வியாழன், 11 பிப்ரவரி, 2016
ஊரிலிருந்து சிநேகிதன் புரக்கராசியின் கடுதாசி
(புரக்கிராசி என்றால் அவன் ஒன்றும் சட்டம் படித்த அட்வகேட் இல்லை. சின்ன வயசிலயிருந்தே எல்லாத்துக்கும் கேள்விகளும், குறுக்கு விசாரணைகளும் செய்வான். அது கிளித்தட்டாய் இருந்தாலென்ன, காட்டில் ஈச்சம்பழம் பிடுங்கப் போனாலென்ன, கடற்கரைப் பாலத்தில் தூண்டில் போடப் போனாலென்ன. கேள்விகள் கேட்டே சாகடிப்பான்.
கூப்பன் அரிசியையும், கூப்பனையும் சப்பிய மாட்டை அடித்தால், அடிக்கக்கூடாது என மாட்டுக்காக வாதாடுவான்.
தோட்டத்து மட்டை வேலிக்குள்ளால் புகுந்துவிடாமல் ஆட்டுக்கு கழுத்தில் மட்டை கட்டினால் அநியாயம் என்பான்.
பூவரசில் இருக்கும் மசுக்குட்டிகளை (மயிர்கொட்டிப்புழு) மண்ணெண்ணை ஊற்றி யாராவது கொழுத்தினால் அட்டூழியம் என்பான். கொஞ்சநாள்ப் பொறுத்தால் சிறகு முளைத்துப் பறந்துவிடும் வடிவான வண்ணத்துப் பூச்சிகள் என்று விளக்கம் சொல்வான்.
இதனால் நாங்கள் அவனைப் புரக்கிராசி என்றே அழைத்து வந்தோம். அதுவே அவனுக்கு ஆயுள்பரியந்தப் பெயராகி விட்டது. இந்த 45நாள் மீன்பிடித் தடைத் சட்டம் தொடர்பாக ஊரிலிருந்து அவன் எழுதும் கடிதங்களைத் தொடராகப் பதியலாம் என யோசிக்கிறேன். நல்லது கெட்டதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் நண்பர்களே.)
அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத மச்சான் பவுண்.
கன காலத்துக்குப் பிறகு எழுதிறன்.
45நாள் மீன்பிடித் தடைச் சட்டத்தை நீ மட்டும் சைக்கிள் கரியரில கட்டிக்கொண்டு இந்த எதிர்க் காத்துக்குள்ளால தனியனாய் எங்க போறாய்.
எங்க போச்சினம் உன்ர தோழமாரெல்லாம்.
அவயள் ஏன் மூச்சுக் காட்டாமல் இருக்கினம் எண்டத கொஞ்சமாவது யோசிச்சிப் பார்த்தாயா?
இதில் நான் ஒரு அபிப்பிராயமும் சொல்ல வரயில்ல.
இது உனதும் அவர்களுடையதும் பிரச்சனை.
இந்த 45நாள் மீன்பிடித் தடைச்சட்டம் தொடர்பாக உனக்குத் தெரியாத சில விசயங்கள் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.
இந்த 45நாள் மீன்பிடித் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வடமாகாண சபை திட்டமிட்டுள்ளது. இதன் பின்னால் பல அரசியல் ஓடுது.
1. காக்கை தீவு துறை முகப் பிரச்சனை
2. TNA தங்களுக்கு எதிராக unp மகேஸ்வரனின் குடும்பத்துக்கு விசுவாசமாக உள்ள நாவந்துறை தொடக்கம், காரைநகர் பிரதேசத்தை பழி வாங்குதல்.
3.epdp திட்டமிட்ட பழைய திட்டங்களை நிறுத்தி, TNA தமக்கு வசதியான படி - தமது ஆதரவாளர்களுக்கு வழங்குதல்.
4. இப்படியான அரசியல் இழி பிழைப்புக்கு அடியாட்களாக வேலை செய்வது - நீ தலித்து தலித்து என்று வாய் இனிக்க கூறுவாயே அவகள்தான் ராசா.
இங்கு இப்போ வெள்ளாள தலைமைக்கு விசுவாசமாக அரச நிறுவனங்களில் இயங்குவது இவர்கள் தான்.
வெள்ளாளன் தலைமை தாங்குகிறான்- இவர்கள் அவர்களுக்கு தொண்டூழியம் செய்கிறார்கள். தலித்துக்கள் இப்போ படித்து உள்ளதனால் ஆதிக்கசாதிகளின் நவீன அடியாட்கள் பணிகள் கிடைத்துள்ளன.
5.epdp காலத்தில் கல்விச் சலுகைபெற்று முன்னேறிய தலித்துகள் இப்போ TNAயின் அடியாட்கள். இப்போ மீன்பிடிச் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஒரு அலுவலகத்துக்கு போனால் அனேகமாக முதலில் சந்திப்பது ஒரு தலித் அலுவலகரைத் தான். அவர் படு கீழ் தரமாக நடந்து கொள்வார். இது தான் இங்கு நிலை .
இங்கு அரசியல் மற்றும் அரச கட்டமைப்பின் அதிகாரம் வெள்ளாளரிடம் தான் உள்ளது. ஆனால், அலுவலகங்களில் பெரும்பாலும் வேலை செய்வது படித்த, அதிகாரம் அற்ற தலித்துகள். அவர்கள் தான் இப்போ எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள். மீன் பிடி சமூகங்கள் கல்வியில் பின் நிற்பதால் - அரச அலுவலக உத்தியோகத் தலித்துக்களால் மிகக் கீழ்த்தரமாக நடத்தப் படுகிறார்கள். இந்தப் படிச்ச தலித்துக்களின் பார்வையில் மீனவசமூகம் தீண்டத் தகாதவர்கள்.
தலித்துக்களைப் பற்றி நான் இப்படிச் சொல்வதால் உனக்குக் கோவம் வருமென்று தெரியும். அதற்காக நான் சொல்லாமல் இருக்கவும் முடியாது.
நீ இங்கு இல்லை. நான் நேரடியாக இவர்களிடம் அவமானப்பட்ட அனுபவங்கள் கனக்க.
இங்குள்ள மீடியாக்களைப் பற்றிக் கவலைப் படுகிறாய். அதுபற்றியும் சொல்கிறேன் கேள்.
- இங்கு மீடியாக்கள் 3 பிரிவாக உள்ளன.
1- TNA
2- கஜேந்திர குமார் பொன்னம் பலம் - குதிரை கஜேந்திரன் சார்பு - tna எதிர்ப்பு
3- epdp - மஹிந்த.
இந்த 3 பகுதியின் நலனை முன்னிறுத்தியே எந்த செய்தியும் வெளிவரும்.
- இந்திய மீன் பிடி-கடற்கொள்ளை ப ற்றி எவரும் கதைக்க மாடார்கள்.
தென் இலங்கை சிங்கள - ஆங்கில யாக்கள் எழுதுவது அதிகம்.
தமிழ் மீடியாக்கள் அதைப் பற்றி கதைப்பதில்லை. எழுதினால், யாழ். இந்திய துணைத் தூதுவரின் கரிசனை கிடைக்காமல் போகும். இந்திய விசா கிடைக்காது...., தமிழ் நாடு போய் ஊடகவியல் டிப்ளோமா செய்ய இந்திய மானியம் கிடைக்காது.
-TNA சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் வாள்-வெட்டு கும்பலை வைத்துள்ளனர்.
இது பகிரங்கமான விடயம்.
- மீன் பிடிக் கிராமங்களோ எப்போதும்போல ஏம்மாந்த, வஞ்சிக்கப்பட்ட மக்களாகவே உள்ளனர். கல்வி சார் வளம் பெற்ற மீன் பிடிச் சமூகம் இப்போ இங்கு இல்லை என்றே கூறுவேன். இதுவும் இச் சமூககங்கள் ஒதுக்கப் பட முக்கிய காரணம். மேலும், "கரையாரை " பழிவாங்க வேண்டும் என்ற புலி எதிர்ப்பு மன நிலையும் இதற்கு இன்னும் ஒரு காரணம்.
மேலும் ஒரு முக்கிய விடயம், யாழ். மாவட்டத்தில் பாரம்பரிய மீனவ சாதிகளுக்கு நிகராக வேறு சாதிகளும் மீன் பிடித் தொழில் செய்கின்றனர். உதாரணமாக: குறிப்பாக பள்ளர் சமூதாயம் வடமாராட்சி, குருநகர், காரைநகர் போன்ற இடங்களில் பெரும்பான்மையாக தொழில் செய்கின்றனர். இந்த சாதிக்குள் இப்போ உத்தியோகம் செய்பவர்கள், மற்றும் விவசாயம் செய்பவர்கள், மீன் பிடிப்பவருக்கு பெண் கொடுப்பதுமில்லை- எடுப்பதுமில்லை.
இது 30 வருட போரின் பின்னான மாற்றங்களில் ஒன்று.
எனது நண்பர் ஒருவரின் மகளுக்கு கலியாணம் பேசி விட்டு அவர் மீன் பிடிக்கும் பள்ளர் என்பதனால் கலியாணம் நிறுத்தப்பட்டது.
மறுத்தவர்களும் ஒரே சாதி தான். ஆனால் அவர்கள் விவசாயம் செய்யும் - வேளாளப் பள்ளர்.
யாழில் படித்த மற்றும் விவசாயம் செய்யும் "தலித்துகள்" தான் இப்போ நடைமுறையில் வெள்ளாளருக்கு அடுத்ததான ஆதிக்க சக்திகள்.
தற்போது காக்கைதீவை வைத்து விளையாடுக் காட்டுவதில் TNA - UNP இரு பக்கமும் நிற்பது இவர்கள் தான் .
இங்கு பள்ளரை ஒரு உதரணமாக மட்டுமே கூறியுள்ளேன். இதே போல டக்லஸ் காலத்தில் ஆதிக்கம் பெற்ற நெடுந்தீவு பறையர் செய்யும் ஆதிக்கம் சொல்லி மாளாது. இவர்கள் இப்போ தம்மை நெடுந்தீவு வெள்ளார் என்றே கூறுகின்றனர்.
யாழில் கல்வியும், உத்தியோகமும் இருந்தால் இப்போ எல்லாருமோ "பெரிய சாதி".
முன்பு ஒடுக்கப் பட்டவர்களுக்கு இப்போ பரவலாக கல்வி காரணமாக பதவிகள், அதிகாரம் கிடைத்தாலும் - இப்போதும் அரசியல் மற்றும் உயர் பதவிகளை தமக்குள்ளேயே வைத்திருக்கும் வேளாளருக்கு நிகராகவே இவர்களும் ஒடுக்கு முறையில் ஈடு படுகின்றனர்.
இங்கு மரம் ஏறுபவர்கள், மீன் பிடிபவர்கள், கூலித்தொழில் செய்பவர்கள், துப்பரவுப் பணி செய்பவர்களே இப்போ ஒடுக்கப் படுபவர்களாக உள்ளனர்.
இத் தொழில்களை செய்வோர் கல்வியில் பின் தங்கியோர் ஆக உள்ளனர்.
நாவாந்துறை மீனவ சமூகத்தை இங்கு யாழ்நகரைச் சுற்றியுள்ள மற்றைய சமூகங்கள் மதிப்பதில்லை. காரணம் அந்த ஊர் போன்ற யாழ் நகரைச் சுற்றியுள்ள பெரும்பான்மையான சமூதாயங்கள் கல்வியில் முன்னேறி, முன்பு தமக்கிருந்த ஒடுக்கு முறையிலிருந்து ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றுள்ளனர். காரணம் கல்வியும், உத்தியோகமும்.
உதாரணமாக, கொட்டடி நளவர் எனக் கூறப் பட்ட - ஒடுக்கப் பட்ட மக்கள் இப்போ மிகவும் முன்னேறியுள்ளனர். இப்போ, நாவந்துறைத் திமில, முக்குவ சமூகத்தை கொட்டடி மக்கள் கீழ் தரமாகவே பார்க்கின்றனர்.
மீன் பிடி சமாசத்துக்கு போனால் அங்கு 3 அதிகாரிகள் மேற்படி கொட்டடி சமூகத்தை சேர்த்தவர்கள். அவர்களுடன் நாவாந்துறை பற்றி கதைத்தால் அசிகமான சமூகமாக - "பின்தங்கிய" சமூதாயம் என்றே விளிகின்றனர்.
நான் இங்கே சாதி யாழில் அழிந்து விட்டதென்று கூறவில்லை, அது வேறு வேறு புது வடிவங்களை எடுத்து வருகின்றது.
-இங்குள்ள மீடியா, இலக்கியம் போன்ற தளங்களைப் பார்த்தல் இப்போதும் வெள்ளாள ஆதிக்கம் தான். உனது முகப்புத்தகத்தில் தொடர்பில் உள்ள பலர் இலக்கிய - சமூக ஆர்வலர் முகங்கள் எல்லாமே வெள்ளாளர் அல்லது "புதிய வெள்ளார் ".
இந்த புதிய படித்த வேளாளர், பழைய வெள்ளாருக்கு நிகராகவே ஒடுக்கு முறைகளில் ஈடு படுகின்றனர்.
- மீன் பிடியில் ஈடு படும் எந்த சாதியாக இருந்தாலும் இங்கு அது ஒதுக்கப் பட்ட - ஒடுக்கப்படும் சாதியாகவே உள்ளது. இப்போ பழைய ஆதிக்க சாதிகளின் தலைமையில் - புதிய படித்த ஆதிக்க சாதிகள் ஒதுக்கு முறையில் ஈடுபடுகின்றனர்.
இன்னும் நிறையக் கிடக்கு. பிறகு எழுதுகிறேன். நீ நேரில வந்து பார்த்தாயானால்தான் நான் சொல்வது விளங்கும்.
இன்னும் கனக்க இருக்கு.
நான் நண்டுவலை போடப் போகிறேன். ஏனென்றால் நாளை எனது பிள்ளைகள் சாப்பிட வேணும். மீதி நாளை தொடர்கிறேன்.
இப்படிக்கு அன்பும் பண்பும் பாசமும் உள்ள புரக்கராசி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக