மீனவர்களுக்கு அல்ல.
"சட்டப்படி"
//இந்தப் படத்துக்கான சிறு குறிப்பை எழுதப்போனால் பக்கம் பக்கமாகப் போகிறது.
முகநூலில் அப்படி எழுதி நண்பர்களின் பொறுமையை அடிக்கடி சோதிப்பது நல்லாப் படேல்ல.//
என்ற குறிப்போடு முகநூலில் பதிவிட்ட படத்துக்கான சற்று விரிவான குறிப்பு.
--------------------------
முன்னைய காலங்களில் கடற்கரைகளும், கரைகளும் மிகவும் சுதந்திரமாக இருந்தன.
மாசற்ற காற்றை சோளகம், வாடை கொண்டல், கச்சான் என பருவ காலங்கள் தவறாமல் அள்ளி வீசிக் கொண்டிருந்தன.
கடலின் பொருட்டும், கரைகளின் பொருட்டும் மீனவர்களும் கட்டற்ற சுதந்திரமுடையவர்களாகவும், கர்வம் கொண்டவர்களாகவும், கடலுக்கும், கரைகளுக்கும் பாதுகாவலர்களாகவும் இருந்தார்கள். கடலும் கரையும்தான் மீனவர்களின் வீடாகவும் இருந்தன.
குடும்பத்தோடு தாம் வாழும் குடிசையை வேறாக, கடற்கரைகளை வேறாகப் பார்த்தறியாத கூட்டம்தான் பாரம்பரிய மீனவ மக்கள்.
ஓம்,
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட முக்கால்ப்பங்கு கடல் வளங்களையும், கரைகளையும் கொண்ட பிரதேசம்தான் எமது வடக்கு கிழக்குப் பிரதேசங்கள். இருந்தும் கடலின், கரைகளின் கட்டற்ற சுதந்திரம் என்பதை கண்டனுபவித்த கடைசிச் சந்ததி நாமாகத்தான் இருக்கிறோம் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆழ்கடலில் காயம்படும் பெருமீன்கள்கூட தமது காயங்களை ஆற்றுவதற்காக எமது மன்னார் வளைகுடா மற்றும் ஏழாற்றுத் திடல் கரைகளை அண்டிய களக் கடல்களுக்குள்ளும், குடாக்கடலுக்குள்ளும் அச்சமின்றி நம்பிக்கையோடு வந்து காயங்களை ஆற்றிப் போகும்.
கரைகளும் அவ்வாறே.
வலுத்த நம்பிக்கையோடு ஆமைகள் கரையேறி வந்து தமது முட்டைகளை இட்டுப் போகும்.
கரையோர மணற்பரப்புகளில் குழிகளில் ஆமை முட்டைகள் இட்டிருப்பதை நுட்பமாய் அவதானிக்கும் மீனவர்கள் மிகவும் பவ்வியமாகவே விலத்தி நடந்தார்கள்.
கடலோரச் சுற்றுப்புறச்சூழல் மாசடையாதபடி, உவர்நிலத் தாவரங்களைக்கூட அவசியமற்றுச் சீண்டாமல் காத்து வந்தார்கள்.
70இல் எனது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் இப்போதும் நினைவிருக்கிறது;.
எமது கடற்கரையில் படர்ந்திருந்த முள்ளிச் செடிகளை (இராவணன் மீசை) பீடி நெருப்பைக் கொண்டு விளையாட்டாக மூட்டிக் கொழுத்திய ஒருவரை பெரியவர்கள் பிடித்து வைத்து நீண்ட நேரமாக மாறி மாறிப் புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த மூத்த மீனவர்கள் சொன்ன அறிவுறுத்தலில் இருந்து நான் அறிந்து கொண்டது, கரையோரத் தாவரங்களானது கரையோரப் பாதுகாப்புக்கு இன்றியமையாத மதிற்சுவர்கள்.
அதாவது கரையோர அரணாக விளங்கும் மணற்பரப்பைக் காற்றும், கடலும் அள்ளிச் செல்லாதவாறு பாதுகாப்பது இந்தத் தாவரங்களின் வேர்கள்தான் என்றும், இல்லையேல் மணல் அள்ளுண்டு போய் கரைகள் சமதரையாகி, கடல்வெள்ளம் இலகுவாக ஊருக்குள் நுழைந்து ஊரையும் கடலாக்கி விடும் என்பதுதான்.
இதுபோல் நெய்தற்புலம் சார்ந்த உச்சபட்ச அறிவையும், கரிசனையையும் கொண்டிருந்தார்கள் இந்த மக்கள். எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தார்கள் இந்த மனிதர்கள் வாழ்வனுபவங்களைத் தவிர.
காலங்காலமாகப் பாரம்பரிய மீனவர்கள் கடலுக்கும், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்களுக்குப் பாதகமில்லாத தொழில்களையே செய்து வந்தார்கள்.
தம்மால் பிடிக்கப்படும், சுறாக்களில் குட்டித்தாச்சியென அடையாளம் காண்பவற்றை மீண்டு கடலுக்குள் தப்பவிடும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று மாதக்கணக்கில் வாடிகள் அமைத்துத் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலை நடாத்தி வந்தார்கள்.
வடக்குக் கிழக்கிலிருந்து பல்லாயிரம் மெற்றிக்தொன் மீன்களையும், கருவாடுகளையும் தென்னிலங்கை மக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
உள்ளூர் மக்களுக்கும் தாராளமாக மீனுணவு கிடைத்ததனூடாக, போசாக்குப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமின்றித் தலைமுறைகள் வளர்ந்தன.
ஆனால் இன்று நிலவரம் அவ்வாறா இருக்கிறது? எல்லாமே தலைகீழாக மாறி, கரைகள் தனிநபர் சொத்துகளாகி விட்டன.
மீனவர்கள கரைகளை விட்டு அந்னியப் படுத்தப் பட்டு விட்டார்கள். இவை திட்டமிட்டுத்தான் நடாத்தப் படுகிறது. ஆமைகள் தமது இனப் பெருக்கத்துக்காக ஏறிய கரைகளில் இப்போ கஞ்சாக்கடத்தல்ப் படகுகள் வந்தேறிப் போகின்றன. சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக.
(கஞ்சாக் கடத்தல் பற்றிச் சொல்லப்போனால், அது இன்னொரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தக் குறிப்பு அது பற்றியதல்ல)
ஓம்,
இலங்கையில் இப்போ நடைமுறையிலுள்ள கரையோரப் பாதுகாப்புச் சட்டமானது கரையோரங்களைப் பாதுகாப்பதற்காகப் போடப் பட்டவை அல்ல. கூறு போட்டு தனிநபர்களுக்கும், அந்னிய முதலாளிகளுக்கும் விற்கும் நடவடிக்கையையே இந்தப் புதிய சட்டங்களினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே கிழக்கிலும் வடக்கிலும் பல கடற்கரைகள் தனியாருக்குச் சொந்தமாக்கப்பட்டு உல்லாச விடுதிகள் கட்டப்பட்டு உயரமான மதிற்சுவர்களும் எழுப்பப் பட்டுள்ளன.
பாசிக்குடாவில் உள்ள பல உல்லாசவிடுதிகள் ரணிலுக்கும், அவரது ஆட்களுக்கும் உரித்துடையனவாக உள்ளன. இப்படி கல்குடா போன்ற பகுதிகளும்.
வடக்கில் தமிழ் அரசியல்வாதிகளும், முதலாளிகளும் கையகப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.
(இந்தக் குறிப்பு கடலையும் கரைகளையும் தனியார் மயமாக்குவது பற்றியதும் அல்ல, எனவே இதையும் இப்போதைக்குக் கடந்து செல்கிறேன்)
கடற்கரைகளைத் தனியார் மயப்படுத்த வேண்டுமெனில் கரையோர மக்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். அது இலகுவான காரியமல்ல. அவர்களுக்குள்ளேயே பிரிவினைகளையும், பகையுணர்வையும் உருவாக்குவதன் மூலமே இந்த அப்புறப்படுத்தலைச் சாத்தியமாக்க முடியும்.
சட்டங்களின் மூலம் சகோதரர்களுக்குள் பகை ஏற்படுத்தும் அரசியலை இலங்கை அரசுக்குச் சொல்லியா தர வேண்டும். அதுவும் திட்டம் வகுத்துக் கொடுக்க நமது தமிழ்த் தலைமைகளும், பொய்கள் மட்டும் சொல்வது எப்படியென அதிகம் படித்துப் பட்டம் வாங்கிய நமது அப்புக்காத்துகளும் இருக்கும்போது.
"மீனவர்கள் தங்கள் தங்கள் கிராமங்களை அண்டிய கடற் பிரதேசத்தில் மட்டுமே மீன்பிடிக்க முடியும், பக்கத்துத் துறையில்கூட தோணி கட்ட அனுமதி இல்லை" என்ற பிரதேசசபைச் சட்டங்களைப்போல் ஒரு மிகக் கேவலமான சட்டத்தை எங்கும் காணவே முடியாது.
கடல், மீன்பிடி, கடலோரப் பிரதேசம், கரையோரச் சமூகம் பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத மடையர்களின் சட்டம்.
இல்லை, இதை இவர்கள் தெரிந்தேதான் செய்கிறார்கள் என்பதுதானே உண்மை.
இந்தச் சட்டங்களால் இன்று அன்றாடம் அடிபட்டுக் கொண்டிருப்பது அப்பாவி மீனவ மக்கள்தான்.
தலைமன்னார், பேசாலை மக்களுக்குள் பிரச்சனை, மாதகல், மயிலிட்டி மக்களுக்குள் பிரச்சனை, ஒவ்வொரு தீவக மக்களுக்குள்ளும் பிரச்சனை..... இப்படி ஒட்டுமொத்த மீனவ மக்களுக்குமிடையில் அன்றாடம் பல பிரச்சனைகள் உருவாகி வெட்டுக் குத்து அளவில் வந்து நிற்கிறது, காரணம் இந்தத் திட்டமிட்ட பேரழிவுச் சட்டங்கள்.
இலங்கைத்தீவின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் மிகமுக்கிய நடவடிக்கைகளில் இந்தக் கரையோரச் சட்டங்கள் பல அடங்குகின்றன.
கரையோரப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரால் இன்று வடக்கிலுள்ள அத்தனை கரைகளையும் ராணுவமும், கடற்படையும் ஆக்கிரமித்துள்ளன. அப்படியிருக்க எப்படி இத்தனை அள்ளுகொள்ளையாகக் கஞ்சா மூடைகள் வந்து கரைகளில் இறக்கப் படுகின்றன.
இது கரையோரப் பாதுகாப்புச் சட்டமா, கஞ்சாக்கடத்தல் சட்டமா?
அரசால் சட்டம் இயற்றி கஞ்சா கடத்துவது இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்க வாய்ப்பே இல்லை.
சும்மா ஒரு குத்துமதிப்பில் கணக்குப் போட்டுப் பாருங்கள்.
கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்ற எத்தனையாயிரம் படையினர் வடக்கில் நிலை கொண்டுள்ளனர்?
அப்பப்போ அங்கங்கே மேலோட்டமாகப் பிடிபடும் கஞ்சாவின் தொகையைப் பாருங்கள்.
எப்போவாவது பிடிபடுவதே இத்தனை தொகை என்றால், பிடிபடாமல் நாட்டுக்குள் வந்து சேர்ந்து விநியோகிக்கப் பட்டிருப்பதன் தொகை என்னவாக இருக்கும்?
சரி, மேற்படி படத்துக்கு (காரைநகர் துறைமுகம்) நான் சொல்ல வந்த அந்த நாலு வார்த்தை என்னவென்று இப்போதாவது சொல்ல முயற்சிக்கிறேன்.
//எழுவைதீவு, அனலைதீவு, புலியந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, பல்லதீவு, ஊரதீவு, ஈச்சாமுனை, தணுவில், சுருவில், வேலணை செட்டிபுலம், அல்லைப்பிட்டி, மண்டைதீவு, நாவாந்துறை, குருநகர், கல்முனை, வேலியடி, கவுதாரிமுனை, வலைப்பாடு, பள்ளிக்குடா, மண்டைக்கல்லாறு, எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, குமுளமுனை, நாச்சிக்குடா, மன்னார், சிலாவத்துறை, அரிப்புத்துறை, குதிரைமலை, பளுக்காத்துறை என இன்னும் பல கரையோரங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவை நான் தங்கியிருந்து கடற்தொழில் செய்த இடங்கள். யுத்தகாலங்களுக்குமுன்.
அப்ப்போ எந்தவிதமான சட்டங்களும் இப்போதுள்ளவை போல் இல்லை. இதில் அதிகமான காலங்களை அனலைதீவில்தான் வாழ்ந்திருக்கிறேன். வடமுனையிலிருந்து தெற்குப் பாலக்குடா வரை.
புதிய கரையோரச் சட்டங்கள் உருவாக்கப் பட்டிருப்பதை அறிந்து 2017ம் ஆண்டு ஒரு சிறு தோணியில் அனலைதீவு சென்று அங்குள்ள சங்க நிர்வாகியைச் சந்தித்து "தீவில் தங்கி நின்று தொழில் செய்ய அனுமதியுண்டா" என்று கேட்டேன். அதெல்லாம் முடியாதென ஒரேயடியாக மறுத்து விட்டார். பின்புதான் அறிந்தேன், பல தலைமுறைகளாக, காலகாலமாக வந்து அனலைதீவில் தங்கித் தொழில் செய்து செல்லும் அயல் மீனவர்களையே இப்போ கரையில் இறங்கவும் அனுமதிக்க மாட்டார்களாம். உண்மையைச் சொல்லப்போனால் அந்தப் பாரம்பரிய மீனவர்களுக்குச் சொந்தமானதுதான் இந்த அனலைதீவின் கரைகள். இந்தத் தீவில் குடியிருந்தால்தான் கரையில் தோணி நிறுத்த உரிமை உண்டு என்பதுதான் இப்போ போடப்பட்டூள சட்டம்.
காலகாலமாக, தலைமுறை தலைமுறையாகத் தொழில் செய்துவந்த பாரம்பரிய மீனவர்களுக்கு இங்கு தோணி கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டாராம். சண்டித்தனமாம். அதேவேளை தென்னிலங்கை மீனவர்களின் மிகப் பாரிய படகுகள் (11தொன் எடை) பக்கத்தில் காரைநகரில்தான் தரித்து நின்று தொழில் செய்கிறார்கள். அனலைதீவுக் கடலுக்குள்தான் தொழில் செய்கிரார்கள். தவிர இந்திய இழுவைப் படகுகள் தினமும் நூற்றுக் கணக்காக வந்து அனலைதீவுக் கரைக்குள்தான் சட்டவிரோதத் தொழிலைச் செய்கிறார்கள். இவர்கள் என்னதான் செய்து கிழித்தார்கள்? பிரதேச சபைகளும், விதானைமாரும் தங்கள் சட்டங்களை எங்கு கொண்டுபோய் வைத்தார்கள்?
இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஊர்ப்பிறந்தவன் பக்கத்து ஊரில் திருமணம் செய்து கொண்டான் என்பதற்காக அவனுக்கு சொந்த ஊரில் தொழில் செய்ய அனுமதியில்லை.
அரச எசமானர்கள் வகுத்த இந்தத் திட்டமிட்ட சதிச் சட்டத்தை தமிழ்ப் பிரதேசங்களின் பிரதேச சபைகளும், அதிகரிகளும் மிகவும் விஸ்வாசமாகவும், தந்திரமாகவும் நடாத்தி முடிக்கிறார்கள்.
சகோதரனின் விரலைக் கொன்டே சொந்தச் சகோதரனின் கண்களைக் குத்துவதுபோல் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள மீன்பிடிச் சங்கங்களையே இந்த சகோதர மீனவன் எல்லை மீறும் நடவடிக்கையைக் கண்காணிக்கும்படி ஆக்கியுள்ளார்கள்.
இவர்களும் ஏதோ எதிரிப்படை உள்நுழைவதைக் கண்காணிப்பதுபோல் கத்தி வாள் ஏந்திக் காவல் செய்யும் அளவுக்கு இறங்கி விடுகிறார்கள்.
இதேவேளை இந்திய நாசகாரப் படகுகள் தினமும் பலநூறாக, சட்டவிரோதமாக வந்து மன்னார் வளைகுடாவையும், ஏழாற்றுத் திடலையும் நாசம் செய்து போகின்றன. ஒரு கல் எடுத்து வீசி அவர்களை விரட்ட வக்கில்லை, அன்றாடச் சீவியத்துக்காக 2கிலோ 3கிலோ மீன் பிடிக்கும் சொந்தச் சகோதரனை வாள் கொண்டு விரட்டுகிறார்கள்.
இது தீவகத்தில் மட்டுமல்ல, வலைப்பாடு, நாச்சிக்குடா, மன்னார், அரிப்புத்துறை என எல்லா இடமும்தான் இந்த நிலவரம். சிறுபடகு மீனவர்களுக்குத்தான் சட்டம் தாறுமாறாகப் பாயும். ஆனால் சட்டவிரோதத் தொழில்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. அவை வெளிப்படையாகவே நடக்கின்றன.
(நான் நின்ற காலங்களில் அனலைதீவைச் சுற்றித்தான் தினமும் மீன் பிடித்தேன் என்பது வேறு கதை. அந்த மீன்களை எனக்குத் தடை விதித்த இவர்களால் பிடிக்க முடியாது, பிடிக்கத் தெரியாது என்பதும் இன்னொரு கதை. சனங்களால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்ட தீவுக் கரைகளிலேயே தனியனாகத் தங்கியிருந்தேன் நல்ல பாம்புகளோடு) தவிர, இவர்களும் சட்டவிரோதத் தொழிகளைச் செய்கிறார்கள் என்பது கவலைக்குரியதும், கவனத்துக்குரியதுமாகும்.
அரசு சலுகைகளைக் கொடுத்து மீனவர்கள் அல்லாதவர்களையும் மீனவர்கள் ஆக்குவது உண்மையிலேயே பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரிய விடையம்தான். அதேவேளை இப்படி ஒவ்வாத சட்டங்களைப் போட்டு மீனவர்களுக்குள் தீராப் பகைகளை உருவாக்கி அடிபட வைப்பதென்பது அரசின் திட்டமிட்ட செயல்தான், மீள்குடியேற்ற சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கான வாழ்வாதார தொழில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாரிகளைக் கைக்குள் போட்டு லட்சக்கணக்கான தொழில் உபகரணங்களைப் பெற்று கள்ளச் சந்தையில் விற்ற மீனவர்கள் அல்லாதோரும் பலர் உண்டு.
இவை இப்போ நமக்கெதற்கு, ஆனால் தொடர்ந்தும் இதுபோல் நடக்க வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது என்பதை பொறுப்புக்குரியவர்கள் உணர்ந்தால்ச் சரிதான்.
தீவுகளில் அனலைதீவின் கடல்வளங்கள், கடலடி நிலத்தின் தன்மைகள், கண்டமேடைகள், சிறப்புகள் என முற்றுமுழுதாக அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாது, அவை பற்றிய நிறையப் பதிவுகளையும் செய்திருக்கிறேன். கடல்சார் சுற்றுப்புறச்சூழல் மாசடைய இன்றைய மீனவர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பது பெரும் வேதனையான விடையம்.
இவர்கள் தாம் செய்வது இன்னதென்று புரிந்து திருந்த வேண்டும். கடல்வாழ் உயிரிகளின் புகலிடமாக விளங்கும் அனலைதீவு வளங்கள் தகுந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட, (தங்கூசிவலைகள்) சட்டவிரோதத் தொழில்களைச் செய்வதை அனலைதீவு மீனவர்கள் நிறுத்த வேண்டும்.
மேற்படி கரையோரச் சட்டம் இப்போ மிகமிக ஊக்குவித்திருப்பது மீனவர்களுக்கிடையிலான தொழிற்சாதனக் களவுகள். அயல்க்கிராமத்து மீனவர்கள் நமது கரைக்கு வரமாட்டார்கள்தானே என்ற துணிச்சலில் கடலில் விரித்து வைக்கப்பட்டுள்ள வலைகளை மாற்றி மாற்றிக் களவாடிச் செல்கிறார்கள். இது சர்வ சாதாரணமாக் எல்லாக் கிராமத்திலும் இப்போ நடைபெறத் தொடங்கி விட்டது. அதாவது காவல்த்துறையிலும் புகார் சொல்ல மாட்டார்கள். காரணம் சட்டவிரோதமான தங்கூசி வலை என்பதால். யோசித்துப் பாருங்கள் மீதியை இலகுவாகப் புரியும்.
பருத்தியடைப்பு, எழுவைதீவு, பருத்தீவு, அனலைதீவு, புலியந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, ஈச்சாமுனை, ஊரதீவு, பல்லதீவு, பெரியபிட்டி, கொக்குப்பிட்டி, கண்ணாத்தீவு, தாராப்பிட்டி, நரையாம்பிட்டி, கெட்டில், சுருவில், தணுவில், மெலிஞ்சிமுனை ஆகிய ஊர்களின் கரைகள் சூழ்ந்த கடற்பரப்பு ஒரு வட்டமான திடலாகும். அந்தந்தப் பருவகாலங்களுக்கு ஒவ்வொருவகை மீனினங்கள் இங்கு வருகை தந்து நிலைகொள்ளும். இந்தத் திடலில் மீன் பிடிக்கும் உரிமம் மேற்படி ஊர்களைச் சேர்ந்த எல்லா மீனவர்களுக்கும் உண்டு. கிட்டத்தட்ட இந்தப் பழைய முறைமையை மீனவர்கள் இன்னமும் நடைமுறையில்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் தோணிகளைக் கரைகளில்தான் கொண்டு வந்து தரிக்கக்கூடாது என்பது சட்டம்.
என்னவொரு புதினமான சட்டம். கேட்கவே நகைப்பாகவும், வெட்கமாகவும் இருக்கிறது இவ்வளவு அறிவாளிகளா என்று.
அடுத்து,
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக குருநகர் கடற்பகுதியின் சூழல் மாசடைந்திருப்பது பற்றி பல பதிவுகளை வெளியிட்டுள்ளேன். கடுகளவுகூட யாராலும் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை. அந்தச் சூழல் மாசுபாட்டால் அப்பாவி மக்கள் அறுவடை செய்யப் போகும் அழிவுகளையும் மிக விரைவில் நாம் காணத்தான் போகிறோம்.
வேறு யாருமல்ல, தினமும் யாழ்.பஸ் நிலையத்துக்கு வந்து போகும் நாம் எல்லாரும்தான் அந்த மக்கள்மீது கொடும் நஞ்சை வீசி எறிந்து விட்டுப் போகிறோம். ஆகக் குறைந்தபட்சம் ஆளுக்கொரு பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலை அந்த மக்களின்மேல் எறிந்துவிட்டுப் போகிறோம்.
தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக