தொகுப்பின் இறுதிக் கதையாக இருந்த, தொகுப்பின் முகப்பெயராய் அமைந்த "வலைஞர்மட கரையின் தடங்கள்" என்ற கதையை வாசிப்பதற்காக எடுத்தேன்.
"தம் ஒண்டு போடுவம் தோழா" என்றார் அங்கிள். எனக்கும் அது கட்டாயமான தேவையாக இருந்தது. குசினியின் பின் கதவைத் திறந்தால் அது கீழ்நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களால் நிலவறைக்குக் கொண்டு செல்லும். நிலவறையின் கோடிப்புறக் கதவைத் திறந்தால் பின் வளவுச் சிறு துண்டின் ஓர் ஓரத்தில் நான் தம் அடிக்கும் மூலை. ஆளுக்கொரு சிகரட்டை ஊதி முடித்தோம்.
இந்தத் தொகுப்பை அச்சாக்குவதற்குத் தான் பட்ட அவஸ்த்தைகளையும், பொருளாதாரப் பிரச்சனைகளையும் தம்மடித்த அந்த நேரத்திற்குள் சொல்லி முடித்தார் கந்தையர் அங்கிள். தொகுப்பை வெளியிடுவதாகப் பொறுப்பேற்று வாக்குத் தந்த சில பதிப்பகங்கள் கடைசி நேரத்தில் நாசூக்காக நழுவியதையும் சொன்னார்.
"தமிழ்நாட்டிலயிருந்து ஈழத்துப் படைப்பாளிகளின்ர எப்பிடியான படைப்புகள் வரவேணுமெண்டு தீர்மானிக்கிறது படைப்பாளிகளில்ல அங்கிள். அது அந்தப் பதிப்பகங்கள்தான். தங்களுக்கு பிஸினஸ் சைட்டால பாதகமில்லாததுகளத்தான் செய்வாங்கள்" என்றேன்.
"அதுகும் சரிதானே தோழா....? காசக் கரியாக்கி இலக்கியச் சேவை செய்யவேணுமெண்டு அவங்களுக்கென்ன தலயெழுத்தா...?" ஒரு கிண்டலாகவே சொன்னார் அங்கிள்.
மீண்டும் நிலவறையினூடாகப் படியேறிக் குசினிக்கு வந்தோம்.
"தோழா உந்தச் சிவப்பு மீன ஏதோ பிரட்டி வச்சாய் என்ன செய்யப்போறாய்?"
"பொரிப்பம் அங்கிள்"
"பொரிச்ச றால் கொஞ்சம் எடுத்தபடியே அப்பிடியே கிடக்கு....?" சிரித்துக்கொண்டே கேட்டார்.
"எதயும் வேஸ்ராக்கமாட்டம் அங்கிள். அதையும் சாப்பிடுவம், இதையும் சாப்பிடுவம்" எனச் சொல்லிக் கொண்டே இறால் பொரித்த இரும்புச் சட்டியை கழுவி மீண்டும் அடுப்பில் ஏற்றினேன்.
மூன்றாவது பெக்குகள் நிறைந்த கோப்பைகள் இரண்டையும் எடுத்துக்கொண்டு குசினிக்குள் வந்தார் கந்தையர் அங்கிள்.
மீன் பொரித்து இறக்கவும் இருவரது ஸிவாஸின் மூன்றாவது பெக்குகள் அடித்து முடியவும் சரியாக இருந்தது.
ஆளுக்கொவ்வொரு துண்டு மீனை சுடச்சுடச் சுவைத்து முடித்தபின் பதினோராவது கதையான "வலைஞர்மட கரையின் தடங்கள்" என்ற கதையை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
கந்தையர் அங்கிள் ஸிவாஸின் நான்காவது பெக்குகளை கிண்ணங்களில் நிறைத்தார்.
வாணவேடிக்கைகள் நடந்துகொண்டிருந்த வானத்தின்கீழ் விரிந்துகிடந்த நிலத்தில் சேறும் சகதியுமான மனித உடல்களின்மீது நின்றுகொண்டிருந்த எனது உடலுக்குள் சன்னங்களும், ஷெல் துண்டுகளும் ஊடுருவி வதைத்தன. பீரங்கிச் சத்தங்களுக்கு மேலாக மனிதக் கூக்குரல்கள் செவிப்பறைகளை வெடி வைத்துத் தகர்த்தன. பீரங்கிகளால் கொய்தெறியப்படும் தென்னைகளின் தலைகள் எரிந்தபடியே பறந்து பறந்து நிலமெங்கும் நெருப்பு மூட்டின. அந்த நெருப்பு வயலுக்குள் தனியனாக நின்றேன்.
ஸிவாஸின் நான்காவது பெக்கை நான் தொடவேயில்லை. எல்லாவித இன்பங்களினதும், எல்லாவித துன்பங்களினதும் வெப்பத்தை ஆற்றுப்படுத்துவது தண்ணியடித்துத்தான் என்ற என்போன்ற குடியானவர் தத்துவம் தவிடுபொடியானது.
கதை முடிந்தபோது அங்கிள் நான்காவது பெக்கை முடித்திருந்தார். மீண்டும் சிகரட் ஒன்றைப் பற்றவைக்கும் முடிவோடு எழுந்தேன்.
"அதை எடுத்து முடி தோழா" என்றார் அங்கிள்.
"எனக்கு வேண்டாம் அங்கிள், நீங்கள் எடுங்கள்" என்றேன்.
எனது நான்காவது பெக் நிறைத்திருந்த கோப்பையை எடுத்துக்கொண்டு என்பின்னால் நிலவறைப் படிகளில் இறங்கி வந்தார் கந்தையர் அங்கிள்.
இருவரும் மவுனமாகவே நின்று புகையாற்றிக்கொண்டோம். நான் வாய் திறப்பேனென்று அங்கிளும், அவர் முதலில் பேச்சை ஆரம்பிப்பார் என நானும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். எதுவுமே பேசவில்லை இருவரும்.
சிகரட்டின் அடிக்கட்டையினோரத்தில் இருந்த இறுதித் தம்மை உறிஞ்சி இழுக்கும்போது வாய் திறந்தார் அங்கிள்.
"தோழா, கனடாவிலயிருந்து கூப்பிட்டிருக்கினம் வரச்சொல்லி..... என்ர புத்தகத்துக்கு இலக்கியவயல் எண்ட கொம்பனியொண்டு இலக்கியப் புயல் விருது தருகினமாம்..."
அங்கிள் சொல்லி முடிக்கவில்லை, நான் உறிஞ்சியிழுத்த இறுதித் தம் நாசிக்குள் சிதறி புரைக்கடித்தது. அல்லது சிரசிலடித்தது. தொடர்ந்து இருமத் தொடங்கினேன். ஒருவாறு சாதாரண நிலைக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டு சிரித்தபடியே "நல்லதங்கிள். போயிட்டு வாங்கோ" என்றேன்.
"அதுக்கேன் தோழா சிரிக்கிறாய்...?" எனக் கேட்டார்.
"ஐயையோ ஒண்டுமில்ல அங்கிள், சந்தோசத்தில வந்த சிரிப்பு" என்றேன்.
அங்கிள் சாப்பிட்டு முடித்தார். என்னால் ஒருவாய்கூடச் சாப்பிட முடியவில்லை. என்னைச் சாப்பிட வைக்க எவ்வளவோ பிரயத்தனப் பட்டார் அங்கிள். வேண்டாமென மிக வினயமாக வேண்டிக் கொண்டேன் அவரை. ஒரு கவளம் குழைத்து உருட்டி எனக்கு ஊட்டிவிட்டார். தொண்டைக்குழியைவிட்டு சோற்றுப் பருக்கைகள் இறங்க மறுத்தன. வெடிச் சத்தங்கள் இன்னமும் செவிகளுக்குள் முட்டி முழங்கிக் கொண்டிருந்தன. நெருப்பின்மேல் பதைபதைக்க நின்றுகொண்டிருந்தேன்.
குழந்தைகளின் அழுகுரல் ஓலங்களும், பெண்களின் கூக்குரல்களும், முதியவர்களின் ஒப்பாரியும் சேர்ந்து, சேனைகளை வழி நடத்தியவர்களுக்கான கூலிகளைக் கோரிக்கொண்டிருந்தன. அவற்றோடுகூட ஓர் ஓரத்தே ஒதுங்கிநின்று ஒலிக்கும் எனது சிறு விசும்பலும் என் காதுகளுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.
அங்கிள் சாப்பிட்டு முடித்ததும் நிலவறைக்குள் இருந்த எனது ஹோம் ஸ்ரூடியோவுக்குள் கிடந்த ஷோபாவில் உடனே படுத்துத் தூங்கிப்போனார். நானும் நிலத்தில் பெற்சீற்ரை விரித்துப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். கண்கள் எரிவு கண்டனவே தவிர உறக்கத்தைத் தொட்டும் பார்க்கவில்லை. அதிகாலை நாலரை மணியளவில் உறங்கிப் போயிருப்பேன் என நினைக்கிறேன்.
காலை எட்டு மணிபோல் எழுந்து பார்த்தால் ஷோபாவில் அங்கிளைக் காணவில்லை. ஹோலுக்குச் சென்று பார்த்தேன். வலும் டீங்காக வெளிக்கிட்டு புது மாப்பிள்ளைபோல் ஹோலில் அமர்ந்திருந்தார் அங்கிள்.
"வா தோழா, ரீ போட்டு ஃப்ளாஸ்கில வச்சிருக்கிறன் எடுத்துக்குடி" என்றார்.
"என்னங்கிள் நேரத்தோட எழும்பீற்றீங்கள்போல...?"
"ஓம் தோழா, எப்பிடித்தான் பிந்திப் படுத்தாலும் எலாம் வச்சமாதிரி அஞ்சு மணிக்கு எழும்பியிருவன். கன நாளைக்குப்பிறகிட்டு இண்டைக்கு நல்ல நித்திர கொண்டன்" என்றார்.
அங்கிள் போட்டு வைத்த தேநீரைக் குடித்தவாறு கேட்டேன் "எப்பவங்கிள் கனடாக்காறர் கூப்பிட்டிருக்கிறாங்கள்?"
"இப்ப வாற பத்தொம்பதாந் திகதி விருது குடுக்கினமாம். அப்ப அங்க நிக்க வேணுமாம்"
"போக்குவரத்துச் சிலவங்கிள்...?"
"போட்டுக்கொண்டு வரட்டாம் அங்க வந்தப்பிறகு தருவினமாம்"
"பறுவாயில்லயே...., இங்க சில நாடுகளில விருதுகள் தாறம் வாங்கோ எண்டு கூப்பிடுவாங்கள். ரெண்டாயிரம் மூவாயிரமெண்டு நம்மட கைக்காசு போட்டுச் சிலவழிச்சுப் போனால், 20x29,7 சென்ரிமீற்ரர் வெள்ளப் பேப்பரில கலர் பிறிண்டவுட் எடுத்துத் தருவாங்கள், நாக்கத் தொங்கப் போட்டுக்கொண்டு வரவேண்டியதுதான். ஆனால் உது பறவாயில்ல அங்கிள். அதெல்லாஞ்சரி ரிக்கட் போட்டாச்சா அங்கிள்...?"
"இன்னுமில்ல, இனித்தான்"
"அங்கிள்...., நேரத்தோட போட்டிருந்தா மலிவாப் போட்டிருக்கலாம் அங்கிள். நீங்கள் ஒஸ்லோவிலயிருந்து ரிக்கட் போட்டுப் போயிட்டு இங்க வந்திருக்கலாமங்கிள்"
"இல்லத் தோழா. நாளைக்கு ஒம்பதாந்திகதி இங்க எனக்கு றூம் தந்திருக்கிறாங்கள். நாளைக்கு நான் பாரமெடுக்க வேணும். ஒஸ்லோ றூம் பாரங் குடுத்துப்போட்டுத்தான் வெளிக்கிட்டனான்"
"ஓ.... அப்ப நிரந்தரமா இங்கயே வந்திட்டீங்களா அங்கிள். சொல்லவேயில்ல. சந்தோசமா இருக்குதங்கிள்"
"ஓம். கன காலமாக் கேட்டுக்கொண்டிருந்தனான் இந்த இடத்துக்குப் போகப்போறன் எண்டு. இப்பதான் தந்தாங்கள். நீ நல்ல இயற்கைக்குள்ள சீவிக்கிறாய் தோழா. அறிஞ்சு பாத்தமட்டில எனக்கும் இந்த இடம் நல்லாப் பிடிச்சுப்போச்சு. நல்ல கடல்க்காத்து, சுத்தமான காத்து"
"ஓமங்கிள். வெளியிடங்களுக்குப் போறதெண்டால்த்தான் போக்குவரத்துச் சிலவு. மற்றும்படி நிம்மதியான இடம். இண்டைக்கு உங்களுக்கு ரிக்கட் பாப்பமங்கிள்"
"ஓம் தோழா, இண்டைக்குப் புக் பண்ணுவம்"
கட்.
14ம்திகதி சனிக்கிழமை இரவு பத்துமணியளவில் கணேசன் போன் பண்ணினான். அங்கிள் டொரன்ரோ வந்து சேர்ந்துவிட்டதாச் சொன்னான்.
"சரி மச்சி, நான் சொன்னமாதிரி நீ அங்கிள வீட்ட கூட்டிக்கொண்டுபோய் வச்சிரு. அங்கயிருக்கிற இலக்கியக்காரர் ஆரயாவது சந்திக்கப் போறாரெண்டால் ஒழுங்கு செய்துகுடு மச்சி"
"ஓமடா அதெல்லாம் இனி நான் பாக்கிறன், ஹாண்ட்போனில கதைக்கிறன் மூதேசி வையடா"
மாசி பத்தொன்பது.
கனடா இலக்கிய வயல் அமைப்பினரின் "இலக்கிய புயல் விருது" வழங்கும் வைபவம் மாலை ஐந்து மணிக்கு.
கணேசன் மாலை நான்கு மணிக்கே கந்தையர் அங்கிளையும் அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குப் போய்விட்டான். அவன் நேரத்தோடு போக வேண்டிய தேவையும் இருந்தது. ரொரன்டோவில் பல பிறந்தநாள் வைபவங்கள் முதற்கொண்டு, கல்யாணம், செத்தவீடு, புத்தக வெளியீடு, கலைநிகழ்வு, கூத்து மேடை எனப் பல நிகழ்வுகளில் கட்டாயமாகப் பங்கெடுக்கும் அவனது தேநீர்த்தாங்கி. நூறு நூற்றி இருபத்தைந்து பேருக்கான தேநீர் வழங்கலை இந்தத் தாங்கியிலிருந்து பரிமாற முடியும். இன்று இங்கும் அந்தத் தேநீர்த்தாங்கி பங்கேற்கிறது.
மண்டபக் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தால் யாரையுமே காணவில்லை. மண்டபத்தில் ஒரு இருக்கையில் அங்கிளை அமரச் செய்துவிட்டு, தேநீர்த் தாங்கியையும் தூக்கிக்கொண்டு, மண்டபப் பின்புறத்திலமைந்துள்ள குசினிக்குள் சென்றான் கணேசன். அங்கே கனடா இலக்கிய வயல் அமைப்பினரின் இரண்டு இரசிகர்கள் ஓடியாடி ஏதோ செய்துகொண்டு நின்றார்கள். கணேசனைக் கண்டதும் "எங்கண்ண போனியள், ஏனண்ண லேற்று. மூணு மணிக்கெல்லோ ரீக்கான் வேணுமெண்டனாங்கள்" என்றார் இலக்கிய வயல் அமைப்பினரின் ஆயுட்கால இரசிகப்பிள்ளையான கிட்டின சுவாமி.
"மூணு நாலு தரமாவது போட்டிறக்கவேணும், இப்பிடி ஆடி அசஞ்சு வந்தா நாங்கென்னண்ண செய்யிறது?" தனது பங்கிற்கு அங்கு நின்ற அடுத்த ஆயுட்கால இரசிகப்பிள்ளையான வினிஸ்லோஸ் றோய்க்கன்.
கணேசன் சிரித்தபடியே தேநீர்த் தாங்கியை குசினி மேசையில் வைத்துவிட்டு "எனக்கு விளங்குதடாப்பா சீடப்பிள்ள விசுவாசம் நல்லாக் காட்டிறீங்களெண்டது. வாசல்ல நிண்ட செக்குரிட்டிக்காட் சொல்லிப் போட்டுது நீங்கள் இப்ப ரெண்டு மூணு நிமிசத்துக்கு முதல்த்தான் வந்தனீங்களாம் எண்டு. இப்பகூட ஒண்டும் அவசரமில்ல, நீங்க இன்னும் அரமணித்தியானம் கழிச்சு ரீ போட்டாலே போதும்." என்றான்.
இரண்டு இரசிகப்பிள்ளைகளும் முகத்தில் அசடு கழியச் சிரித்தனர். அவர்களைப் பார்க்கக் கணேசனுக்குப் பரிதாபமாக இருந்தது.
"அவங்கள் பாட்டுக்கு ஏதோ சொல்லி தங்கட மட்டில சந்தோசப் படுகிறாங்கள் உனக்கென்ன கேடு வந்தது மூதேசி, வாயப் பொத்திக்கொண்டு கம்மண்டு, வந்தமா?, ரீக்கானக் குடுத்தமா எண்டு போக வேண்டியதுதானே....?!" என அவனது உள் மனம் திட்டியது.
கணேசன் கந்தையர் அங்கிளோடு அருகில் அமர்ந்திருந்து பலதும் பத்துமாக உரையாடிக்கொண்டிருந்தான். மணி நான்கு ஐம்பதாகிவிட்டது. அங்கொன்று இங்கொன்றாக ஐந்தாறுபேர் மண்டபத்துக்குள் வந்து அமர்ந்திருந்தார்கள். கணேசன் வெளியே சென்று தெருமுனையிலிருந்த கபே ஒன்றில் இரண்டு கடதாசிக் கோப்பையில் கடுங்கோப்பியில் சிறிது பால் விட்டு, சீனியும் போட்டு கொண்டுவந்து அங்கிளிடம் ஒன்றைக் கொடுத்தான். அங்கிள் ஒரு மிடறு குடித்துப் பார்த்தார். "நான் தனிக் கறுப்புக் கோப்பிதான் தோழா குடிக்கிறனான்.... பறவாயில்ல ஓ.கே" என்றார்.
நோர்வேத் தமிழர்கள் பலர் இந்தக் கறுப்புக் கோப்பியை எதுவும் கலக்காமல் அப்படியே குடிக்கப் பழகி விட்டார்கள். கந்தையர் அங்கிளும்தான்.
மணி ஐந்து இருபத்துஐந்து. இருபதுபேர் அளவில் மண்டபத்தை நிறைத்து விட்டார்கள். ஆனால் இன்னமும் ஏற்பாட்டாளர்கள் யாரையும் காணோம். ஒலியமைப்புப் பணி செய்துகொண்டிருந்த ஒரு இளைஞன் மட்டும் "ஹலோ... மைக் ரெஸ்ற்ரிங் ஒண், ஒண், ஒண் ரூ த்றீ... ஒண் ஒண் ஒண் டூ... ஒண் டூத் திறீ...." என ஒலிவாங்கியில் சொல்லிக் கொள்வதும், அதன் முகத்தில் தனது நான்கு விரல்களால் தட்டுவதுமாகவும், அங்குமிங்குமாகவும் வேர்வையால் மேற்சட்டையெல்லாம் ஈரமாக ஓடித் திரிந்தான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கிளுக்கு அவன்மீது மிகப்பெரும் அனுதாபம் ஏற்பட்டது.
மணி ஐந்து ஐம்பத்தைந்து.
விழா ஆரம்பிக்கப் போகிறதுபோல் சில சமிக்ஞைகள் தெரிந்தன. விருது ஏற்பாட்டுக்குழுவினர் வந்து மேடையில் அமர்ந்து விட்டார்கள். அறிவிப்பாளர் மேடையின் முன்பக்க மூலையில் நின்றுகொண்டு சில அறிவிப்புக் குறிப்புக்கள் எழுதப்பட்ட தாள்களை மாற்றி மாற்றிப் புரட்டிக் கொண்டு நின்றார்.
மண்டபத்துக்குள் முப்பதுபேர் வரையில் நிறைந்து விட்டார்கள்.
"துடங்கிறதுதானே, ஏன் வச்சுக் கடத்துகினம்...?" கணேசனைப் பார்த்து அங்கிள் கேட்டார்.
கணேசன் சிரித்தபடியே "முக்கியமான ஆள் இன்னும் வரயில்லயங்கிள். ட்றபிக்கில நிக்கிறேராம். வந்திடுவாராம்" என்றான்.
"தொடங்கின இந்த வேலய முடிக்காமல்ப் பாதியில விட்டுப்போட்டு அவரேன் போய் ட்றபிக்கில வேல செய்யிறேராம்" என்றார் அங்கிள்.
கணேசன் ஒருகணம் திடுக்குற்று அங்கிளைப் பார்த்தான். அங்கிள் சிரித்தார். "ஓ.... அங்கிளும் நல்ல நக்கல்க்காறன்தான்" என தனக்குள் நினைத்துச் சிரித்தான்.
மணி ஆறு பத்து.
"இதோ... இதோ, இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்......" என அறிவிப்புத் தொடங்கவும், கம்பீரமாக, கோட் ஷூட் ரை அணிந்தும், டை அடித்த அரைகுறைத் தலைமசிரெனவும் முத்துவேலர் மேடைக்கு வந்தார். எல்லாப் பிரதிநிதிகளுக்கும் நடுவில் போடப்பட்டிருந்த பேராசனத்தில் மிடுக்காக, பற்பல நாடுகளைப் படையெடுத்து வெற்றிவாகை சூடிய மும்முடிச்சோழன் போன்ற பெருமிதத்துடனும் வந்தமர்ந்தார்.
பார்த்த மாத்திரத்தில் கந்தையர் அங்கிளுக்கு அண்டத்திலிருந்து பிண்டம்வரை கொடுநெருப்புப் பற்றியெரிந்தது. அதிர்ச்சியும், கோபமும் சேர்ந்து அவரது சர்வாங்கத்தையும் நடுக்கமுறச் செய்தது.
"உந்தப் பொறுக்.... உதுக்குத் தலைவன்...? உந்தக் கேவல.... வீணா வருகுது வாயில.... இந்தக் கோஷ்டியெண்டு ஏன் ஒருத்தரும் எனக்குச் சொல்லேல்ல.... நான் வெளிக்கிட்டிருக்கவே மாட்டன். தோழா வா வீட்ட போவம்." கணேசனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, அவனின் பதிலெதற்கும் காத்திராமல் எழுந்து விறுவிறுவென்று மண்டபத்தை விட்டு வெளியேறினார் கந்தையர் அங்கிள். கணேசனுக்கு எதுவுமே புரியவில்லை.
"அங்கிள், அங்கிள்..." என இரண்டு தடவைகள் அழைத்துப் பார்த்தான். அவர் செவிமடுக்காதவராய் சடனாகவே வெளியேறி விட்டார். கணேசனும் இன்னது செய்வதென்று தெரியாமல் எழுந்து அவர் பின்னால் நடந்தான்.
காரிலேறி இருவரும் கணேசனின் வீடு வந்து சேரும்வரை எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
"என்ன கணேசு அதுக்கிடயில வந்திட்டியள் முடிஞ்சுதோ..." கணேசனின் மனைவி ஜெயா கேட்டாள்.
"இப்பதான் தொடங்குது.... நாங்கள் வந்திட்டம். ரீ ஒண்டு போடுமப்பா" என்றான் கணேசன்.
"இல்ல ரீ வேணாம் தோழா, வெறும் பச்சத்த்கண்ணி." என்றார் அங்கிள்.
இரண்டு கிளாஸ் தண்ணீரை மடமடவென்று குடித்தார்.
காற்சட்டைப் பையிலிருந்து சிகரட் பெட்டியை எடுத்து ஒன்றை உருவி வாயில் வைத்தபடி வெளிக் கதவைத் திறந்து போனார் அங்கிள். கணேசனும் அவர் பின்னால் போனான். அங்கிள் சிகரட் பைக்கெட்டை நீட்டினார். ஒன்றை உருவிக்கொண்டான். கணேசன் சிகரட் பிடிப்பதைச் சில வருடங்களுக்கு முன்னமே நிறுத்தி விட்டான். ஆனால் தண்ணியடிக்கும்போது மட்டும் ஒன்றிரண்டு சிகரட்டுக்களை பக்குப் பொக்கென இழுத்து ஊதுவான். தொண்டைக்குழிக்கு உள்ளே புகையை அவன் அங்கீகரிப்பதில்லை. இப்போ தண்ணியடிக்காதபோதும் அங்கிளுக்கு கம்பெனிக்காக ஒரு சிகரெட்டை மூட்டினான்.
"என்னங்கிள்...? என்னாச்சு...?" சிகரட் புகையை வெளியே ஊதியபடியே கேட்டான் கணேசன்.
அங்கிள் காலை நிலத்தில் இரண்டு தடவைகள் உதைந்தார். பக்கத்தில் நின்ற மரத்தில் கையால் ஓங்கிக் குத்தினார். அடக்கமுடியாக் கோபத்தில் அங்கிள் இருப்பதைக் கணேசன் உணர்ந்து கொண்டான். அது என்னவென்றுதான் அவனுக்கு இன்னமும் சரிவரப் பிடிபடவில்லை.
"உந்த அயோக்.... வீணா வருகுது வாயில. உந்தக் கோஷ்டிதான் இத ஒழுங்கு செய்யிறாங்களெண்டு ஏன் தோழா எனக்குச் சொல்லாமல் விட்டனீங்கள்?"
"ஆரச் சொல்லுறீங்க அங்கிள்...? முத்துவேலரையோ...?"
"ஓம், அந்தக்.... ஓம்"
"என்னங்கிள்....? என்ன நடந்ததெண்டு சொல்லுங்கங்கிள்"
கந்தையர் அங்கிள் சொன்னார். சுருக்கமாகச் சொன்னார். ஒரு சிகரட் பற்றி முடிக்கும் நேரத்தில் சுருக்கமாகச் சொன்னார்.
2009 ஜூன் 6ம் திகதி மலேசியா வந்து சேர்ந்த ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ், தவராசா சத்தியராசா, ஓட்டி குணசிங்கம் பாலதாஸ், லோஞ்சர் அப்சரா, கந்தையர் அங்கிள் ஆகியோர், நண்பர்கள் தோழர்கள் இருப்பிடங்களில் மாறி மாறித் தங்கிவிட்டு 2009 ஜூன் 27ம் திகதி, சனிக்கிழமை காலை மலேசியன் UNHCR முகாமில் தஞ்சமடைந்தார்கள். இவர்களிடம் பலகட்ட விசாரணைகளை நடாத்திவிட்டு மலேசியன் UNHCR இவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு, உடை என ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தது.
2009 நவம்பர் 7ம் திகதி சனிக்கிழமை காலை இவர்களது வசிப்பிடத்துக்கு வந்திருந்த மலேசியன் UNHCR பணியாளர் ஒருவர் ஒரு தகவலைச் சொன்னார். நோர்வே அகதிகளுக்கான குடியகல்வுத் திணைக்களம், UNHCR ஆகியவை இவர்கள் ஐவரோடு வேறு இன்னும் சிலரையும் அகதி அந்தஸ்த்து வழங்கி நோர்வே நாட்டுக்கு அழைப்பதானதுதான் அந்தத் தகவல். இந்த அறிவித்தல் உத்தியோகப் பற்றற்ற தகவல் என்றும், இன்னும் சில தினங்களில் அதற்கான உத்தியோகபூர்வமான அதிகாரிகள் வந்தபின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்லிவிட்டுப் போனார்.
ஜெயந்தன் ஸ்ரனிஸ்லோஸ், தவராசா சத்தியராசா, ஓட்டி குணசிங்கம் பாலதாஸ், லோஞ்சர் அப்சரா ஆகிய நால்வருக்கும் இந்தச் செய்தி ஒன்றும் துள்ளிக் குதித்துக் கொண்டாடுமளவுக்கு இல்லை. ஆயினும் கந்தையர் அங்கிளுக்கு நோர்வே நாட்டு அசைலம் கிடைத்தது மெத்தப் பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. அவர் இந்த முதிய வயதில் சொல்லொணாத் துயர்களை அனுபவித்து விட்டார்.
2009 நவம்பர் 14 சனிக்கிழமை.
காலை பத்து மணிக்கு ஐவரும் UNHCR காரியாலயத்துக்கு அழைக்கப் பட்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் UN அதிகாரி ஒருவர் ஒவ்வொருவராக காரியாலய அறைக்குள் அழைத்து அவர்களுக்கு நோர்வே அகதி அந்தஸ்த்துக் கிடைத்துள்ளதையும், இன்னும் ஒரு வாரத்தில் பயணப்பட வேண்டியிருக்கும் என்ற தகவலையும் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இறுதியாக லோஞ்சர் அப்சரா அதிகாரியின் அறைக்கு அழைக்கப் பட்டாள். வயதான ஒரு அதிகாரி இருக்கையில் வலும் ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தார். "வணக்கம்" என தமிழில் வரவேற்றார். பதிலுக்கு இவளும் வணக்கம் சொல்லிவிட்டு எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நோர்வேநாட்டு அகதி அந்தஸ்த்து இவளுக்குக் கிடைத்திருப்பது பற்றியும், அதன் சட்டரீதியான விளக்கங்களையும், இன்னும் சில தினங்களில் புறப்படவேண்டியிருக்கும் என்ற சம்பிரதாயத் தகவல்களைச் சொன்னார்.
மேசையில் அவர்முன்னால் கண்ணாடிக் கிண்ணத்தில் மூடியிருந்த தண்ணீரை எடுத்து ஸ்ரைலாக இரண்டு மிடறு குடித்து, மூடி வைத்தார். தனது இருக்கையில் பின்புறமாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அவரது நடவடிக்கைகளை மவுனமாகக் கவனித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் லோஞ்சர் அப்சரா.
தொண்டையைச் செருமியவாறே "வருசக்கணக்கா இழுபட வேண்டிய கேஸ் ஐசே இது. அப்பிடியும் கிடைக்குமா எண்டது சந்தேகந்தான். நீர் என்ர ஊர்ப்பிள்ள ஐசே. என்ர பவராலதான் இந்தக் கேஸ் உடன முடிஞ்சது." சொல்லிவிட்டு மீண்டும் தண்ணீரை எடுத்து இரண்டு மிடறு குடித்தார். அவர் சொல்வதைக் கேட்டபடி லோஞ்சர் அப்சரா மெல்லியதாகச் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
"நான் கனடாவிலதான் இருக்கிறன். என்ர சேவிஸ் முடிஞ்சேப்பிறகும் நான் எங்கட சனத்துக்காக வேல செய்யிறன்......, எனக்கு நிறய வெள்ளயள் பிரண்ஸா இருக்கினம். எல்லாம் உம்மோட்ட வயசுக்காறியள்தான்...."
இப்போ லோஞ்சர் அப்சராவிடமிருந்த அந்த மெல்லிய சிரிப்புக் காணாமல் போனது. அவள் மவுனமாகவே அமர்ந்திருந்தாள்.
மீண்டும் ஒரு மிடறு தண்ணீர்.
"பின்னேரம் நான் தங்கியிருக்கிற வீட்டுக்கு ஒருக்கா வாரும் ஐசே, நாட்டுப்பிரச்சினயள, உம்மட அனுபவங்களச் சொல்லும் நான் ஒரு சோக்கான கதை எழுதப்போறான். நான் பெரிய இலக்கியக்காரன் எண்டது தெரியுமோ ஐ சே உமக்கு?. நிறய எழுதியிருக்கிறன். லிற்ரேச்சர் மூமென்ற் ஒண்டு நடத்திக்கொண்டிருக்கிறன்"
அவர் இவற்றைச் சொல்லும் போதெல்லாம், அவரது நளினமான நடவடிக்கைகளையும், கண் சிமிட்டல்களையும் கணக்கிட்டு, அவரது எதிர்பார்ப்பு என்ன என்பதை லோஞ்சர் அப்சரா ஓரளவு விளங்கிக் கொண்டாள். தனது கோரிக்கை என்ன என்பதை அவரே தனது வாயால் வெளியே கக்கட்டும் என்று நினைத்தவளாய் எதுவுமே பேசாமல் மவுனம் காத்தாள்.
"நீர் என்ர அறைக்கு கட்டாயம் ஒருக்கா வாரும் ஐசே..... உமக்குத்தான் நல்லது. இதொரு பெரிய சங்கதியே இல்ல...."
இப்போதுதான் வாய் திறந்தாள் லோஞ்சர் அப்சரா. "நீங்கள் என்னதான் எதிர்பாக்கிறியளெண்டு ஓப்பினாச் சொல்லுங்கையா"
"உமக்கு விசயம் விளக்கிவிட்டுதெண்டு எனக்குத் தெரியும் ஐசே. நீர் ஒழிச்சு விளயாடுறீர்" கண்களைச் சிமிட்டியபடியே சொன்னார்.
"எனக்கு எல்லாம் விளங்கீட்டு சேர். படுக்கக் கூப்பிடுறீங்கள்... அப்பிடித்தானே"
"சீச்சீச் சீ. அப்பிடியெல்லாம் ஏன் கொச்சப்படுத்திறீர். ஃப்ரெண்ட்லியா ஒரு அச்சேஸ்ற்மென்ற்...."
"நான் வெளிய போறன் சேர். இருந்தனெண்டால் மரியாத கெட்டிடும்" கோபத்தோடு எழுந்தாள் லோஞ்சர் அப்சரா.
"இருமிரும், கொஞ்சங் கதைப்பம்" எனச் சொல்லியபடி இருக்கையை விட்டு எழுந்தார்.
லோஞ்சர் அப்சரா நின்று அவரைத் திரும்பிப் பார்த்தாள். என்ர அம்மையாவின்ர வயசு உங்களுக்கு சேர். இந்த வயசில உங்களுக்கு ஏனிந்தக் கேவலமான ஆச....?
"நீர் நோர்வே போகவேணும் ஐசே"
லோஞ்சர் அப்சரா சிரித்தபடியே மேசைமீது கிடந்த இவளது அகதி அந்தஸ்த்து ஆவணங்களை எட்டி எடுத்தாள். தாறுமாறாகக் கிழித்தாள். மேசைமீதே அதை விட்டெறிந்துவிட்டு அந்தக் காரியாலய அறையை விட்டு வெளியேறினாள்.
2009 நவம்பர்-28 அன்று கந்தையர் அங்கிளை நோர்வேக்கு வழியனுப்பும்போது இந்தச் சம்பவங்கள் எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது, சொல்லக்கூடாது எனச் சத்தியம் வாங்கிக் கொண்டனர் அந்த நால்வரும். அதிலிருந்து வாயை மூடித் தனக்குள்ளேயே விழுங்கியிருந்த இந்தச் சம்பவத்தைப் போட்டு உடைத்தார் இன்று கணேசனிடம்.
கணேசனால் நம்பமுடியாமல் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது அங்கிள் சொல்லிமுடித்த சம்பவம்.
"இப்ப பெடியள் நாலுபேரும் எங்கயங்கிள்?"
"......................................" உதடுகளைப் பிதுக்கியபடி மவுனமாக நின்றார்.
"அப்பிடியெண்டால் அங்கிள்....?" கணேசன் விடவில்லை.
"தெரியா தோழா..."
21ம்திகதி சனிக்கிழமை இரவு 10.30மணிக்கு வீக்ரா விமான நிலையத்தில் அங்கிள் வந்திறங்குவதாக கணேசன் போன் எடுத்துச் சொன்னான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MMM sad
பதிலளிநீக்கு