திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஊரிலிருந்து சிநேகிதன் புரக்கராசியின் கடுதாசி-2



அன்பின் மச்சான் பவுண்! 

நான் அனுப்பிய கடிதத்தில் மீன்பிடிக்கெதிரான விடையங்கள் பற்றி எழுத நினைத்து, அது சாதியில் போய் முடிந்து விட்டது . அதை வாசிபவர்களுக்கு மீன் பிடியில் பிரச்சனை இல்லை - சாதிப் பிரச்சனை தான் முக்கியமானதாகப் படும் . உண்மையும் அதுதான்.


2009 இக்குப் பின் சாதியம் தான் தலை விரித்தாடுகிறது. இப்போ, இனவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறை எங்களுக்கு நேரடியாக தெரியாமல் - அனுபவிக்க முடியாமல் போவதற்கு, TNA - வடமாகாணத்தில் அதிகாரத்துக்கு வந்த பின் நடக்கின்ற சாதியம் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் அரசியலே மிக முக்கிய காரணியாக இருகிறது. முன்பு ஆமிகாரன், நேவிகாரனின், epdp அனுமதியும், அனுகிரகமும் எமது மக்கள் தொழிலுக்குப் போக தேவைப்பட்டது. இப்போ, TNA , UNP சார்ந்த அதிகார வர்க்கத்தின் தயவிலேயே தங்கியுள்ளது. இது ஒரு பக்கமிருக்க,
"45நாள் மீன்பிடித் தடைச் சட்டத்தை" நடை முறைப்படுத்தாமல் நிறுத்த என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதில் தேடி என் போன்ற சிலர் அலைகிறோம். சில முயற்சிகள் மேற் கொண்டோம். இப்போ வரைக்கும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
காரணங்கள்:
1. யாழை சுற்றியுள்ள மீனவ சமூகம் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தவர்களாகவே உள்ளனர். இச் சமூகங்களில் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் எந்த அளவு உள்ளதென்று நான் கூறித்தான் நீ தெரிந்து கொள்ளவேண்டுமென்பதில்லை.
யாழ். மேற்ரிராசனம் எந்த சாதியின் கட்டுபாட்டில் உள்ளது என்பதும் உனக்கு தெரியும். அத்துடன் திருச்சபையானது செல்வநாயகம் காலத்திலிருந்தே தமிழ் தேசியத்தின் மிக முக்கிய தூணாக காட்டி வந்தது. இப்போதும் அதே நிலைதான். அதாவது TNAக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை எதுவும் செய்யாது. மாறாக தமது ஆதிக்கத்தில் உள்ள பிரதேசங்களில் TNAயின் அலுவலகங்களாகவே சுவாமி மாரின் அறைவீடுகள் விளங்குகின்றன.
TNA புக முடியாமல் இருந்த தீவகத்தில் சுவாமி மார் தான் தேர்தல் வேலை செய்தார்கள் என்ற தகவல் ஒன்றும் உனக்குப் புதிதல்ல . இன்னிலையில், 45 நாள் மீன்பிடி தடைச் சட்ட துக்கு எதிராக மக்கள் அணி திரள்வதை நேரடியாகவே சுவாமிமார் தலையிட்டு தடுகின்றனர். (கொன்சலீற்ரா மரண விடயத்தில் TNA திருச்சபையை காப்பாற்றியதுக்கான நான்றிக் கடன் இது என்று எனது மண்டைதீவு நண்பர் கூறினார் .)

2. நான் முன்னைய கடிதத்தில் கூறியது போல, TNA யின் முகியஸ்தர் சிலருக்கு வாள் வெட்டுக் குழு உள்ளது. இக் குழு அனைத்து வகை வேலைகளையும் செய்ய, முன்பு புலிகளால் பயிற்றப் பட்டவர்கள் எனக் கூறப் படுகிறது. முன்பு சனம் epdpக்கு அஞ்சியது போல இப்போ இவர்களுக்கு அஞ்சுகிறார்கள்.  இவர்களுக்கு எல்லா போலீஸ் நிலையங்களிலும் செல்வாக்கு உள்ளது. அத்துடன் இவர்களுக்காக வாதாட கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான TNA அப்புக்காத்துகள் உள்ளனர்.
3. இங்கு பிரபாலமான தமிழ் இடது சாரிக் கட்சி ஒன்று உள்ளது. அவர்கள் குதிரை கஜேந்திரன் -பொன்னம்பலம் கஜேந்திரன் போன்றவர்களுடன் உறவில் உள்ளவர்கள். அவர்களின் கருத்துப் படி 45 நாள் மீன்பிடித் தடைக்கு எதிரான போராட்டங்கள், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கும் என்பதாகும். ஆதாவது, இப்போ உள்ள பிரதான முரண்பாடு தமிழ் தேசிய ஒடுக்குமுறை. அதை முன்னிறுத்தியே போராட்டம் நடக்க வேண்டும்- மற்ற பிரச்சனைகளை உள்ளுக்குள் கதைத்து தீர்த்துக் கொள்ளலாம் என்பதாகும்.

இவர்கள் எந்தக் காலத்திலும் மக்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை. தமது இருப்புக்காகவே கட்சி நடத்துகின்றனர். இவர்கள் ஒரு பக்கமிருக்க, வேறு சில இடதுசாரிகளும் இங்கு இயங்குகின்றனர். ஆனால் அவர்களால் ஒரு போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளவர்களே. மேலும், இவர்களுக்கு மீன் பிடிச் சமூதாய மக்களிடம் தற்போது எந்த வித செல்வாக்கும் இல்லை.
4. இவர்களுக்கு அப்பால் உனக்கும் தெரிந்த பல NGO இங்கு உள்ளன. அவர்கள் எவருக்கும் ஒரு ம -- உம் விளங்காது. தனது கஜானாக்களை நிரப்ப ப்ரொஜெக்ட் செய்வதிலேயே கவனமாக உள்ளனர். இது தான் நிலை. எல்லாமே நெகடிவ் வாகவே உள்ளதாக கடிதம் உனக்கு எழுதுவது வேதனையத் தருகிறது . பாப்போம் என்ன நடக்கிறதென்று. எல்லா வெளிகளும் - வழிகளும் முற்று முழுதாக அடை படவில்லை.


இப்படிக்கு அன்புள்ள  புரக்கராசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக